Showing posts with label வெறிநாய். Show all posts
Showing posts with label வெறிநாய். Show all posts

மேனகா காந்தியை தெருநாய் கடிக்கட்டும்!

Wednesday, April 11, 2007

நேற்று தினமணியில் சில 'கடி'தங்கள் வந்திருந்தன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும்!

நாய்க்கடியால் அவதி
தெரு நாயால் "வெறிநோய்' - கு. கணேசன் கட்டுரை (30-3-07) படித்தேன்.
நம்முடைய அலட்சியப் போக்கால் அனுபவிக்கும் துன்பங்களில் தெருநாய்க் கடி மோசமானது. நாள்தோறும் நாய், குரங்கு, பன்றி, கொசு ஆகியவற்றின் பிடியில் மக்கள் சிக்கி அல்லல்படுகின்றனர்.

நாய் வளர்ப்பில் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பிட்ட சில மாதங்களிலேயே அவற்றைக் கண்காணிப்பு செய்யாமல் வெளியே அலைய விடுகின்றனர். இவற்றுடன் எந்த அரவணைப்பும், பாதுகாப்பும் இல்லாத தெருநாய்களும் சேர்ந்து கொள்கின்றன. இந்தக் கூட்டணி முடிந்தவரை மக்களை விரட்டி, மிரட்டி நடுங்கச் செய்து வருகின்றன.

தெருவில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் ஒழிப்பில் அந்தந்தத் தெருவைச் சார்ந்தவர்கள் விழிப்புணர்வுடன் ஈடுபட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளோடு தொடர்பு கொண்டு வெறி நாய்களை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும். அரசு சார்ந்த மருத்துவமனைகள் வெறிநாய் தடுப்பூசி மருந்துகளை போதிய அளவுக்கு கையிருப்பில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.
கோ. தமிழரசன், செஞ்சி.
------------------------------------
தீவிர நடவடிக்கை
வெறிநோயால் இறப்பவர்கள் உலகிலேயே 80 சதவீதம் இந்தியாவில்தான் என்றால் அறிவியல் தொழில் நுட்பத்தில் உலகில் முன்னேறிய ஆறாவது நாடு என்பதில் அர்த்தமில்லை.

உலக அளவில் இந்தியாவில் பல பணக்காரர்கள் இருந்து என்ன பயன்? வெறும் தெருநாயைக் கூட ஒழித்து "வெறிநோய்' போக்காத நாடு ஒரு நாடா என எண்ணத் தோன்றவில்லையா?

உள்ளாட்சி நிர்வாகம் பல்வேறு பணிகளைக் கண்காணிப்பதுபோல தெரு நாய்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் விலை மதிப்பில்லாத மனித உயிர்களை "வெறிநோயிடமிருந்து' காப்பாற்ற முடியும்.

ஆ. கோவிந்தராசலு, புதுச்சேரி.
----------------------------------------
ஏற்க இயலாது

பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் என்ற பெயரில், நாய்களைத் தெருக்களில் திரிய விடுவது, உயிர்க் கருணையாக ஏற்றுக்கொள்ள இயலாது. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான உயிர்கள் மனிதர்களின் வயிற்றுக்குள் உணவாகச் செல்கின்றன. இந்நிலையில், பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் எங்கே உள்ளது? என்ன செய்கிறது?

தெருக்களில் அலைந்து திரியும் நாங்கள், விலைமதிக்க முடியாத மனித உயிர்களைப் பறிக்க இடந்தரலாமா? புதுச்சேரியில் அன்றைய பிரெஞ்சு ஆட்சி, தெருக்களில் அலைந்து திரியும் நாய்களைப் பிடித்துக் கொன்று மனித உயிர்களைக் காப்பாற்றி வந்தது. ஆனால் இன்றோ தெருநாய்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து வருகின்றோம்.

வை. பாவாடை, புதுச்சேரி.
---------------------------------
எது ஜீவகாருண்யம்?
எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானியாகவோ, தொழில்நுட்ப வல்லுநராகவோ, மருத்துவ மேதையாகவோ வரவேண்டிய இளஞ்சிறார்களை வெறி நாய்களுக்குப் பலி கொடுப்பது மன்னிக்க முடியாத செயல். உடனடியாக வெறி நாய்களை அழிக்கத் தவறிவிட்டால் வெறிநாய்க் கடியால் இறப்போர்களின் எண்ணிக்கை அதிகமாவதைத் தடுக்க முடியாது.

