Showing posts with label அணுசக்தி ஒப்பந்தம். Show all posts
Showing posts with label அணுசக்தி ஒப்பந்தம். Show all posts

இருண்ட இந்தியாவே போதும்

Wednesday, July 09, 2008

மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசாங்கம் அமெரிக்காவிற்கு காவடி தூக்கியதால் கம்யூனிஸ்டுகள் காலை வாரி விட்டுள்ள சூழலில் மூட்டுவலிக்கு குமரகத்தில் மசாஜ் எடுத்துக் கொண்டிருந்த சங்கப்பரிவாரக் கிழடுகள் எல்லோரும் டெல்லியில் கூடி, எப்படியாவது ஆட்சி கவிழாதா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

எப்பாடு பட்டாவது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள, கொள்கையைக் காற்றில் பறக்க விடும் உன்னதமான தலைவர்கள் நம் நாட்டில்தான் உள்ளார்கள். "பதவி தோளில் கிடக்கும் துண்டு; ஆனால் கொள்கை இடுப்பில் கட்டியிருக்கும் வேஷ்டி" என்றார் அண்ணா. நம் தேசிய அரசியல்வாதிகள் தற்போது வேஷ்டியைக் காற்றில் பறக்கவிட்டு நிர்வாணமாக துண்டைத் தக்கவைத்துக் கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்!

மன்மோகன் சிங்கும் ஜார்ஜ் புஷ்ஷும் ஜப்பானில் காபி குடித்துக் கொண்டே அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நன்மையானது என்று அறிக்கை விட்டுள்ளார். (ஜார்ஜ் புஷ்ஷின் வளர்ப்பு நாயின் செல்லப் பெயர் இந்தியா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.) பதவிக் காலம் முடிவடைந்தது,போர் குற்றங்கள் மற்றும் படுகொலைகளுக்காக வழக்குகளைச் சந்திக்கப் போகும் ஜார்ஜ் புஷ்ஷிற்கு,இந்தியா மீதிருக்கும் அக்கரையை நினைத்தால் புல்லரிக்கிறது.

பாஜக கூட்டணியினர் இந்தியா ஒளிர்கிறது என போலியான முழக்கத்தை சென்ற தேர்தலில் முன்வைத்ததால் ஆட்சியைப் பறிகொடுத்தைப் போல், அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டினால் கிராமங்களெல்லாம் மின்சக்தி பெற்று இந்தியா ஒளிரும் என்று ஆட்சியைக் காவு கொடுத்தாவது ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மன்மோகன் சிங் முண்டா கட்டி நிற்பது தேவையா?

சேதுக்கால்வாய் திட்டம், சிறுபான்மையினர் இடஒதுக்கீடு போன்ற குறைந்த பட்சசெயல்திட்டங்களைக் கிடப்பில்போட்டு அமெரிக்காவுக்கு,இந்தியாவை நாற்பதாண்டு காலம் அடகுவைக்கத் துடிக்கும் மன்மோகன் சிங் அரசுக்கு முடிவுரை எழுதப்போகும் நேரம், இந்தியாவின் இருண்ட காலத்தின் தொடக்கமாகி விடக்கூடாது!

ஒளியேற்றப் போகிறேனென்று அமெரிக்கா கால்வைத்த எந்த ஒரு நாடுமே உருப்பட்டதாகச் சரித்திரமில்லை. அவனன்றி அணுவும் அசையாது என்று ஆண்டவனை நம்பிக் கொண்டிருப்பவர்களை ஆள்பவர்கள் காப்பாற்றப் போகிறார்களோ இல்லையோ ஆண்டவன் நிச்சயம் காப்பாற்றுவான்!

இதை வைத்து நான் பாஜகவை நான் ஆதரிக்கிறேனோ என்று தவறாகப் புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!.பாஜகவினால் இந்தியா மீண்டும் ஒளிரும் என்று நம்புவதைவிட, புஷ்ஷையே நம்பிவிடலாம்.

அமெரிக்கா உதவியுடன் ஒளிரும் இந்தியாவைவிட, இருண்ட இந்தியாவே எங்களுக்குப் போதும்!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP