Showing posts with label முன்ஜென்மம். Show all posts
Showing posts with label முன்ஜென்மம். Show all posts

மூடநம்பிக்கை வளர்க்கும் முன்ஜென்ம மோசடி!

Wednesday, February 01, 2012

உலகில் இன்று தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாகத் தகவல் தொடர்புகள் சுருங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் அதிகபட்ச துரிதச் செய்தித் தொடர்பாகத் 'தந்தி' எனப்படும் TELEGRAM இருந்து வந்தது. பின்னர் தொலைத் தொடர்பு நுட்பம் வளர்ந்து, தொலைநகல் TELEX,FACSIMILE (இதுவும் FAX என்று சுருங்கி விட்டது!) என்று விரிவடைந்து சில தசாப்தங்கள் கோலோச்சியது.

இந்நிலையில் eMail,Internet என அடுத்த பத்தாண்டுகளில் பரவலடைந்து இன்று குறுஞ்செய்தி (SMS),பல்லூடகச் செய்தி(MMS),WiFi என்று தற்போது நமது உள்ளங்கைகளில் உலகமே அடங்கிவிட்டது. அதாவது அண்டார்டிகாவில் நடப்பதைக் கன்னியாகுமரியிலிருப்பவர் செல்பேசியில் நேரலையாகக் காணமுடியும் என்ற அளவுக்குத் தகவல் தொடர்புகள் சுருங்கி விட்டன!

இந்த அபரிமித தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றிப் பிடித்துக்கொண்டு வானொலி, தொலைக்காட்சிகளும் வளர்ந்து இன்று முப்பரிமாணத்தில் (3D) காட்சிகளைக் காணும் நிலைக்கும் வந்துள்ளன.

எனினும்,இந்தத்தொழில் நுட்ப வளர்ச்சியை சாமானியர் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ,சாமானியர்களை ஏமாற்றிப் பிழைப்பு நடந்தி வரும் சிலர் மிகத் தந்திரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "முன்ஜென்மம்" நிகழ்ச்சி ஏதோ மூக்கு சிந்தவைக்கும் சீரியலாக இருக்குமோ என்று கவனிக்காமலிருந்தேன். நடிகை அபிதாவின் முன்ஜென்மம் குறித்த நிகழ்ச்சியை யதார்த்தமாக நேரிட்டது. அதில்,முன்ஜென்மம் குறித்து பரிசோதிப்பவர் டாக்டர் வேதமாலிகா PAST LIFE THERAPIST?! என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.

கையில் மந்திரக்கோல் இல்லாத குறைதான்! கிட்டத்தட்ட நவீன சூனியக்காரி ரேஞ்சில் முன்ஜென்மம் குறித்து கதையளக்கிறார்.சுருக்கமாக, இதில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் முந்தைய பிறவியில் (?) என்னவாக இருந்தார்கள் என்று ஸ்டுடியோ அறைக்குள் அவர்களை ஆழ்நிலை உறக்கத்தில் ஆழ்த்தி, ஸ்க்ரிப்டில் உள்ள உளரலின் அடிப்படையில் அவர்களது முன்ஜென்ம பிறவி குறித்து கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு மனம்போன போக்கில் எந்தத் தடுமாற்றமுமின்றி நிகழ்ச்சியை நடத்துகிறார்!

மைக் கிடைத்தாலே வார்த்தை ஜாலம்காட்டி ஓட்டுவாங்கும் அரசியல்வாதிகளை எல்லாம் மிஞ்சும் வகையில் இந்நிகழ்ச்சியில் மானாவாரியாகக் கதையளக்கிறார்கள். நான் பார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரை சலூன் கடையில் சவரம் செய்யும் நாற்காலியில் படுக்க வைத்து கண்களை மூடச்செய்து, சில கேள்விகளைக் கேட்கிறார். நாற்காலியில் அமர்ந்துள்ளவர் அரைமயக்க நிலையில்? ஏதேதோ சொல்கிறார். அவர் சொல்லும் பதில்களையும் டாக்டர் வேதமாலிகாவின் கேள்விகளையும் தனித்தனியே கேட்டால் 100% இருவரும் உளறல் பேர்வழிகள் என்று சொல்லலாம். உதாரணமாக,

கேள்வி:நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? (நாற்காலியில் கண்ணை மூடிபடுத்து இருக்கிறார்)

பதில்:ஒரு காட்டில் இருக்கிறேன்.என்னைச்சுற்றி மரங்கள் உள்ளன.அருகில் அருவி உள்ளது (குளிர்சாதனம் பொருத்தப்பட்ட ஒளிப்பதிவு அறையில் இருக்கிறார்)

கேள்வி: வெரிகுட்! என்ன மரம் உள்ளது? (அடிப்பாவி!)

பதில் : (கொஞ்சம் இடைவெளி விட்டு) மாமரம்! (விஜய் ஸ்டூடியோவில் மாமரமே கிடையாது :)

கேள்வி: நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்? (இந்த லொள்ளுதானே வாணாங்கறது!)

பதில் : கிளியாக இருக்கிறேன்! (சாதாரணமாக பொண்ணு கிளிமாதிரி என்று சொல்வது வேறுவிசயம்!)

கேள்வி: ஒகே! உங்கள் (கிளியின்) உருவம் எந்த அளவில் உள்ளது?
பதில் : ம்..ம்...புறா அளவுக்கு உள்ளது! (அடேங்கொப்பா!)

இடையில் தொடரும் போட்டுவிட்டு ஓரிரு விளம்பரத்தைக் காட்டிவிட்டு நிகழ்ச்சி மீண்டும் தொடங்குகிறது.இதை பில்டப் செய்து இயக்கிக் கொண்டிருக்கும் நடிகர் அஜய் ரத்னம்,அபிதாவுக்கு பரிசு கொடுக்கிறார். அதைப் பிரித்துப் பார்த்தால் "கொஞ்சும் கிளிகள்" பொம்மை உள்ளது!

இப்படியாக ஒருவழியாக நிகழ்ச்சியை ஒப்பேற்றுகிறார்கள்.
மொத்த நிகழ்ச்சியையும் பார்த்தால் கெளரவம் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சொல்வதுபோல் கிளிக்கு ரெக்க முளைச்சிடுச்சுல்ல! அதான் பறந்துபோச்சு!என்று சொல்லக்கூடும் என்பதால் நிகழ்ச்சி குறித்த வர்ணனைகளை இத்தோடு விட்டுவிடுவோம்.

மனிதர்களில் உயர்ந்தவர்-தாழ்ந்தவர் பேதம் வளர்க்கும் மனுதர்ம கோட்பாட்டை சிலர் பற்றிப் பிடித்துக் கொண்டுள்ளனர்.அதாவது மனிதர்கள் (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான இந்தியர்கள்!) நான்கு வகைப்படுவர் என்றும், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் சொல்லப்பட்டு முறையே பிராமனர், க்ஷத்திரியர், வைசியர் என்று தரம்பிரிக்கப்பட்டுக் கடைநிலை இழிபிறப்பாக சூத்திரர் என்று பெரும்பான்மையினர் மக்கள்மீதான நச்சுக் கருத்துருவாக்கம், பெரியார், அம்பேத்கர் முதல் பல தலைவர்களின் எழுச்சியுரைகளுக்குப் பிறகு ஓரளவு ஓய்ந்துள்ளது.

தற்போது, விஜய் டீவி நடத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் இந்த நச்சுக்கருத்து புதிய வடிவங்களில் விதைக்கப்படுகிறதோ என்று கவலை எழுகிறது.இந்நிகழ்ச்சியை வேறுகோணத்தில் அணுகினால், நால்வருணக் கோட்பாட்டை விடவும் மோசமான கருத்தை விதைக்கிறது என்பது விளங்கும். அதாவது மனுதர்ம வருணாசிரமம், மனிதர்களை மனிதர்களாகவே சொல்கிறது; ஆனால், முன்ஜென்மம் நிகழ்ச்சியில் மனிதர்களைக் கிளி, எலி என்று மனம்போன போக்கில் எவ்விதச் சான்றுகளும் இல்லாமல் யூகத்தின் அடிப்படையிலான வாதங்கள்மூலம் இழிவு படுத்துகிறார்கள்.

யூதம்.கிறிஸ்தவம் மற்று இந்து மதபுராணங்களிலும் இவ்வாறாகச் சொல்லப்பட்டுள்ளதாக முன்னுரையை நிகழ்ச்சி நடத்தும் அஜய் ரத்தினம் சொன்னதோடு குர்ஆனிலும் சொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லி குர்ஆன் வசனத்தையும் பின்னணியில் காட்டுகிறார்கள். உண்மையில் மனிதர்கள் அனைவருமே இவ்வுலகில் மரித்தபிறகு மறுமை எனும் மறுஜென்மம் எடுப்பார்கள் என்றும், இவ்வுலகில் என்னவாக இருந்தார்களோ அவ்வாறே மறுமையிலும் எழுப்பப்பட்டு, நியாயத் தீர்ப்பு வழங்கப்படும் என்றே குர்ஆன் சொல்கிறது.

இவ்வுலகில் செய்த நன்மை-தீமைகளுக்கான கூலிமறுமையில் வழங்கப்படும் என்று சொல்லும் குர்ஆனில், முன்ஜென்மம் என்பதாக சொல்லப்படவே இல்லை. நன்மை தீமைகள் எடை போடப்பட்டு கணக்குத் தீர்க்கப்படும் மறுமை வாழ்க்கையை நிகழ்ச்சியின் டைட்டிலுக்காக, மறுஜென்மத்தோடு ஒப்பிட்டு கல்லா கட்ட நினைக்கும் விஜய் டிவியின் அறியாமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.


இந்த நிகழ்ச்சியில் பேசப்படுபவை மருத்துவ ரீதியில் சாத்தியமற்றது. சாதாரணமாக இயற்கை மருத்துவத்தை துணை மருத்துவம் (ALTERNATIVE MEDICINE) என்று பெயரளவுக்கே ஒப்புக் கொண்டுள்ளபோது, இதுபோன்ற நிகழ்ச்சிகள்மூலம் இவ்வுலகில் வாழும் மனிதர்கள் முன்ஜென்மங்களில் பறவைகள், விலங்குகளாக இருந்ததாகச் சொல்வது,தற்போதுள்ள குடும்ப உறவுகளுக்கு எதிரானது. அதாவது தற்போது அப்பாவாக இருப்பவர் முந்தைய ஜென்மத்தில் வேறுஉறவாக இருந்தார் என்று சொல்லி இயற்கையான சமூக கட்டமைப்பை சிதைக்கும் வகையில்தான் நிகழ்ச்சி உள்ளது.

மொத்தத்தில் மூடநம்பிக்கையை வளர்க்கும் நிகழ்ச்சியாகவே விஜய் டீவியின் முன்ஜென்மம் நிகழ்ச்சி உள்ளது. ஒரு கிளியையோ எலியையோ பிடித்துவந்து நாற்காலியில் வைத்து, அது முன்ஜென்மத்தில் என்னவாக இருந்தது என்ற கேள்விக்கு சரியான பதில் சொல்லிவிட்டால் இந்தப் பதிவை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் :)



Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP