
தஞ்சையின் கடைமடைப் பகுதியிலிருக்கும் United Streets of Adiramapattinam திற்கு அரசுமுறைப் பயணமாக அல்லாமல் தனிப்பட்டப் பயணமாக வந்திருந்த United States of America அதிபர் பாராக் ஒபாமாவுடன் நடந்த நேர்காணல்.
அதிரைக்காரன் : உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி ஒபாமா! உங்கள் ரகசிய வருகையை எதிர்பார்க்கவே இல்லை. யார் உங்களுக்கு இந்த ஐடியா கொடுத்தார்?
ஒபாமா: எல்லாம் உங்கள் வைகோ ஸ்டைல்தான். மன்னார் வளைகுடாவில் வரும்போது தமிழக மீனவர் என்று நினைத்துக் கொண்டு சிங்கள ராணுவம் சுடப்போனார்கள்! மீன்பிடிவலை எதுவும் இல்லாததால் விட்டுட்டார்கள்! சென்ற முறை
ஜார்ஜ் புஷ்ஷுடன் நடந்த உங்களின் நேர்காணலைப் படித்து விட்டு எப்படியும் அதிரைக்கு ஒருமுறையேனும் வர நினைத்திருந்தேன். என் கனவு பலித்து விட்டது. வாருங்கள் வழக்கம்போல் அதே ராஜாமடம் பாலத்தில் காலாற நடந்து கொண்டே பேசலாமா?
அதிரைக்காரன்: போகலாம். அங்கிருக்கும் செக்போஸ்டில் யாரும் உங்களை அடையாளம் கண்டுகொண்டால் விசயம் மீடியாக்காரர்களுக்குத் தெரிந்து விடும். அதனால் பட்டுக்கோட்டையிலிருந்து மல்லிப்பட்டனம் வந்து, அங்கிருந்து ராஜாமடம் பாலத்திற்குச் செல்லலாம்.
ஒபாமா: அப்படியே செய்வோம். (என்று சொல்லி விட்டு நான் கொடுத்த கருப்பு வேட்டியைக் கட்டுகிறார். இடுப்பிலிருந்து வேட்டி நழுவாதிருக்க சிங்கப்பூர் பச்சைபெல்டை இறுக்கிக் கட்டுகிறார். கருப்பு வேட்டி கருப்புச் சட்டையில் ஒபாமா எடுப்பாக ஐயப்ப பக்தர் மாதிரி இருந்தார்.)
அதிரைக்காரன்: அதிரைக்காரர்களுக்கு பெரும்பாலும் வெள்ளை வேட்டிதான் பிடிக்கும். ஒரு CHANGE க்காக இம்முறை கருப்பு வேட்டி!
ஒபாமா: YES. WE CAN CHANGE! கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு!அக்கும் ஜுக்கும்! (ஆடிக்காட்டுகிறார். நல்லவேளை இடுப்பில் பெல்டை இறுக்கமாகக் கட்டியிருந்தார்!)
அதிரைக்காரன்: ஒருவழியாய் வெள்ளை மாளிகைக்குள் கருப்பு ஆடு புகுந்து விட்டது!
ஒபாமா: மன்னிக்கவும். நான் கருப்பு ஆள். கருப்பு ஆடல்ல. முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை வேண்டுமானால் கருப்பு ஆடு எனலாம்.
அதிரைக்காரன்: ஜார்ஜ் புஷ்ஷை கருப்பு ஆடு என்று சொல்ல முடியாது. கருநாகம் என்று சொல்லலாம். சரி..சரி விசயத்துக்குப் போகலாம். வெள்ளை மாளிகையை எப்போது "கருப்பு மாளிகை"எனப்பெயர் மாற்றப் போகிறீர்கள்?
