Showing posts with label சேதுக் கால்வாய். Show all posts
Showing posts with label சேதுக் கால்வாய். Show all posts

ராவணன் பாலம்?

Monday, May 21, 2007



சர்ச்சைக்குறிய ராமர் பாலம் பற்றி பலரும் எழுதியுள்ளார்கள். என் பங்குக்கு நானும் எழுதாவிட்டால் தமிழினத் துரோகியாகும் வாய்ப்புள்ளது. இதுபற்றி அத்வானியுடன் நடந்த நேர்காணல்!


அதிரைக்காரன்: வாங்க அத்வானி ஜி. நல்லா இருக்கீங்களா?


அத்வானி: நமஸ்தே அதிரைக்காரன்ஜி. நல்லா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க?



அதிரைக்காரன்: (உங்கள் ஆட்சி போனதிலிருந்து) நல்லா இருக்கிறேன் ஜி.


அத்வானி: பேட்டியை எங்கு வைத்துக் கொள்வோம்? உங்களூர் ராஜாமடம் பாலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை பேட்டி கண்டிருக்கிறீர்கள் என்று புஷ் பெருமையாகச் சொன்னார். அங்கேயே வைத்துக் கொள்ளலாமா?


அதிரைக்காரன்: இல்லை. உங்களுக்குப் பிடித்த ராமர் பாலத்தில் காலாற நடந்து கொண்டே பேசலாமே.


அத்வானி: (திடுக்கிட்டு) என்ன விளையாடுறீங்களா? ராமர் பாலம் எங்கிருக்கிறது? இருந்தாலும் அதன்மீது எப்படி நடக்க முடியும்?
அதிரைக்காரன்: இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருப்பதாக ஜெயலலிதா அம்மையார், சுப்ரமணியசுவாமி மற்றும் உங்கள் கட்சிக்காரர்கள் சொல்லி வருகிறார்களே?


அத்வானி: அடப்போங்க அதிரைஜி. அவங்களுக்கு அரசியல் பண்ண வேறு விசயம் எதுவும் கிடைக்கவில்லை.அதனால்தான் ராமர் பாலம் விசயத்தைக் கையிலெடுத்துள்ளார்கள்.


அதிரைக்காரன்: அப்படியா! நான் கூட ஏதோ உண்மையான பாலம்தான் இருக்குதோ என்று நினைத்து விட்டேன். ஆமா! ராமர் பாலம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?


அத்வானி: இதென்ன கேள்வி. அவர்களுக்கு எதிராகக்கருத்துச் சொல்ல எனக்கு என்ன செலக்டிவ் அம்னீஷியா? ராமர் பாலம் 17 இலட்சத்து ஐம்பதாயிரம் வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்டது. இந்தியாவின் பாரம்பரிய சின்னங்கள் காக்கப்பட வேண்டும் என்பதால்தான் நாங்களும் ராமர்பாலத்தை இடிக்கக் கூடாது என்கிறோம்.


அதிரைக்காரன்: "இடிக்கக்கூடாது" என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?


அத்வானி: ஆம்! இந்தியாவின் பாரம்பர்யச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.


அதிரைக்காரன்: உங்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதியும் நம்நாட்டின் பாரம்பரிய சின்னம் தானே அதை ஏன் இடித்தீர்கள்?


அத்வானி: பழசை ஏன் கிளருகிறீர்கள்? வேறு ஏதாவது புதுசாகக் கேளுங்கள்.


அதிரைக்காரன்: 400 வருடங்களுக்கு முந்தைய பாபர் மசூதியை 15 வருடங்களுக்கு முன் இடித்தது பழைய விசயமா உங்களுக்கு? 17,50,000 வருடப் பாலம் மட்டும் புதிய விசயமா? நானூறு வருடங்கள் பழையதா 17,50,000 வருடங்கள் பழையதா?


அத்வானி: அதிரைஜி. கடலுக்கடியில் பாலம் இருப்பதை அமெரிக்காவின் நாஸா விண்வெளி மையம் சமீபத்தில் உறுதி படுத்தியுள்ளது. தெரியுமா?


அதிரைக்காரன்: விண்வெளியில் தினமும் புதுசு புதுசா கண்டுபிடிப்பதும், ஏற்கனவே கண்டு பிடித்தவை மறுக்கப்படுவதும் சகஜம். கடலுக்கடியில் இருப்பது ராமர் பாலம்தான் என்று நாஸா சொன்னதாக யார் சொன்னார்?


அத்வானி: பார்த்தீங்களா! நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள். தினமலரில் படங்களுடன் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தார்களே.


அதிரைக்காரன்: நாஸாவின் குறிப்பின்படி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் மணற்திட்டுகள் முன்பு பாலமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றுதானே சொல்லப் பட்டுள்ளது.


அத்வானி: நாஸாவிற்கு ராமாயணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவேதான் மணல் திட்டு என்று புரியாமல் சொல்லியுள்ளார்கள். நாங்கள் அடுத்தமுறை ஆட்சிக்கு வந்தால் நாஸாவில் உள்ள விஞ்ஞானிகள் ராமாயணம் படிக்க ஏற்பாடு செய்வோம். பாரதத்தின் நன்மைக்காகச் சொல்லப்படும் எதையும் ஒப்புக் கொள்ளலாம்.


