கொடுத்து வைத்த சிறைக்கைதிகள்
Wednesday, November 21, 2007
படத்திலிருக்கும் கட்டிடம் IT பார்க் அல்லது ஐந்து நட்சத்திர விடுதி என்று நினைத்து விடாதீர்கள். குளுகுளு மலைப்பிரதேசத்தில் இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் சிறைச்சாலை. இதில் அடைக்கப்பட்டுள்ள ??? கைதிகள் கூடைப்பந்து,டேபில் டென்னிஸ் ஆகிய விளையாட்டுக்களுடன் உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம் வசதியும் உள்ளது.
குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் நம்நாட்டு சிறைச்சாலைகளில் கொசுக்கடி, மூட்டைப்பூச்சி இவற்றுடன் அரசியல் நடத்த முடியாது என்பதால் 'நெஞ்சுவலி' என்று டாக்டரிடம் சர்டிபிகேட் வாங்கி கொஞ்ச நாட்கள் ஆஸ்பத்திரியில் ஓய்வெடுப்பார்கள். இதேபோன்ற சிறைச்சாலைகளை நம் நாட்டிலும் கட்டினால் இனிமேல் போலியாக நெஞ்சுவலி நாடகம் ஆட மாட்டார்கள்.
ஆஸ்திரியா நாட்டு சிறையைப் பார்த்ததும் தோன்றிய சில கற்பனை உரையாடல்கள்.
=======
நீதிபதி: குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத காரணத்தினால், கபாலியை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது.
கபாலி: என்னைக் கைவிட்டுடாதீங்க எஜமான். வேற ஏதாவது செக்சனில் தண்டனை கொடுக்க முடியாமன்னு பாருங்க சாமி.
=======
பக்கிரி: கபாலி ஸ்டார் ஹோட்டல்ல தங்கனும்னு ஆசைப்பட்டியே. போயி ரெண்டு எடத்துல பிக்பாக்கெட் அடிச்சிட்டு வா. ஒரு பதினைஞ்சு நாளைக்கு ஜாலியா உள்ளே போய்ட்டு வரலாம்.
=======
நீதிபதி: மன்னாரு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மூன்று மாதம் சிறைத்தண்டனையும் ஐயாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேற்கொண்டு மூன்று மாதம் சிறையில் கழிக்க வேண்டும்.
மன்னாரு: அபராதம் கட்டப் பணமில்லை எஜமான். டோட்டலா ஒரு வருசம் ஜெயில்லேயே போட்டுங்க சந்தோசமா இருப்பேன்.
========