Showing posts with label india. Show all posts
Showing posts with label india. Show all posts

சில்லரை வணிகம் Vs. சில்லரை அரசியல்

Tuesday, October 16, 2012

"பணமென்ன மரத்திலா காய்க்கும்?" -  என, பேசாமடந்தை என்று பரிகசிக்கப்பட்ட நமது பிரதமரே வெகுண்டெழும் அளவு "சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி" என்ற மத்திய அரசின் முடிவு குறித்த  விவாதங்கள் தேசிய அளவில்  எழுந்துள்ளன. இதன் பின்னணியில் சமூக,பொருளாதார காரணங்கள், புள்ளிவிபர ஒப்பீடுகளை எல்லாம் தாண்டி அரசியல் லாபநட்டக் கணக்கீடுகளே பிரதான காரணமாக இருக்கின்றன

அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளால் எதிர்கட்சிகளின் வசவுக்கு ஆளாகி நெருக்கடியில் தவிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, வரும் 2012 குளிர்கால கூட்டத்தொடரில் பெருத்த எதிர்ப்பைச் சந்திக்குமென்று எதிர் பார்க்கப்படுகிறது.இந்நிலையில் குஜராத் சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு வசதியாக, காங்கிரஸைப் பலவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு என்றால்,காங்கிரஸுடன் கூட்டணிவைப்பதுதவிர வேறு வழியில்லாத கம்யூனிஸ்டுகளுக்கும் காங்கிரஸின் பலவீனம் எதிர்கால பேரங்களுக்கு வசதியாக இருக்கும். இவையன்றி திமுக, சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கு மூக்கணாங்கயிறு போட்டு வைத்துக் கடந்த முறை ஒதுக்கிய இடங்களையேனும் பெறமுடியும் என்ற கணக்கீடு.

இவற்றையெல்லாம் மறைத்து வைத்து,மக்கள் நலன் என்ற பெயரால் இருதரப்பினராலும் வைக்கப்படும் வெவ்வேறான வாதங்களால் பாமரர்கள் மட்டுமின்றி நன்குபடித்தவர்களும் குழம்பியுள்ளனர். ஆள்பவர்களால் சொல்லப்படும் ஆசை வார்த்தைகளும்,எதிர்ப்பாளர்களால் விதைக்கப்படும் அதீதஅச்சமும் நியாயமானவையா,   நாட்டு நலனுக்கு உகந்ததா என்று தெளிவுபெறும் நோக்கில் இருதரப்பு வாதங்களையும் அலசுவோம்.

உலகமயப் பொருளாதார முன்னெடுப்புகளைக் கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்படுத்தி 2020 ஆம் ஆண்டிற்குள் வல்லரசு நாடுகளில் ஒன்றாகிவிட வேண்டும் என, பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டி, நமது அண்டை நாடான சீனாவைப் போன்று 'சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை' அனுமதிப்பது என்ற முடிவு கடந்த செப்டம்பரில் மத்திய அரசால் உறுதியாக அறிவிக்கப்பட்டது.மின்சாரம், போக்குவரத்து மற்றும் சில்லரை வணிகத்திலும் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது என்ற முடிவில், சில்லரை வணிகத்திற்கு 51% அனுமதி வழங்கியது மட்டுமே எதிர்கட்சிகளில் எதிர்ப்புக்கு இலக்காகியுள்ளது.

'சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடை அனுமதிப்பது' என்ற மத்திய அரசின் முடிவு 2002 ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறனால் பரிந்துரைக்கப்பட்டது. அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதால் ரியல் எஸ்டேட்,குளிர்பதன சேமிப்பு (Refrigiration And Storage)  மற்றும் போக்குவரத்து  போன்ற துறைகள் வளர்ச்சியடைந்து,உள்நாட்டுச் சிறுதொழில் உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளும் பெருகும். மேலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து,சர்வதேசச் சந்தைப் போட்டிகளால் விலை குறைந்து நுகர்வோர் பெரிதும் பயன்பெறுவர்" என்பதால் சில்லரை வணிகத்தில் 100% நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது! (சுட்டி-1)