ஒபாமா: அட! நல்ல ஐடியாவாக இருக்கிறதே. நோட் பண்ணிக்கிறேன். ஆமா திடீரென இப்படிப் பெயர் மாற்றினால் வெள்ளையர்களுக்குக் கோபம் வந்து விடுமே. அதை எப்படிச் சமாளிப்பது?
அதிரைக்காரன்: எங்கள் நாடாக இருந்தால் வாஸ்து கீஸ்து என்று சொல்லி சமாளிக்கலாம். இரானிலிருந்து இரவில் தாக்குதல் நடத்தப்போவதாக FBI இடமிருந்து தகவல் வந்துள்ளது, கருப்பாக இருந்தால் இரவில் அடையாளம் தெரியாது என்று சொல்லிப் பாருங்கள்!
ஒபாமா: கொஞ்சம் கஷ்டம்தான். எதற்கும் CNN மற்றும் FOX சேனலில் இது குறித்து செய்தியை முன்கூட்டியே பரப்புவோம். தினமலருக்கும் மறக்காமச் சொல்லிடனும்.
அதிரைக்காரன்: கவலையே படாதீங்க. இந்தச் செய்தி அமெரிக்காவில் வெளியாகும் முன்பே தினமலரில் வந்துடும். அப்படித்தால் எங்கள் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புச் செய்திகளை முந்திக் கொண்டு தந்ததில் தினமலருக்கு ஈடில்லை. பின்லேடன் பேய்க் கதைகளைச் சொல்லி அமெரிக்க மக்களை நீங்களும் மிரட்டப்போகிறீர்களா? அல்லது கைவிட்டு விடப்போகிறீர்களா ஒபாமா?
ஒபாமா: பின்லேடன் டெமாக்ரடிக்னருக்கு எப்பவுமே நண்பன்தான் என்பதை மறக்கவில்லை. ரஷ்யாவுக்கு ஆப்படிக்க எங்களுக்கு உதவியவர் அல்லவா!
அதிரைக்காரன்: உங்கள் நாட்டு இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தவர் என்று சொல்லப்படுகிறதே!
ஒபாமா: 9/11 சம்பவமே நடக்கவில்லை.எல்லாம் COMPUTER GRAPHICS என்று மக்களை நம்ப வைப்பதில் அதிகம் சிரமமிருக்காது என்று நம்புகிறேன். ஹாலிவுட்ல நாலு சினிமா எடுத்துவிட்டா மக்கள் பழசை மறந்துடுவாங்க.
அதிரைக்காரன்: அமெரிக்கர்களிடம் நாங்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
ஒபாமா: அமெரிக்கர்களிடம் இந்தியர்கள் போதுமான அளவு கற்றுள்ளார்கள். அதனால்தான் அவர்களைத் திருப்பி அனுப்பும் "இந்தியனே வெளியேறு" திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த உள்ளோம்.
அதிரைக்காரன்: செய்யப்போவது யார்? எங்கள் நாட்டு பால் தாக்கரேயை வேண்டுமானால் கூட்டிச் செல்லுங்களேன். பிராந்திய வெறி ஸ்பெசலிஷ்ட் அவர்.
ஒபாமா: தேவையில்லை.அமெரிக்கர்களிடம் இதைச் சொல்லித்தான் CHANGE என்று பீலா விட்டுள்ளோம். அதை வைத்து 1-2 வருஷத்தை ஓட்டலாம் என்றும் திட்டம் உள்ளது. பார்ப்போம்.
அதிரைக்காரன்: சொந்த நாட்டு மக்களையே எரிகணைவீசிக் கொல்லும் ராஜ பக்சே குறித்து உங்கள் கருத்து என்ன?
ஒபாமா: மிகவும் கண்டிக்கத் தக்கது. சொந்த நாட்டு மக்கள்மீது குண்டுவீசக் கூடாது.
அதிரைக்காரன்: ஆனால் அடுத்த நாட்டு மக்கள்மீது வீசுவீர்கள்! இல்லையா?
ஒபாமா: COOL...COOL..புஷ்ஷின் தவறான வழிகாட்டுதலால் அவ்வாறு நடந்து விட்டது. ஏன் 9/11 கோபுரத் தகர்ப்பே எங்கள் அதிபர் ஏற்பாட்டின் பேரில்தான் நடந்தது என்றும் சொன்னோமே. இராக்கிற்கு எங்கள் ராணுவ வீரர்களை அனுப்பி சொந்த நாட்டு வீரர்களையே பழி கொடுக்கவில்லையா? புஷ்ஷின் தவறுகளைச் CHANGE பண்ணவே மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
அதிரைக்காரன்: புஷ் மீது விசாரனைக் கமிஷன் ஏதும் அமைப்பீர்களா?
ஒபாமா: அத்தகைய திட்டம் எதுவும் இப்போதைக்கில்லை. நெருக்கடியான சூழலில் ரிபப்ளிகன்கள் ஒத்துழைக்கா விட்டால் அதைச் செய்யவும் தயங்க மாட்டோம்.
அதிரைக்காரன்: எங்கள் நாட்டில் கார்பைடு தொழிற்சாலையில் அணுக்கசிவு மூலம் ஆயிரக்கணக்கான மக்களைக்கொன்ற ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இருக்கிறதா?
ஒபாமா: பழசைக் கிளறும் பழமைவாதியாக இருக்காதீர்கள்.
அதிரைக்காரன்: பாலஸ்தீனம், இராக் பிரச்சினைகளைத் தீர்க்க திட்டம் ஏதும் உள்ளதா?
ஒபாமா: பாலஸ்தீனப் பிரச்சினையைவிட இராக் பிரச்சினையே விரைந்து தீர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அங்கிருந்து நிறைய பெட்ரோல் எங்கள் நாட்டிற்கு வரவேண்டியுள்ளது. இராக்கில் டெமக்கரசி இருந்தால்தான் சுதந்திரமாக பெட்ரோல் எடுத்து புஷ்ஷினால் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுகட்டலாம்.
அதிரைக்காரன்: ஆப்கான் பிரச்சினை குறித்து...
ஒபாமா: தற்போதைக்கு பாகிஸ்தானுடன் அவர்களை மோதவிட்டுள்ளோம். இருவரும் பேசி விரைவில் சமாதானத்திற்கு வந்துவிடுவார்கள்.அப்படி வராத பட்சத்தில் பெருந்தலைவர் பில் கிளிண்டனை சமாதானத் தூதுவராக அனுப்பவும் திட்டம் உள்ளது. நல்லதையே நினைப்போம்.
அதிரைக்காரன்: அமெரிக்கப் பொருளாதார மந்தநிலையை எப்படி தீர்ப்பீர்கள்?
ஒபாமா: உலகப் பொருளாதார மந்தநிலையை குறுகிய பார்வையுடன் "அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை" என்று சுருக்காதீர்கள். அமெரிக்கர்கள் சந்தோசமாக இருக்கும்போது உலகமே சந்தோசப்பட்டது. அமெரிக்கர்கள் கவலைப்படும்போது உலகமும் கவலைப்படுவதுதானே நியாயம்?
அதிரைக்காரன்: நன்றி. ஒபாமா. வெள்ளை வேட்டி கட்டிய புஷ்ஷும் சரி. கருப்பு வேட்டி கட்டிய ஒபாமாவும் சரி. எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். அடுத்த நான்கு வருடத்திற்குள் புஷ் செய்த பெருந்தவறுகளை நீங்கள் சரி செய்யாவிட்டால் அமெரிக்கர்கள் விரைவில் சில்லரை(CHANGE)க்கு கையேந்த நேரிடும். அப்புறம், உலகமே CHANGE, WE BELIVE IN என்று உங்களுக்கு எதிராகச் சொல்லக்கூடும். உஷாராக இருங்கள்.