அதிரைக்காரன்: சேது சமுத்திரத் திட்டத்தால் பாரதத்திற்கு பொருளாதார நன்மைகள் உள்ளதை ஒப்புக் கொள்கிறீர்களா?


அத்வானி: தேவையில்லாமல் அடுத்தவர் மதநம்பிக்கைகளுடன் நீங்கள் விளையாடக்கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு இடைப்பட்ட பாலம் அனுமாரால் கட்டப்பட்டது.

அதிரைக்காரன்: மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலம் ஆங்கிலேயரால் 1911 இல் கட்டப்பட்டது.


கடலில் இயற்கையாக தோன்றி மறையும் மணல் திட்டுகளை பாலம் என்று சொல்வது சரியல்ல. எங்களூர் கடலில்கூட சில வருடங்களுக்கு முன் ராஜாமடம் ஆறு கலக்குமிடத்தில் மணற்திட்டு ஏற்பட்டு சிறிய தீவு போல இருக்கிறது. உலகின் பெரும்பாலான தீவுகள் மணற்திட்டுகளால்தான் ஏற்படுகின்றன.

அத்வானி: அதிரைஜி, கடலியல் பூகோல மாற்றங்களை நீங்கள் அறியாமல் பேசுகிறீர்கள். பல இலட்சம் வருடங்களுக்கு முன் இலங்கை இந்தியாவின் பகுதியாகவே இருந்தது. இடையில் கடல்புகுந்து இலங்கையை தனித்தீவாக மாற்றிவிட்டது.மேலும், பூமித் தட்டுக்கள் நகரும்போது நிலப்பரப்பிலும் கடற்பரப்பிலும் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்பட்ட மாற்றங்களால்தான் நம்நாட்டின் இமயமலை கூட உயர்ந்ததாகச் சொல்கிறார்கள். அப்புறம், உங்களூர் பெயரிலும் "ராம்" என்று என்று உள்ளதால் தேவைப்பட்டால் அதை பிறகு பேசிக்கொள்வோம். :-(

அதிரைக்காரன்: இதே லாஜிக்படி பார்த்தால் நீங்கள் இடித்த பாபர் மசூதி இருந்த பகுதியில் ராமர் பிறந்திருக்க வாய்ப்பில்லைதானே? பூகோல மாற்றங்களால் நில,நீர்ப்பரப்புகள் மாறும் போது, வட இந்தியாவில் சரயு நதியின் ஓட்டமும் ஏன் மாறி இருக்காது? அதன்படி, நீங்கள் சொல்லும் ராமர் பிறந்த இடம் தற்போதைய சரயு நதிக்கரையிலுள்ள அயோத்தி அல்ல என்றுதானே அர்த்தம்.


அத்வானி: நீங்கள் மீண்டும் மீண்டும் பழசைக் கிளறுகிறீர்கள். "ராமர்பாலம் பாதுகாப்பு" இயக்கத்திற்கு வந்துள்ள கரசேவகர்களைச் சந்திக்க வேண்டும். பேட்டியை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.




அதிரைக்காரன்: கரசேவகர்கள் கரத்தில் கடப்பாறையுடன் வந்துள்ளார்களே? வந்திருப்பது இடிக்கவா அல்லது கட்டவா?




அத்வானி: (திடுக்கிட்டு) தவறு நடந்துவிட்டது! "ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கம்" என்றதும் இவர்கள் பாலத்தை இடிக்க வேண்டுமோ என்று தவறாகப் புரிந்துகொண்டு கடப்பாறையுடன் வந்துள்ளார்கள். பேட்டியை சீக்கிரம் முடியுங்கள், அவசரப்பட்டு இடித்து விடபோகிறார்கள்.

***********************************

தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள மூன்று மாநிலங்கள் நதிநீர் ஆதாரங்களைத் தடுக்கிறார்கள். யாராலும் தடுக்க முடியாத கடல்நீர் ஆதாரங்களை வைத்து மாநிலத்தையும் நாட்டையும் முன்னேற்ற முயலும்போது ராமர் பாலம் என்ற பெயரால் சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.




ராமர் பாலத்தால் நன்மையடைந்தவர்கள் ஜெயலலிதாவும் இலங்கையும் மட்டுமே. ராமர் பாலம் எதற்கும் பயன்படாவிட்டாலும் எதிர்காலத்தில் ஜெயலலிதாவுடன் பி.ஜே.பி உறவுப் பாலம் அமைக்க நிச்சயம் பயன்படலாம். தமிழகம் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் இப்பாலத்தை ராவணன் பாலம் என்பதே சரி.



ராமர் சார்! ஒரேயொரு வரம் தரவேண்டும். அதுவும் நம்நாட்டின் முன்னேற்றத்திற்காக மறுக்காமல் தர வேண்டும். அதாவது எங்களுக்காக மீண்டும் ஒரேயொரு முறை பதிமூன்று வருடங்கள் மட்டும் உங்கள் பரிவாரங்களுடன் வனவாசம் சென்று வந்தால் போதும்; நீங்கள் திரும்பி வருவதற்குள் நாங்கள் வல்லரசாகி இருப்போம்.



கொஞ்சம் பெரிய மனதுடன் இந்த உதவியைப் பண்ணுங்களேன். ப்ளீஸ்! :-)

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP