தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்கள் - தினமலரின் இருட்டடிப்பு
Wednesday, June 23, 2010
தினமலர்.காமில் செம்மொழி மாநாட்டுக்காக பிரத்யேக இணையபக்கம் திறந்து, அதில் கோவை-உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்த செய்திகளையும், சிறப்புக் கட்டுரைகளையும் தொகுத்து வழங்குகிறார்கள். நேற்று வெளியான "கம்யூட்டரும் தமிழும்" என்ற கட்டுரையில் தமிழை கணிமைப்படுத்துவதற்குப் பாடுபட்டத் தமிழர்கள் குறித்த தகவல்களில் அதிரை உமர் தம்பி பற்றிய ஒரு குறிப்புகூட இல்லை!
இதுகுறித்து தினமலர் ஆசிரியருக்கு coordinator@dinamalar.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தும் இதுவரை வெளியிடவில்லை. கட்டுரையாக வெளியிடாவிட்டாலும் சம்பந்தப்பட்ட கட்டுரையில் பின்னூட்டமாக அல்லது ஆசிரியர் பின்குறிப்பாக உமர்தம்பி குறித்த தகவலை இணைத்திருக்கலாம். தினமலரிடம் ஊடக தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. அதுவும் முஸ்லிம்கள் குறித்த விசயத்தில் தினமலரின் நேர்மை உலகறிந்தது என்பதால் இனியும் எதிர்பார்க்க முடியாது.
ஆங்கிலம் அறிந்தவர்கள் மட்டுமே கணினியைப் பயன்படுத்தலாம் என்ற நிலைமாறி கணிப்பொறி,கணினி என தமிழாக்கப்பட்டு உலகத் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்து, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் இணையத் தமிழ் மாநாட்டு அரங்கிற்கு "உமர்தம்பி" அரங்கு என்று பெயரிட்டுள்ளனர். தமிழ் கணிமைக்குப் பங்களித்தவர்களுக்கு செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அவர்கள் பெயரால் விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாதங்களாக வலைப்பூ முதல் இணையம், சஞ்சிகை, வானொலி என அனைத்து தரப்பிலும் உலகத் தமிழர்களின் கோரிக்கைக்குரல் ஒலிப்பது தினமலரு மட்டும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
உமர்தம்பி அவர்களின் தமிழ்சேவையை இருட்டடிப்பு செய்ததோடு மட்டுமின்றி, தமிழ்கணிமை வளர்ச்சியில் தினமலர் நிறுனரையும் சந்தடிச்சாக்கில் குறிப்பிட்டு உள்ளது நகைப்பிற்குறியது. தினமலர் ஒருங்குறிக்குமாறி ஓரிரு வருடங்களே ஆகின்றன. மேலும், அது பயன் படுத்திவரும் "லதா" ஒருங்குறி எழுத்துரு சிலவருடங்களுக்கு முன்புதான் செம்மை படுத்தப்பட்டது. ஆனால் உமர்தம்பி அவர்களின் தேனீ வகை இயங்கு எழுத்துருக்கள் 2003 முதலே இணையத்தில் உலா வருகின்றன!
தமிழுக்கு தானமளித்த உமர்தம்பிக்கு தினமலரின் அங்கீகாரம் தேவையில்லை என்றாலும் உண்மையிலேயே தமிழர்கள்மீதும் தமிழ்மீதும் பற்று இருந்தால், தமிழை கணினியில் புகுத்துவதில் முன்னோட்டியாயிருந்த தமிழ் முஸ்லிம்கள் குறித்த தகவலையும் வெளியிட்டிருக்கலாம்.
தினமலர் வகையறாக்களுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக நீசமொழியாக இருந்துவந்த தமிழை வைத்து பிழைப்பு நடக்கும் என்றால் மட்டுமே 'தமிழ்பற்று' தலைதூக்கும். தமிழ் கணிமை வரலாற்றைச் சொல்லும் கட்டுரையின் தலைப்புக்கு "கம்யூட்டரும் தமிழும்"! என்று பெயரிட்டிருப்பதிலிருந்தே தினமலரின் செம்மொழித் தமிழ்பற்று பல்லிளிக்கிறது!
(பி.கு:தினமலருக்கு அனுப்பிய மடல் இன்று மாலைக்குள் வெளியிடப்படாத பட்சத்தில் எமது வலைப்பூவில் வெளியிடப்படும்)
அன்புடன்,
அதிரைக்காரன்