Showing posts with label கழுதை. Show all posts
Showing posts with label கழுதை. Show all posts

தேசிய விலங்காக கழுதை தேர்வு!

Monday, November 23, 2009

தொடர் தோல்விகளாலும் உட்கட்சிப் பூசல்களாலும் துவண்டுபோயுள்ள சிலருக்கு உருப்படியாக அரசியல் நடத்த எதுவுமில்லை என்பதால் ரொம்ப அவசியமான தேசிய விலங்கு குறித்து கோஷம் போட்டு வருகிறார்கள்.இது ஒருபக்கமிருக்க தேசிய விலங்காக யாரைத் தேர்வு செய்வது என்று மிருகங்களும் தேர்தல் நடத்தினால் எப்படி இருக்கும்? - ஓர் கற்பனை.

நாக்பூர் காட்டில் 'சாது'வான விலங்குகளும் கொடூர விலங்குகளும் தேசிய விலங்காக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மாநாட்டில் கூடியிருந்தன! காட்டு ராஜா சிங்கம் தனக்கென ஒதுக்கப்பட்ட அரியாசணத்தில் அரைக்கால் டவுசருடன் வீற்றிருந்தார்.இருகுரங்குகள் விசிறியால் வீசிக்கொண்டிருந்தன. மாநாட்டு நேரம் சரியாக நள்ளிரவு 12:00 மணிக்குத் தொடங்கியது.

சிங்கம்: மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எனதருமை மிருகங்களே! நாம் இன்று குழுமியிருக்கும் நோக்கம் நம்மில் யாரை தேசிய விலங்காகத் தேர்வு செய்வது என்று முடிவெடுப்பதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களில் யாரெல்லாம் தேசிய விலங்காகும் தகுதி இருப்பதாகக் கருதுகிறீர்களோ,தயவுசெய்து மேடைக்கு வந்து தங்கள் சிறப்பம்சங்களைச் சொல்லலாம். இறுடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பெரும்பான்மை ஓட்டுகள் பெறுபவர் தேசிய விலங்காக அறிவிக்கப்படுவார் என்று பேசிவிட்டு, தலைமை தேர்தல் அதிகாரி நரியிடம் ஒவ்வொருவராகப் பேச அழைக்கும்படிப் பணித்தது.




நரி: முதலில் பன்றியை மேடைக்குப் பேசவருமாறு அழைக்கிறேன்.

பன்றி: மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் சிங்கம் அவர்களே! துணைத்தலைவர் புலி மற்றும் சிறுத்தையாரே! கூடியிருக்கும் மிருகங்களே! எல்லோருக்கும் என் வணக்கம்! மகாவிஷ்ணுவுக்கு பிரியமானதால் தேசிய விலங்காக பன்றிகளே தகுதியானவை. உங்க பொன்னான வாக்குகளை பன்றிக்குச் செலுத்துவீர் என்றுகூறி அமர்கிறேன்.

நரி: (மனதுக்குள்) ம்..இவனுங்கப் பேரைக்கேட்டால் அமெரிக்காகாரன் முதல் ஆண்டிப்பட்டிக்காரன் வரைக்கும் நடுங்குறானுங்க. கெட்டகேட்டுக்கு தேசிய விலங்காம்! அடிசெருப்....) அடுத்து யானையார் என்ன சொல்லப்போகிறீர்கள்?

யானை: அவையோருக்கு என் பணிவான "ஓ"! மாண்புமிகு தேர்தல் அதிகாரி நரி அவர்கள் என்னை 'யானையார்' என்று அழைத்தார். பிள்ளையாரின் 'தல' என்பதால் அவ்வாறு அழைத்திருக்கிறார். சும்மாவா சொன்னார்கள் நரிகள் புத்திசாலிகளென்று!அதனால் ஆனைமுகத்தோனின் 'தல' யானையே தேசிய விலங்காகத் தகுதியுடையது.

நரி: (ஏம்லே.வருசாவருசா ஓம்பேரச்சொல்லி கலாட்டா பண்றது போதாதா?) அடுத்து சிறுபான்மை இனத்தைச் சார்ந்த ஒட்டகம் மேடைக்கு வரவும்.

ஒட்டகம்: அவையோருக்கு என் அன்பான சலாம்! என்னை சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவன் என்று சொன்னதை ஆட்சேபிக்கிறேன்.ராஜஸ்தான் முதல் அரபுநாடுகள் வரை நாங்கள் பரவி இருக்கிறோம்.அகண்ட பாரதம் உருவானால் அப்போது தேசியவிலங்காக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் வருவதைத் தவிர்க்க எங்களையே தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

நரி:(போடாங் கொய்யால கொசுவும்தான் உலகம் பூரா இருக்கு.அதுக்காக?) நண்பர் குதிரை மேடைக்கு வரவும்.

குதிரை: பண்டைய மன்னர்களின் (அசுவமேத) யாகம் முதல் இன்றைய பாராளுமன்ற எம்பிக்களை விலை பேசுவதுவரை எங்கள் பெயர்(குதிரைபேரம்) அடிபடுகிறது. ஆகவே எங்களையே தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

நரி: (என்ன இருந்தாலும் உன் முதுகில சவாரி செஞ்சிடுறானுங்களே!) அடுத்து அண்ணன் 'சொரி'நாய் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்.

நாய்: எல்லோருக்கும் ஒரு லொள்ளு! நன்றியுள்ள எங்களைத் தவிர தேசிய விலங்காக இருப்பதற்கு யாருக்குத்தான் தகுதியுள்ளது?எனவே எங்களையே தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

நரி:(அப்ப ஏம்லே நன்றிகெட்ட நாயேன்னு திட்டுறானுங்க?) அடுத்து குரங்கு மேடைக்கு வரவும்.

குரங்கு: ராமருக்குப் பணிவிடை செய்ததன்மூலம் அரசியலுக்கு வந்தவன் நான். தன்னலமற்ற நீண்டகால அரசியல் பின்னணியை கருத்தில்கொண்டு குரங்கையே தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

நரி: (நீயி மிருகமா மனுசனா என்று இன்னும் முடிவுக்கு வரலே.அதனால ராமர் ஆட்சி மலர்ந்த பின்னாடி உன்னைப் பற்றி யோசிப்போம்) அடுத்து கரடியை மேடைக்கு அழைக்கிறேன்.

கரடி: ஏய்டண்டனக்கா! ஏய் டண்டனக்கா! உங்கள் கையிலிருப்பது ஓட்டு. அதை எனக்குப் போட்டு! மத்தவங்களுக்கு வைங்க வேட்டு. உடு ஜூட்டு!யக்காவ்..

நரி: (இவன் டயலாக்கைப் பார்த்தா கரடி மாதிரி தெரியலையே?) பூனை மேடைக்கு வரவும்.

பூனை: அவையோருக்கு என் அன்பான மியாவ்! காட்டிலும் நாட்டிலும் 'சாது' வான விலங்காக இருப்பதால் உங்கள் ஓட்டு பூனைக்கே!

நரி: (புலியப் பார்த்து பூனையும் சூடுபோட்டுக் கொண்டதாம். ஏன்டா உனக்கு இந்த ஆசை?) தம்பி எலி ஏதேனும் சொல்ல விரும்பினால் சொல்லலாம்!

எலி: மதமதவென்று பேசிய ஒருவர் ஆனைமுகத்தோன் விநாயகரின் 'தல' என்பதால் தன்னையே தேசிய விலங்காகத் தேர்வு செய்ய வேண்டினார். ஆனை முகத்தோன் விநாயகரின் வாகனமான எலிகளே தேசிய விலங்காகத் தகுதியுள்ளவையென எலிமையாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நரி: (மனுசங்க மொதல்ல விஷம் வச்சுக் கொல்றது உங்களைத்தான்! திருட்டுப்பசங்கடா நீங்க!) பாம்பு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

பாம்பு: சமீபத்தில் முதலமைச்சர் கருணாநிதி படமெடுப்பவர்களின் சொர்க்க பூமியாக தமிழகத்தை மாற்ற விரும்புவதாகச் சொன்னதை நினைவுறுத்தி, சிவபெருமானின் கழுத்தில் மாலையாகத் தொங்கும் பாம்பை விடவும் தேசிய விலங்காகும் தகுதி யாருக்கும் இல்லை என்பதால் பாம்பு உங்கள் சாய்ஸ்!

நரி: (முதல்வர் சினிமாப்படம் எடுப்பதைச் சொன்னாருடா டுபுக்கு) அடுத்து கழுதை என்ன சொல்லப்போறீங்க?

கழுதை: உழைப்பாளர்களின் தோழன் கழுதை.பொறுமையின் சிகரம் கழுதை! தேசிய விலங்காக கழுதையைத் தேர்வு செய்யும்படி கழுதையாகக் கத்திச் சொல்லிக் கொள்கிறேன்.

நரி: (கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசம்?) தங்கள் அருமை பெருமைகளைச் சிறப்பாக விளக்கிய மிருகங்களுக்கு நன்றி. இறுதியாக கூட்டணியிலுள்ள சிறுத்தை மற்றும் இதுவரை அரசியல் நடத்த உதவிய புலிகளும் தங்கள் கருத்தைச் சொல்லி விட்டால் தேர்தலை சுமூகமாக நடத்தி விடலாம்!

சிறுத்தை: சிலர் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிக்கு வந்து செல்கிறார்கள். வெற்றி பெற்றதும் அணிமாறுகிறார்கள். தமிழினத்தின் நிரந்தரக் காவலரான சிங்கத்தமிழன் கூட்டனியில் என்றும் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறுத்தைகளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் புலிகளுக்குப் பிறகு தேசிய விலங்காக சிறுத்தையை அறிவிக்க மத்திய அரசை வற்புறுத்துமாறு சிங்கராஜாவைக் கேட்டுக் கொள்கிறேன்.

நரி:(அதான் ராஜபக்சேயுடன் பிரியாணி சாப்பிட அழைத்துச் சென்றார்களே?) மேதகு புலிகள் என்ன சொல்லப்போறீங்கன்னு ஒட்டுமொத்தத் தமிழினம் மட்டுமின்றி சிங்களரும் ஆர்வமாக உள்ளனர் என்பதால் உடனடியாக மெளனம் கலைக்கவும்.

புலி: புலிகளை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது. ஆண்டாண்டுகளாக ஆண்டுவந்த தமிழினம் இன்று அடிமைப்பட்டுக் கிடக்கிறது. புலிகளிடையே ஒற்றுமையில்லாததே இந்நிலைக்குத் தள்ளிவிட்டது. விஷமிகள் ஒன்றுகூடி இன்று புலிகளை தமிழ் தேசியத்திலிருந்தும் இந்திய தேசியத்திலிருந்தும் விரட்டியடிக்க முனைகின்றனர். மதவாத,இனவாதச் சக்திகளின் சூழ்ச்சியை மாண்புமிகு தலைவர் உணர்ந்து புலியையே தேசிய விலங்காகத் தொடரச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிங்கம்: தேசிய விலங்காக விருப்பம் தெரிவித்த அனைவரும் தத்தமது கருத்துக்களைத் தெளிவாகச் சொன்னீர்கள். இன்னார்தான் தேசிய விலங்கு என்று அறிவிக்க நாமொன்றும் சர்வாதிகார அரசாங்கம் நடத்தவில்லை. அமெரிக்கா கைகாட்டும் யாரும் ஐநா சபை பொதுச்செயலாளர் ஆகலாம். இந்தா பிடிச்சுக்கோ என்று தூக்கிக் கொடுக்க இதுஒன்றும் நோபல் பரிசல்ல!

இங்குள்ள மின்னணு வாக்களிப்பு எந்திரத்தில் ஒவ்வொருவராக வந்து தங்கள் வாக்குகளைச் செலுத்துமாறு அழைக்கிறேன்.

எல்லா விலங்குகளும் வரிசையில் நின்று தங்கள் அடையாளஅட்டையைக் காட்டி வாக்களித்தன. சிறுசிறு மிருகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி மற்ற விலங்குகளைக் குழப்பின.மூன்று கட்டமாக நடந்த வாக்குப்பதிவு முடிவுகள் மறுநாள் அறிவிக்கப்படுகிறது.

சிங்கம்:வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளில் கழுதை அதிக வாக்குகள் பெற்றுள்ளது. இன்று முதல் நமது தேசிய விலங்கு கழுதை என்று அறிவிக்கிறேன்" சபை கலையட்டும்! என்று கர்ஜித்தது.

(தேர்தல் முடிவில் திருப்தியடையாத தோல்வியுற்ற விலங்குகள் மின்னணு வாக்களிப்பு எந்திரத்தில் குளறுபடி நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டின. அதை நிரூபிக்கும்படி தேர்தல் ஆணையர் நரி பலமுறை அழைத்தும் யாராலும் நிரூபிக்க முடியவில்லை.

மறுநாள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கழுதை"கழுதைகளின் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.வரும் 2015க்குள் நிலவுக்குக் கழுதையை அனுப்புவோம்! வாக்களித்த அனைவருக்கும் நன்றி! என்னைப்பார் யோகம் வரும்! என்று கத்தியது.

Read more...

வந்தேறிக் கழுதை

Sunday, February 01, 2009


எங்கிருந்தோ வந்த கழுதையொன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மேய்ந்தது. கஷ்டப்பட்டு நீர்ப்பாய்ச்சி, உரமிட்டு வளர்த்துப் பாதுகாத்த பயிர்களை திடீரென்று வந்த கழுதை அத்துமீறி நுழைந்து பயிர்களை நாசமாக்குகிறதே என விவசாயி கையைப் பிசைந்து கொண்டு நின்றான்.

கழுதையை விவசாய நிலத்திலிருந்து எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் வீட்டுக்குச் சென்று ஒரு தடி, வெள்ளைக் காகித அட்டை, ஆணியுடன் வந்தான். அந்த அட்டையில் "கழுதையே வெளியேறு!" என்று எழுதி, கழுதை முன்பு காட்டிக் கொண்டு நின்றான்.காலையிலிருந்து மாலை வரையில் கழுதை திரும்பும் பக்கமெல்லாம் காட்டியும் பயனில்லை.கழுதை அவனையோ அல்லது அவனின் எதிர்ப்பையோ கண்டு கொள்ளவில்லை!

களைப்படைந்து சோர்வுடன் வீட்டுக்குத் தூங்கச் சென்றான்.புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. அதிகாலை எழுந்து வீட்டிலுள்ளவர்களையும் அக்கம்பக்கத்திலுள்ள சிலரையும் அழைத்துக்கொண்டு பேரணியாகச் சென்று கழுதையின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தான். கழுதை எதிர்ப்புப் பேரணிக்கு வந்த ஒவ்வொருவரும் கையில் "கழுதையே வெளியேறு!" என்ற அட்டை வைத்திருந்தனர். கழுதை அங்கிருந்தவர்களையோ அல்லது அவர்களது எதிர்ப்பையோ கண்டுகொள்ளாமல் பயிர்களைத் தின்றது.

கழுதையின் கள்ளமெளனம் விவசாயிகளை எரிச்சலடையச் செய்தது. சிலர் "கழுதையே வெளியேறு" அட்டையுடன் "கழுதையைக் கொல்வோம்" என்றும் கோஷமிட்டார்கள். கழுதை வழக்கம்போல் அவர்களைக் கண்டுகொள்ளாமல் பயிர்களை மேய்ந்து கொண்டிருந்தது.மேலும் வெருப்புற்ற விவசாயிகள் "கழுதையே வெளியேறு" போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

வழக்கம்போல் கழுதை அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது மேய்ந்து கொண்டே இருந்தது.விரக்தியின் உச்சத்திற்குவந்த விவசாயிகள் இறுதியில் கழுதையின் கொடும்பாவியை எரிப்பதென முடிவு செய்தார்கள். கழுதையின் மாதிரியை உருவாக்கி,கழுதை மேய்ந்து கொண்டிருந்த நிலத்தருகே சென்று கழுதைக்கு எதிராக முழங்கி, ஆக்ரோஷமாக கழுதையின் கொடும்பாவியை எரித்து, "கழுதை ஒழிந்தது" வெற்றி! மாபெரும் வெற்றி என்று கோஷமிட்டு வாகையுடன் வீடு திரும்பினார்கள்.

கழுதையின் கொடும்பாவி எரிவதைக் கண்ட கழுதை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புண்முறுவலிட்டு வழக்கம்போல் பயிர்களை மேயத் தொடங்கியது. கொடுங்கோல் கழுதை! திமிர்பிடித்த கழுதை விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதாக இல்லை!

எனவே, விவசாயிகள் சிலரை கழுதையுடன் சமரசம் பேச அனுப்பினார்கள்.

"கழுதை அவர்களே! விவசாய நிலத்தின் சொந்தக்காரர்கள் நீங்கள் அவர்கள் நிலத்திலிருந்து வெளியேற வேண்டுமென விரும்புகிறார்கள்!" அவர்களைப் பார்த்த கழுதை,கண்டுகொள்ளாது மேய்வதில் மட்டும் கவனம் செலுத்தியது.

"மதிப்பிற்குறிய கழுதை அவர்களே. நிலச்சொந்தக்காரர்கள் மூன்றில் ஒரு பகுதி நிலத்தை உங்களுக்கு விட்டுத்தர முன்வருகிறார்கள். தயவு செய்து நீங்கள் அவர்களின் விளைநிலத்திலிருந்து உடனடியாக வெளியேறணும்! கழுதை கண்டுகொள்ளாமல் மேய்ந்து கொண்டே இருந்தது. அடுத்தவர், "பொறுமையின் சிகரம் மாண்புமிகு கழுதையாரே! பாதி நிலத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அருள்கூர்ந்து அவர்களின் விளைநிலத்திலிருந்து வெளியேறுங்கள்!"



வெற்றி! வெற்றி!! கழுதை ஒருவழியாக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டது. மக்கள் கூட்டத்தை கழுதை ஒருமுறை பார்த்ததுச் சிரித்தது.விவசாயிகள் மகிழ்ச்சியில் கழுதையைப் புகழ்ந்து பாடினார்கள். ஒருவழியாக அங்கு அமைதி திரும்பியது. தனக்கு ஒதுக்கப்பட்ட பாதிப்பகுதியில் கழுதை சுகமாக வாழ்ந்து வந்தது. எல்லாம் ஒருசில நாட்கள் மட்டுமே!

மீண்டும் வழக்கம்போல் கழுதை விவசாய நிலத்தில் புகுந்து விளைச்சலை மேய்ந்தது.விவசாயிகளும் வேறு வழியின்றி கழுதைக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டினர். போராட்டங்கள் வலுத்த போதும் அவற்றைப் பொருட்படுத்தாது விளைச்சலைக் கொள்ளையிட்டது.

இந்தக் கழுதை வேறுபகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட்க் கழுதையாகும்! கழுதையுடன் பலமுறை போராடி அலுத்துபோன விவசாயிகள் மென்மேலும் போராடத் திராணியற்று அப்பகுதியிலிருந்து வெளியேருவது என்று முடிவு எடுத்தனர்.குடும்பம் குடும்பமாக மக்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறி ஊரின் ஒதுக்குப் புறத்தில் தங்களுத்தேவையான வீடுகளை அமைத்தனர்.

கிட்டத்தட்ட எல்லோருமே அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினர். கழுதையுடன் சமரசம் பேசியவர்களும்கூட அங்கிருக்க மனமின்றி கூட்டம் கூட்டமாக புதுக்குடியிருப்பிற்கு இடம்பெயர்ந்தனர். கொலைகார ஆக்கிரமிப்பு கழுதையை மக்கள் சபித்தனர். அவர்களிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் சிறுகல்லை எடுத்து கழுதையை நோக்கி வீசினான். கழுதை அவ்விடத்தை விட்டு வேகமாக ஓடியது!

"நம் எல்லோரையும் இச்சிறுவன் அவமதித்ததோடு நம்மைச் சுற்றியுள்ள மக்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்படி செய்துவிட்டான்" என்று சொல்லி அச்சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கி கொன்று விட்டு, கழுதையை மீண்டும் அழைத்து வந்தனர். தண்டிக்கப்பட்ட சிறுவனைப் புனிதப்போராளி என்று புகழ்ந்தனர்.

இக்கழுதைக்கு தற்போது அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்துமளவுக்குச் செல்வாக்கு இருக்கிறதாம்! ஏனென்றால் அமெரிக்காவில் எந்தக்கட்சி அதிபர் ஆண்டாலும் கழுதைதான் செல்லப்பிராணியாம்!

நீதி: கழுதை கெட்டால் குட்டிச்சுவர் கட்டும்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP