மாண்புமிகு நீதிபதிகளுக்குச் சில கேள்விகள்
Tuesday, October 02, 2007
சேது சமுத்திரத் திட்டத்தை துரிதப்படுத்த் வலியுறுத்தி தி.மு.க கூட்டனிக் கட்சிகள் நடத்திய (அக்-1,2007) உண்ணாவிரதப் போராட்டத்தை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளதோடு, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி கலைஞர் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு தயங்கக்கூடாது என்றும் தங்கள் வானளாவிய அதிகாரத்தைக் காட்டியுள்ளனர்.இதனால் பாதியிலேயே உண்ணவிரதம் முடிக்கப்பட்டதாகச் செய்திகளில் அறிந்தோம்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள், "தனி அரசியல் கட்சிகளின் நியாயத்தை விட நாட்டு மக்களின் நலனே முக்கியம்" என்று சொல்லி கடையடைப்புப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தியது! இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளில், எதிர்ப்பைத் தெரிவிக்க காந்திய வழியிலான உண்ணாவிரதப் போராட்டத்தை அங்கீகரித்துள்ளது.
இத்தகைய போராட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு மக்களின் எதிர்ப்பை உணர்த்தும் என்பதை ஆங்கிலேய அரசுக்கு எதிரான காந்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலம் அறிந்தோம்."தனி அரசியல் கட்சிகளின் நியாயத்தைவிட நாட்டு மக்களின் நலனையே மதிப்பதாகச் சொல்லும்" மாண்புமிகு நீதிபதிகளுக்குச் சில கேள்விகள்:
1) பாபர் மஸ்ஜித் வழக்கையும் அதனைத் தொடர்ந்த இடிப்பு வழக்கையும் பல வருடங்களாக இழுத்தடிப்பதும்,
2) கிருஷ்ணா கமிசன் அறிக்கையை முடக்கி வைத்து மென்மேலும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதும்,
3) ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த குஜராத் நரேந்திர மோடிய டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைக்காமலும், அடுத்தடுத்த முறையும் தேர்தலில் மதவெறியைத் தூண்டி மென்மேலும் வெறியூட்டி ஆட்சி செய்ய அனுமதிப்பதும்,
4) பால்தாக்கரே, ப்ரவீன் தொக்காடியா, ராமகோபாலன் போன்றவர்கள் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது விஷம் கக்கி பேச அனுமதிப்பதும்,
5) ஜெயலலிதாவின் மீதான பல்வேறு வழக்குகளையும் சாவகாசமாக விடுதலையாகும் வகையில் இழுத்தடிக்க அனுமதிப்பதும்,
6) சங்காராச்சாரியார் மீதான கொலை வழக்கை விசாரிக்க மறுப்பதும், கிட்டத்தட்ட விடுதலையாக வழிசெய்வதும்,
7) காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு என பல பிரச்சினைகளில் மாநில அரசுகள் தமிழகத்தைத் தொடந்து வஞ்சிக்க அனுமதிப்பதும்,
8) உருப்படாத விசயங்களுக்காகப் பலமுறை பா.ஜ.கவினரால் பாராளு மன்றம் முடக்கப்பட்டதும் etc..etc..ஆகியவையெல்லாம் பொதுமக்களின் நலனுக்கு எதிரானதாகத் தெரியவில்லையா?
அவற்றையெல்லாம் கண்டிக்கவோ அல்லது நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத அரசுகளை கலைக்கவோ பரிந்துரைக்காத உச்சநீதிமன்றம், இந்திய நலனிற்காக தமிழகத்தின் சார்பில் வைக்கப்படும் கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி உண்ணாவிரதம் இருப்பதைத் தடுப்பதோடு ஆட்சி கலைக்கப்படும் என்றும் மிரட்டுவது நியாயமா?
சேது சமுத்திர திட்டத்திற்கு இடையூறாக அறிக்கை விட்டும், ஊர்வலம் நடத்தியும் தமிழகத்தின் அமைதிக்கு அச்சுருத்தல் ஏற்படுத்தும் சங் பரிவாரங்களையும் பொதுமக்களின் நலனே முக்கியம் என்று கண்டிக்க முன்வருமா?
இடஒதுக்கீட்டிற்கு இடையூறாக இருக்கும் ஓரிரு நீதிபதிகள், நூறுகோடி இந்தியப் பிரஜைகளின் நலனுக்கு எதிராக தடுப்பாணை வழங்கி வாழ்வியல் உரிமையை தடுப்பதையும் மான்புமிகு நீதிபதிகள் கண்டிக்கலாமே?தமிழன் என்றாலே எல்லோருக்கும் இளிச்சவாய்ர்கள்தான் போலும்!