பத்து நிமிடத்தில் ஜாதகம் மாறியது!
Wednesday, November 14, 2007
இப்பதிவிற்கு நீங்கள் எழுதவிருக்கும் நூற்றுக்கணக்கானப் பின்னூட்டங்கள் வெளிவராமல் இருந்தால் தயவு செய்து என்னை யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது! ஏனென்றால் நாளைக்கு (16-11-2007) அன்று துபாயைச் சுனாமி தாக்கும் என்று தமிழக ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்!
முன்பெல்லாம் ஜோதிடர்கள் தொழில்,திருமணம் போன்றவற்றில் வெற்றி கிடைக்குமா? என்று கணித்துச் சொல்லி அப்பாவிகளிடம் காசு பார்த்தார்கள். ஆடு மாடுகள் காணாமல் போனால் வெற்றிலையில் மைதடவிப் பார்த்துக் கண்டுபிடித்துக் கொடுக்கும் பாரம்பர்யமுறைகள் கிளி,எலி ஜோஸ்யமாக முன்னேறியது.கணினி யுகத்தில் கம்ப்யூட்டர் ஜோதிடம் சென்னை மவுண்ட் ரோட்டிலும் ஹை கோர்ட் எதிர்புறமும் சக்கை போடு போட்டது!
போட்டோஷாப் டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே பிரபலங்களுக்கு ஜோதிடம் பார்ப்பதுபோல் பிளாக்& ஒயிட் போட்டோக்களை பிரேம் போட்டு மதுரையிலிருந்தும் கோவையிலிருந்தும் பலரை கோலிவுட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் இந்த ஜோதிடர்கள். தற்போதெல்லாம் இத்தகைய முச்சந்தி ஜோதிடர்களைக் காண முடியவில்லை.
மக்கள் அறியாமையில் இருந்த காலங்களில் அவர்களின் அச்சங்களையும் ஐயங்களையும் முதலீடாக வைத்து 'ஜோதிடக் கணிப்பு' என்ற பீலா விட்டு காசு பார்த்தார்கள். நாளாவட்டத்தில் அவர்களின் கணிப்புகள் வெறும் கற்பனைகள் என்பதைப் புரிந்து கொண்ட பிறகு சீவலப்புரி ஜோதிட சிகாமணிகள் தினத்தந்தியின் இலவச இணைப்புக்கு மட்டுமே கணித்துச் சொல்கிறார்கள்!
காலேஜில் படிக்கும்போது ஒரு ஜோதிடரிடம் நண்பர்களுடன் நானும் நாடி ஜோதிடம் பார்த்தேன். பெயர் கேட்டு விட்டு கையைப் பிடித்துக் கொண்டே என் ஜாதகத்தைப் 'புட்டு'ப் 'புட்டு' வைத்தார். (மலையாள ஜோதிடரோ?) கும்பலாக கைநீட்டியதால் ஒவ்வொருவராகக் கணித்துச் சொன்னார். சற்று நேரம் கழித்து மீண்டும் கை நீட்டினேன். பெயரைக் கேட்டார். உண்மையான பெயரைச் சொல்லாமல் 'முருகன்' என்று சொன்னேன். பத்து நிமிடத்தில் என் ஜாதகமே மாறியது!
எப்படியோ பதிவின் தலைப்பிற்கான காரணத்தைச் சொல்லியாச்சு! சுனாமி வருவதற்குள் பின்னூட்டம் போட்டு புண்ணியம் தேடிக்கொள்ளவும்.
பின்குறிப்பு: ஒரேயொரு பின்னூட்டம்கூட வரவில்லை என்றால் 'துபாயை சுனாமி தாக்கும் என்று நான் கணித்தது பலித்து விட்டது' என்று மீண்டும் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்து விடுவார். மூடநம்பிக்கையை ஒழிக்கும் முயற்சியாக போலிப்பின்னூட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்! :-)