ஜீவகாருண்யம் பற்றி பேசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மீன், நண்டு, கோழி, ஆடு, மாடு போன்ற விலங்குகளைக் கொன்று குவிக்கிறார்களே உண்பதற்காக, அதை ஏன் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகின்றன? இந்த இனங்களுக்கு மட்டும் உயிர்கள் இல்லையா?

தொண்டு நிறுவனங்கள் இதைப்பற்றியெல்லாம் கருத்தில்கொள்ளாமல் வாளாவிருந்து விடுகிறதே ஏன்? கட்டுரையாளர் குறிப்பிட்டதுபோல் "வெறிநோய் பிடித்த நாய்களைக் கொல்லும் சட்டத்தை' மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை வெறிநாய்களுக்குப் பலி கொடுப்பது மடமையின் உச்சகட்டம்.

ஆர். பூமிநாதன், சென்னை.
---------------------------------
யார் காரணம்?

வீட்டில் வளர்க்கப்படும் நாய்களால்தான் தெருநாய் உருவாகிறது. தேவையற்ற குட்டிகளைத் தெருவில் கொண்டு வந்து விட்டு விடுகின்றனர் வீட்டில் நாய் வளர்ப்போர்.

வீட்டில் நாய் வளர்ப்போருக்கு வரி விதிக்க வேண்டும். தெரு நாய்க் கடியால் பாதிக்கப்படுவோரின் சிகிச்சைக்கு இந்த நிதியைக் கொடுத்து உதவலாம். கடுமையான நோய்களைப் பரப்பும் கொசுக்களைக் கொல்லும்போது, காண்பிக்கப்படாத மனிதாபிமானம், மரணத்தை ஏற்படும் நாய்களின் மீது மட்டும் காட்டுவது மக்களை ஏமாற்றும் செயல்.

பிராணிகள் நலச் சங்கத்தினர் ஊர்தோறும் சென்று நாய்களைப் பிடித்துப் பராமரிக்கட்டும். வீட்டில் நாய் வளர்ப்போர், அவற்றுக்காக தங்கள் வீட்டில் தனி கழிப்பறைகளைக் கட்டி வைத்திருக்கிறார்களா!

காலை, மாலை நடைப்பயிற்சி என்ற போர்வையில் தெருவுக்கு கூட்டி வந்து குறிப்பாக, விளக்குக் கம்பங்களின் அடியில் நாய்களை விட்டு அசிங்கப்படுத்தும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
------------------------------------------

ஹைதராபாத், ஏப். 10: கல்லூரிக்குத் தேர்வு எழுதச் சென்ற 10 மாணவிகளை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் ஹைதராபாதில் திங்கள்கிழமை நடந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தேர்வைத் தள்ளிவைத்தது.

ஹைதராபாத் கோதி பெண்கள் கல்லூரி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சந்து வழியாக சென்று கொண்டிருந்தபோது தெருநாய்கள் அவர்களைச் சுற்றி வளைத்து கடித்துக் குதறத் தொடங்கின. தகவலறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக நகராட்சி அலுவலகத்திடம் தகவல் தெரிவித்தனர். நக ராட்சி ஊழியர்கள் நாய்களைப் பிடித்துச் சென்றனர்.

நாய்கள் கடித்ததால் காயமடைந்த மாணவிகள் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
------------------------------------
கல்லூரிப் பெண்களை கிண்டல் செய்யும் விடலைப்பசங்களை ஈவ் டீசிங்கில் தண்டிக்கும் அரசே! நாய்களையும் கைது செய்!

பின்குறிப்பு: தலைப்பு நெருடலாக இருக்கிறதே என்று குழம்புபவர்களின் மேலான கவனத்திற்கு! மனிதர்களை விட மிருகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகவே அமைச்சராக இருந்தவர் அன்னை மேனகா காந்தி! அதனால்தான் இப்படி ஒரு தலைப்பு!!!

இப்படிக்கு,

தெருநாய்களிடம் தொடையைக் கொடுத்தவர்கள் சார்பில்,
:-(தொடை நடுங்கியபடி பயத்துடன்:-)
அதிரைக்காரன்

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP