ராஷ்டிரபதி - ஆணா? பெண்ணா? புதிய குழப்பம்!
Saturday, June 16, 2007
முதன் முதலில் ஜெயலலிதா முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு எழுந்த சந்தேகம் போன்றே, ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் ஹிந்திக்காரர்களுக்கும் வந்துள்ளது.
ஜனாதிபதியை இந்தியில் `ராஷ்டிரபதி' என்று அழைக்கிறார்கள். இதுவரை ஆண்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருந்துள்ளனர். இதனால் அவர்களை `ராஷ்டிரபதி' என்றே அழைத்தனர்.
இப்போது, ராஷ்டிரபதி ஆண்பாலா? அல்லது பெண்பாலா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி-இடதுசாரி கட்சிகள் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரான பிரதீபா பட்டீல் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் அவரை `ராஷ்டிரபதி' என்று அழைக்க முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.
இதுபற்றி அரசியல் சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் கருத்து தெரிவிக்கையில்; ராஷ்டிரபதி என்ற பெயர் ஆண்-பெண் ஆகிய இரு பாலாருக்கும் பொருந்தும் என்றும், எனவே பிரதீபா பட்டீல் ஜனாதிபதி ஆகும் பட்சத்தில் `ராஷ்டிரபதி' என்ற பெயரை மாற்ற வேண்டிய தேவை இல்லை என்றும் கூறினார்.
அதெல்லாம் இருக்கட்டும். நம்நாட்டு ஜனாதிபதியை பெரும்பாலும் 'ரப்பர் ஸ்டாம்ப்' என்றே சொல்வார்கள். (ஜனாதிபதி அப்துல் கலாம் விதிவிலக்கு). ரப்பர் ஸ்டாம்ப் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகம் யாருக்கும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ;-)
குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு பெண் வரவிருப்பது பற்றி கலாமிடம் கேட்டபோது மிகவும் அற்புதம் என்றார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
இதனிடையே மக்கள் தம்மை தொடர்பு கொள்ள வசதியாக தனிப்பட்ட இணைய தளம் ஒன்றை தொடங்க கலாம் திட்டமிட்டுள்ளார். யவத்மாலில் மாணவர்களுடன் உரையாடிய அவர், தம்மை www.abdulkalam.com என்ற இணைய தளத்தில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும், இந்த இணைய தளம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இணைய முகவரிகளுக்கு .com என்று முடிவடைந்தால் அவை Commercial சார்ந்த தளமுகவரி என்று புரிந்து கொள்ளப்படும். ஆகவே, .net என்றோ அல்லது .org என்றோ முடியும்படி பார்த்துக் கொள்ளலாமே!