Showing posts with label ஆஸ்கார். Show all posts
Showing posts with label ஆஸ்கார். Show all posts

ஆஸ்கார் விருது - அமெரிக்கா வீசிய எலும்புத் துண்டு?

Wednesday, February 25, 2009

நம்நாட்டு பாஸ்மதிக்கோ அல்லது மஞ்சளுக்கோ அமெரிக்க நிறுவனம் ஒன்று ISO தரச்சான்று வழங்கினால் நமக்குப் பெருமையா? ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பதைப் பார்த்து நமது பிரதமர், ஜனாதிபதி, நிதியமைச்சர்,சபாநாயகர்,முதலமைச்சர் என சகலஅரசியல் அதிகார மட்டங்களும் அடித்தட்டு இந்தியனும் ஆஸ்கார் விருது கிடைத்தது குறித்து பெருமைபட்டுக் கொள்கிறார்கள்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, விருது பெற்றது ஒவ்வொரு இந்தியனுக்கும் மகிழ்வைத் தருவதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறியுள்ளார்.தமிழக சட்டசபையில் புகழாரம் சூட்டியதோடு, முன்னாள் நிதியமைச்சரான நமது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இவ்விருதுக்கு வரிவிலக்கு அளிக்கவும் பரிந்துரைக்கபடுமென்று சொல்லி தேசப்பற்றையும் அமெரிக்க மோகத்தையும் வெளிக்காட்டியுள்ளார்.

வளரும் நாடுகளில் இதுபோன்ற அமெரிக்க அங்கீகாரங்களைப் பிரதானப் படுத்தி,சர்வதேச அங்கீகாரமாக மக்களை நம்பவைக்கும் முதலாளித்துவ வணிக யுக்திகளின் ஒரு பகுதியே திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருது. அழகிப்போட்டிகள் மூலம் அழகையும் பெண்மையையும் சந்தைப்படுத்தி வயிறுவளர்த்தது போதாதென்று இந்திய திரைப்படங்களுக்கு விருது வழங்கி மேலும் சுரண்டலுக்கு அடித்தளமாகவே இந்த ஆஸ்கார் விருது வழங்கும் வைபவம் நிகழ்ந்து வருகிறது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் "சர்வதேசத் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு இந்திய தயாரிப்பு விருது பெற்றதும் அதை ஒரு தமிழனும் மலையாளியும் சாதித்திருப்பது உலகளாவிய அங்கீகாரம்தானே" என்றும் சிலர் கேட்கக்கூடும். நுகர்வுப் பொருட்களுக்கு வழங்கப்படும் தரச்சான்றுகள் போல், திரைப்படங்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க தரச்சான்றே ஆஸ்கர் விருது. அவ்வளவுதான்!

நடிகர் கமலாஹாசன் சொல்வதுபோல்,"இது ஒரு உலகத்தரச்சான்றல்ல; இந்திய தரச்சான்றைப்போல் ஆஸ்கார் என்பது அமெரிக்கத் தரச்சான்று. இந்தி(ய) சினிமா,அமெரிக்கா என்ற ஒரு நாட்டில் தயாராகும் படங்களின் தரத்தை எட்டியுள்ளதற்கான சான்றே தவிர ஓர் உலகளாவியத் தரச்சான்று அல்ல".

அமெரிக்கா தரச்சான்று கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நமது இந்திய தயாரிப்புகள் சர்வதேசத் தரத்திற்கு உயர்ந்து பல ஆண்டுகளாகி விட்டன என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?. ஓரிரு வருடங்களுக்குமுன்பு சக்கைபோடுபோட்ட 'லகான்' படத்திற்கும் ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்கத் திரைப்படத்திற்கு நம்நாட்டு ஃபிலிம்பேர் விருது கிடைத்தால் அமெரிக்கர்கள் பெருமையாகக் கருதுவார்களா? மாட்டார்கள். பிறகு ஏன் நமக்கு வெறும் பெருமை? அமெரிக்காவின் அங்கீகாரத்திற்காக நம் அருமை பெருமைகளை அடகுவைக்கும் கீழ்த்தரமான ஏக்கப் போக்கு மாறவேண்டும். அமெரிக்கா மட்டுமே உலகமா?

அமெரிக்க ஆஸ்கார் விருது கிடைத்தால்தான் அது உலகத்தரமுள்ளதென்ற முதலாளித்துவ மாயை நாட்டின் அடிமட்டக் குடிமகன் முதல் உயர்மட்ட அதிகாரப்பீடம்வரை சினிமா மோகம் வியாபித்திருப்பது உலகிலேயே நமது நாடாகத்தான் இருக்கும்! சந்தடி சாக்கில் ஒபாமாவும் இப்படத்தைக்காண ஆவல் கொண்டிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது நல்ல CHANGE!

விருதுபெற்றதும், "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று விழாமேடையில் A.R.ரஹ்மான் தமிழில் பெருமையாகக் குறிப்பிட்டதன்மூலம் தமிழ் மொழிக்கு தற்போதுதான் அங்கீகாரம் கிடைத்திருப்பதுபோல் மகிழ்வது எத்துணை பேதமை?

எவ்வாறாயினும்,எவ்வளவு புகழின் உச்சிக்குச் சென்றாலும் தன்னைவிட புகழுக்குரிய சக்தி ஒன்று உள்ளது என்று நம்பியதோடு மட்டுமின்றி அதை உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் மேடையில் பேசி, திலீப் குமாராக இருந்து A.R.ரஹ்மானாக இஸ்லாத்தின்பால் தன்னை இணைத்துக் கொண்ட இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் தன்னடக்க வெளிப்பாடு நிச்சயம் பாராட்டுக்குரியது.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP