வெற்றியின் ரகசியம்
Thursday, April 03, 2008
வெற்றிகரமான மணவாழ்விற்கான வழிகள் குறித்து அலசும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றிற்கு முன்னேறிய ஒரு கணவனுடன் நடந்த உரையாடல்.
கேள்வி: ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சியின் எல்லா சுற்றுகளிலும் வென்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னணியிலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லப் படுவதுண்டு. உங்கள் வெற்றிக்குப் பின்னணியில் யார் இருந்தார்?
பதில்: நிச்சயமாக எனது எல்லா வெற்றிகளின் பின்னணியிலும் என் மனைவியின் பங்களிப்பு குறைத்து மதிப்படப்பட முடியாதது.
கேள்வி: உங்கள் மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று நேயர்களுக்குச் சொல்லுங்களேன்.
பதில்: முடிவெடுக்க வேண்டிய விசயங்களில் ஒருவருக்கொருவர் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டும் விட்டுக்கொடுப்பதுமே மகிழ்ச்சியான மனவாழ்வுக்குக் காரணம்.
கேள்வி: கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?
பதில்: தாராளமாக! எங்கள் வீட்டில், பெரியபெரிய விசயங்களில் முடிவெடுக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டு, சின்னச் சின்ன விசயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்வாள். ஒருவர் எடுக்கும் முடிவில் பிறர் தலையிடுவதில்லை.
கேள்வி: கொஞ்சம் உதாரணத்துடன் விளக்க முடியுமா?
பதில்: உதாரணமாக, எந்தக் கார் வாங்குவது, எந்தக் கலர் பட்டுப்புடவை எடுப்பது, பழைய நகையை விற்றுவிட்டு புதிய நகை வாங்குவதா அல்லது விற்காமலேயே புதிய நகையை வாங்குவதா, எனது வங்கி சேமிப்பிலிருந்து எவ்வளவு செலவு செய்வது, ஷோபா, குளிர்சாதனப் பெட்டி, வேலைக்காரி தேவையா வேண்டாமா போன்ற விசயங்களைத் தீர்மானிப்பது என் மனைவியே! (மனைவி கணவனைப் பார்த்து புன்முறுவல் செய்கிறார்)
கேள்வி: உங்களின் பங்களிப்புப் பற்றி உதாரணத்துடன் சொல்லுங்களேன்.
பதில்: மேற்சொன்ன சின்னசின்ன விசயங்களில் என் மனைவி எடுத்த முடிவை அப்படியே ஒப்புக் கொள்வேன். என்னுடைய முடிவுகள் பெரிய பெரிய விசயங்களில் மட்டுமே இருக்கும். உதாரணமாக, அமெரிக்கா ஈராக்கை தாக்க வேண்டுமா வேண்டாமா,ஜிம்பாப்வேக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமா வேண்டாமா,ஆப்பிரிக்க பொருளாதாரத்தை விரிவாக்க வேண்டுமா வேண்டாமா, சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டுமா வேண்டாமா போன்றவற்றைச் சொல்லலாம்! (மனைவிக்கு ஆனந்தக் கண்ணிர் அரும்புகிறது. பெருமிததுடன் கைக்குட்டையின் நுனியால் துடைக்கிறார்)
ஒன்று தெரியுமா சார் உங்களுக்கு! என் இந்த முடிவுகளை ஒருபோதும் என் மனைவி ஒருபோதும் மறுத்ததே இல்லை. இதுவே எங்கள் மகிழ்ச்சியான, வெற்றிகரமான மனவாழ்க்கைக்குக் காரணம்!
கேள்வி கேட்டவருக்கும் கண்ணீர் வருகிறது. ஆனந்தக் கண்ணீரல்ல கணவனின் நிலையை எண்ணி பரிதாபத்துடன் கண் கலங்குகிறார்.
குறிப்பு: இப்பதிவுக்கு போலிப்பெயரில் பின்னூட்டம் வந்தால் அது நிச்சயம் ஏதாவது பெண் பதிவராகத்தான் இருக்கும். :-))