ஜார்ஜ் புஷ்'ஷூ'வுக்கும் டோண்டுவுக்கும் கண்டனம்
Sunday, January 04, 2009
எதற்கெடுத்தாலும் கண்டனம் தெரிவிப்பது சிலரின் வாடிக்கையாகி விட்டது. சமீபத்தில் அஸ்ஸாமில் நடந்தக் குண்டு வெடிப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், ஜனாதிபதி பிரதீபா 'பாட்டி'யும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். புத்தாண்டு,பண்டிகை வாழ்த்துக்கள் சொல்வதைப்போல் இதுவும் ஒப்புக்குச் சொல்லப் படுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
வாய்வார்த்தைக் கண்டனங்களால் தீவிரவாதிகள் வெட்கமோ அல்லது வருத்தமோ படப்போவதில்லை! சட்டங்களையும் இறையாண்மையையும் பொருட்படுத்தாது இயங்குபவர்களை இத்தகையக் கண்டனங்கள் ஒன்றும் செய்துவிடாது என்பதால் கண்டனங்கள் எத்தகைய உயர்மட்டத்திலிருந்து வந்தாலும் அதனால் பயனில்லை! மாறாக, நடத்தப்பட்ட பயங்கரவாதங்கள் நாட்டின் உயர்மட்டம்வரை கவனத்தை ஈர்த்துள்ளதைக் கண்டு மென்மேலும் ஊக்கம் அளிக்கக்கூடும் என்பதால் வெறும் கண்டனங்களைப் மட்டும் பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அரசியல்வாதிகள் குண்டுவெடிப்புகளால் உயிர்ப்பலி ஏற்பட்டால் மட்டுமே கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதுவும் வன்மையான கண்டனத்திற்குறியது! கள்ளச்சாராயத்தினால் பலியாகும்போதும் கண்டிக்க முன்வரவேண்டும். உயிர்ப்பலி எந்த ரூபத்திலிருந்தாலும் பாரபட்சமின்றி கண்டிக்க வேண்டும்.
*****
உள்நாட்டு உயிர்ப்பலிகளுக்கு மட்டுமே கண்டனம் தெரிவிக்கும் போக்கும் கண்டனத்திற்குறியது. ஜெயலலிதா அம்மையாரைப்போல் 'எல்லைதாண்டி' கண்டனம் தெரிவிக்கத் தயங்கக்கூடாது. மோடியால் நடத்தப்பட்ட குஜராத் படுகொலைகளைக் கண்டிக்காமல், இஸ்ரேலின் பாலஸ்தீனப்படுகொலைகள் குறித்துக் கண்டனம் தெரிவிப்பதும் கண்டனத்திற்குறியது. படுகொலைகளை ஓல்மர்ட் செய்தாலும் மோடி செய்தாலும் தாட்சன்யமின்றி உடனடியாகக் கண்டிக்கணும்!
பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அத்துமீறலுக்கு எதிராக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருபக்கம் இஸ்ரேலுடன் தூதரக உறவை வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் பாலஸ்தீனர்களுக்காகப் பரிந்து இரட்டைவேடம் போடுவது கண்டிக்கத் தக்கது! தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடும் நயவஞ்சகப் போக்கு மிகவும் கண்டனத்திற்கு உரியது!
மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு ஒபாமா கண்டனம் தெரிவித்தார். ஆனால், காஸா தாக்குதல் குறித்து மௌனம் காத்து வருகிறார்' என்று அரபுக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒபாமாவிடம் கேட்டபோது, மும்பை தாக்குதல் பயங்கரவாதம் தொடர்புடையது, "காஸா தாக்குதல் நாடுகள் தொடர்புடையது" என்று பதிலளித்துள்ளார். என்னே வியாக்கியானம்! ஜார்ஜ் புஷ்'ஷூ'க்குக் கிடைத்தமாதிரி ஒபாமாவுக்கும் ஷூஅபிசேகம் கிடைக்காமல் இருக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் வழக்கம்போல் தோல்வியடைந்துள்ளது! இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் எதுவும் பலனளிக்காது என்பதும் அப்படி நிறைவேறினாலும், அதை ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் அமெரிக்காவிடம் இருக்கும்வரை ஒருபயனும் இல்லை என்பதும் உலகறிந்த உண்மை. ஒன்றுக்கும் உதவாத ஐ.நா சபையில் கண்துடைப்புக் கண்டனத்தீர்மானம் கொண்டுவருவதையும், அதை அமெரிக்கா ஒவ்வொரு முறையும் வீட்டோ கொண்டு ரத்து செய்து விளையாடி மகிழ்வதையும் வன்மையாகக் கண்டனம் செய்கிறேன்.
******************
பின்குறிப்பு: புஷ்ஷூக்குக் கண்டனம் சரி! எதற்கு டோண்டுவையும் கண்டிக்க வேண்டும் என்று யாராவது கேட்டுவிடக்கூடாது என்பதால் கடைசி நான்கு பத்திகளில் டோண்டுவின் அபிமான இஸ்ரேலையும் சேர்த்துள்ளேன்.