தொலைக்காட்சி நோயர்களுக்கு...
Tuesday, May 10, 2005
தகவல் தொழில்நுட்பம் தந்த தலைவலிகளில் தொலைகாட்சியும் ஒன்று என சொல்வோர்களுடன் நானும் சேர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன். உலக தொலைக் காட்சிகள் தங்கள் பாணியில் நிகழ்சிகளை நடத்திக் கொண்டு நாளொரு வண்ணம் புதுப் புது நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் பொழுது போக்கு சாதனமாக இருந்து வருகின்றன.
ஆனால், தமிழக தொலைக்காட்சி நேயர்களின் அல்லது அல்லது நோயர்களின் பாடுதான் பாவம். சன் டீவியும் ஜெயா டீவியும் மாறி மாறி நேயர்களை குழப்பி வருகின்றன. விளம்பரங்களுக் கிடையில் வரும் செய்திகளை விரும்பி பார்ப்பவர்களில் நானும் ஒருவன். சன், ஜெயா இரண்டையும் மாறி மாறி பார்த்து விட்டு மண்டை காஞ்சதுதான் மிச்சம்.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் செய்திகள் என்ற பெயரில் ஒருவர்மீது ஒருவர் மாறி மாறி குற்றச் சாட்டுக்களை சொல்லி கொள்கின்றனர். இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்து கொள்ளலாம். அதுக்காக இப்படியா?
இரு கட்சியினரும் கள்ள ஓட்டு போடவும் கலவரம் உண்டு பண்ணவும் அடியாட்களையும் குண்டர்களையும் திருமண மண்டபங்களில் தங்க வைத்திருப்பதாக இரு செய்திகளுமே சொல்கின்றன. இன்னும் ஒருபடி மேலே போய் திமுகவினர் கள்ள ஓட்டு போட 8-10 வயது சிறுவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திருப்பதாக திரும்பத் திரும்ப ஜெயா டீவி சொல்கிறது. கொஞ்சமாவது லாஜிக் வேண்டாம்?
பொய் செய்திகளை விடுங்க, சாதாரன செய்திகளுக்கிடையில் என்ன படிக்கலாம், சிறப்புக் கண்ணோட்டம் போன்ற நிகழ்சிகள் வேறு. இவை பயணுள்ளவையாக இருந்தாலும் அதற்கான நேரம் ஒதுக்கி சொல்ல வேண்டியதுதானே. அரை மணி நேரமும் ஏதாவது செய்தி சொல்லவேண்டும் என்று யார் அழுதது? உருப்படியான செய்தி ஏதும் இல்லாவிட்டால் இருப்பததை மட்டும் சொல்லி வேறு நிகழ்ச்சிய போட வேண்டியதுதானே.
இதாவது பரவாயில்லை சீரியல் அடிமைகளின் நிலைமைதான் ரொம்ப மோசம். சமீபத்தில் சன் டீவியில் ஒளிபரப்பாகும் "கணவருக்காக" தொடர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தன் கணவனுக்காக போராடும் ஒரு அபலைப் பெண்ணின் கதையை சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஏதாவது சஸ்பென்ஸ் வைக்க வேண்டும் என்பதற்காக எதையாவது வைத்து விட்டு மறுநாள் அது கனவு போலவும் நினைத்துப் பார்ப்பது போலவும் காட்டி பார்ப்பவர்களை கேணையனாக்குகிறார்கள்.
இன்னும் எத்தனை சீரியல்களில்தான் ராதிகா தியாகி வேடம் போடப்போகிறார் என்று தெரியவில்லை? இதுவரை நடித்த மூன்று சீரியல்களிலுமே தியாகியாக (சுதந்திர போராட்ட தியாகி அல்ல) பெண்களின் கண்ணீரை வெங்காயம் வர வழைப்பதை விட வரவழைக்கிறார்.
எல்லா சீரியல் கூத்தும் சன் டீவியில் மட்டும்தான் இருக்கிறது ஜெயா டீவியில் இல்லையா என்கிறீர்களா? அந்த சீரியல்களையெல்லாம் யார் பார்க்குறது?
இது அல்லாமல் இந்தியத் தொலைகாட்சிகளில் முதன் முறையாக என்ற அறிவிப்புடன் டப்பா தமிழ் படத்தை ஒளி பரப்புகிறார்கள். எந்த இந்திய தொலைக்காட்சி (அந்தந்த மாநில மொழிகள் படம் தவிர) தமிழ் படத்தை ஒளி பரப்புகிறது? உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்று கூட சொல்லலாம் தானே?
மற்றபடி பெப்சி உமாவிடம் போன் பண்ணுபவர்கள் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, உங்க குரல் ரொம்ப இனிமை, ரொம்ப நாள் முயற்சி செய்து இப்பதான் லைன் கிடைச்சுது என்று சொல்லாமல் இருக்க மாட்டார்கள். பதிலுக்கு உமாவும் ரொம்ப நன்றிங்க என்று சொல்வார் (தமிழ் பண்பாடு?).
சிட்டிபாபு, அர்ச்சனா போன் பண்ணிவிட்டு பேசுபவரின் ஊரிலிருந்து அல்லது பக்கத்து ஊரிலிருந்து பேசுவதாக சொல்லி உதார் விடுவார். பேசுபவரும் அதை நம்பி ஏமாளியாக பேசுவார். யாருமே (மொபைலில்) அழைக்கும் நம்பரை பார்ப்பதில்லையா அல்லது அழைக்கப்படும் நேயரிடம் கால்லர் ஐடி வசதி இல்லையா? ஹி..ஹி.. கோக்கரக்கோ குமாங்கோ.
மற்றபடி வேறு என்ன? பதில் போடுங்க அல்லது நீங்களும் சேர்ந்து தாளிங்க.. நன்றி. நேயர்களே! வாணாக்கம்!
Read more...