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை சீனா 1992  ஆம் ஆண்டிலும்,  பிரேஸில், மெக்ஸிகோ, அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் 1994 ஆம் ஆண்டிலும்,கொரியா 1996 ஆம் ஆண்டிலும்,தாய்லாந்து 1997 ஆம் ஆண்டிலும் இந்தோனேசியா 1998 ஆம் ஆண்டிலும் அனுமதித்துள்ளன.இவற்றில் ஓரிரு நாடுகளைத்தவிர ஏனைய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. நமது அண்டை நாடான சீனா,ராணுவ/ஆயுத தளவாடங்கள் ரீதியாக உலகவல்லாதிக்க அரசாக விளங்கும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிப் பொருளாதார வல்லரசாக விளங்குவதற்கு 30 வருடங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்ட வளர்ச்சியே காரணம் என்பதும், சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடை அனுமதித்ததும் முக்கிய காரணம் என்பது பொருளாதார வல்லுனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

உலகின் பல நாடுகளைவிட இந்திய ஏற்றுமதி விகிதம் அதிகமாக இருந்தபோதும்,கனிசமான உள்நாட்டு வரிகளால் அரசுக்கு நிதி வந்தபோதும் ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டையே எந்தக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் நிதியமசைச்சர் சமர்பிக்கிறார்.அரசுக்கு வரும் வருவாய்க்கும் செலவுகளுக்குமுள்ள இடைவெளியே பற்றாக்குறை பட்ஜெட்டுக்குக் காரணம். அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் இலவசங்களால் பெருமளவு அரசுச் செலவினங்கள் அதிகரிக்கின்றன. நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன்மூலம் இந்த இலவசங்களும் மானியங்களும் நிறுத்தப் பட்டு அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

அரசின் அனேக சலுகைகளும்,இலவசங்களும்,மானியங்களும் விவசாயிகள்,மொத்த/சில்லரை வணிகர்கள் போன்ற குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கிடைக்கின்றன. நாட்டின் உற்பத்தியையும் நுகர்வோரின் நலனையும் பேணும் வகையில் அரசு வழங்கும் சலுகைகளின் பலன் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே செல்வதால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் தொடர்கின்றன. இதைச் சரிசெய்ய அரசு எடுக்கும் சில கசப்பான முடிவுகளில் சிலர் பாதிக்கப்பட்டாலும் பெரும்பாலோர் பயனடைவர் எனும்போது இத்தகைய முடிவுகள் தவிர்க்க முடியாதவை

நமது சில்லரை வணிக அமைப்பு இலாப நோக்கம் மட்டுமின்றி,சமூக உறவு,கலாச்சாரம் ஆகிய காரணிகளோடும் தொடர்புள்ளதாகவும்,வெளிநாட்டு நேரடிமுதலீடுகளால் அத்தகைய பாரம்பர்ய வணிக தொடர்புகள் சிதைவடையும் என்றும் எதிர்ப்பாளர்கள் காரணம் சொல்கிறார்கள்.அந்நிய நிறுவனங்களின் வருகையால் ஏற்கனவே அத்தகைய தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்படுவார்கள் என்பதும், வாங்குவோர்- விற்போரிடையேயான சுமூக பிணைப்பு அறுபடும் என்றும், உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டு முதலாளிகள் நிர்யணிக்கும் விலைக்கேவாங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் சொல்லப்படுபவை ஓரளவு உண்மை என்ற போதிலும்,அந்நிய முதலீடுகளால்மட்டுமே இவை சிதையும் என்பது சரியன்று.

நெல், கோதுமை, கரும்பு, வாழை, பருத்தி ஆகிய விவசாய உற்பத்திகளுக்கும்,பால்,மீன் போன்றவற்றுக்கும் விலை நிர்ணயிக்கும் உரிமை உழைப்பவனுக்கில்லை. வாங்குவோருக்கும் விற்போருக்கும் இடையில் இடைத்தரகர் என்ற மூன்றாம் நபர்கள் பலனடைகிறார்கள்.அரசு வழங்கும் விவசாயக் கடன்களுக்கு இயற்கை பொய்க்கும்போதும், சீறும்போதும் இழப்பீடுகளும், கடன்/வட்டியில் தள்ளுபடி போன்ற சலுகைகளும் உண்டு. இடைத்தரகர்களிடம் வாங்கும் கடன்களுக்கு விளைச்சலுக்கு முன்பே கந்துவட்டி பிடித்தம்போக அறுவடைக்குப் பின்பும் உழவனைக் கடனாளியாக்கி உழைத்தவனின் வயிற்றிலடிக்கும் கொடுமைக்காரர்களும் வட்டிகட்ட முடியாமல் தற்கொலைக்குத் துணியும் விவசாயிகளும் 51% அந்நிய முதலீடுகளுக்கு அனுமதிக்கப்பட்டிராத இந்தியாவில்தான் இலட்சக்கணக்கில் உள்ளனர்.

கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரால் இந்தியாவுக்கு வந்தவர்களே நம்மை அடக்கி, அடிமையாக்கி ஆண்டார்கள் என்பதால் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது அந்நியர்களுக்கு நாமே வழிவகுத்துக் கொடுப்பதாகி விடுமென்ற அதீத அச்சம், வரலாறு அறியாதாரின் வாதம் மட்டுமின்றி நமது ராணுவ, நீதிமுறைகளைக் குறைத்து மதிப்பிடும் செயலுமாகும்.அன்றைய அரசியல் சூழல்களுக்கும்,ஆட்சிமுறைக்கும் தற்போதைய நிலைக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. பெண்ணையும் பொன்னையும் மன்னருக்குப் பரிசாக வழங்கிவிட்டால் அரசின் எந்தப்பகுதியையும் தாரை வார்க்கலாம். ஆனால்,தற்காலத்தில் பிரதமருக்குத் தரப்படும் பரிசும்கூட அரசின் சொத்தாகக் கருதப்படும் என்பதால் மீண்டும் அந்நியரிடம் அடிமைப்படுவோம் என்பது அறிவார்ந்த வாதமில்லை.

எதிர்ப்பவர்களின் காரணங்களில் ஒன்றில்கூடவா நியாயமில்லை என்ற ஐயம் எழலாம்;அவற்றை மறுக்கவில்லை. ஆனால், முறையான சட்டங்களியற்றி, சொல்லப்படும் காரணங்கள் அனைத்தையும் களைய முடியும் என்பதையும் மறந்து விடுகிறோம். மக்கள் நலனுக்காகவே எதிர்க்கிறார்கள் என்பதும் சரியில்லை. ஏனெனில், கூடங்குளம் அணு உலையை தீவிரமாக எதிர்க்கும் அப்பகுதி மக்களின் நலனை பொருட்படுத்தாதவர்கள்தாம் தற்போது மக்கள் நலன் குறித்துக் கவலைப்படுகிறார்கள்!

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளால் 4 -7% இருக்கும் சில்லரை வணிகர்களைவிட அல்லது இதனால் நேரடியாகப்  பயனடைந்து கொண்டிருக்கும் 4 கோடி வணிகர்களைவிட அதிக எண்ணிக்கையுள்ள பொதுமக்கள் பயனடைவர் என்பதே அண்டை நாடுகள் சொல்லும் உண்மை. அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டதால் சீனா எந்த நாட்டுக்கும் அடிமையாகி விடவில்லை என்பதோடு 51% அந்நிய முதலீட்டுக்கும் எஞ்சியுள்ள 49% உள்நாட்டு முதலீட்டுக்கும் இடையேயான வித்தியாசம் 2% மட்டுமே. கடின உழைப்பாலும், அதிகமான ஏற்றுமதியாலும் அந்நிய நிறுவங்களைப் பின்னுக்குத்தள்ள முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.சீனா இதை செயலளவில் நிரூபித்துள்ளது.

உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்ட போதிலும் உலகின் ஒருபகுதியிலுள்ளவர்கள் உணவின்றி இறக்கின்றனர்.  இன்னொரு பகுதியிலோ உண்டது சீரணமாகுமுன்பே மறுவேளை உண்டுகொழுக்கிறார்கள். இவ்விடைவெளியைக் களைய பொருளாதாரச் சமநிலை வேண்டும். விளைச்சலில் பகிர்வு வேண்டும். உழுதவன் வியர்வை நிலத்தில் சொட்டும் முன்பே ஊதியம் வழங்கப்பட வேண்டும். உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் இடைத்தரகர்களும், கந்து வட்டிக் கயவர்களும் ஒழிந்து,நாடு வளம்பெற வேண்டும். 51% அந்நிய முதலீடுகளை அனுமதிக்கும் அரசின் முடிவு எதிர்க்கக்கூடிய ஒன்றன்று என்பதே இப்பதிவின்மூலம் சொல்ல விரும்பும் கருத்து.

ஜெய் அல் ஹிந்த்!

அன்புடன்,
அதிரைக்காரன்

சுட்டிகள்:
1) http://indiatoday.intoday.in/story/fdi-in-retail-sector-nda-bjp-murasoli-maran/1/162218.html
2) http://adirainirubar.blogspot.com/2012/02/blog-post_24.html
3) http://adirainirubar.blogspot.com/2012/10/blog-post_9.html
4) இனிய திசைகள்( அக்டோபர்-2012) - முனைவர் சேமுமு கட்டுரை
5) Wikipedia

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP