திருவள்ளுவர் - ஆண்டாள் அழகர் காலேஜில் படிக்கவில்லை!
Saturday, September 22, 2007
ஆங்கிலேயர்களால் ஆதாம் பாலம் எனறு அறியப்பட்ட மணற்திட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு இன்று ராமர் பாலமாம்! பிற்காலத்தில் அனுமன் பாலம் என்று சொல்லப் பட்ட மணல் திட்டுகளை, தற்போது ராமர் பாலம் என்று சொல்வதன் நோக்கம், அனுமன் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துவதை விட ராமன் பெயரைச் சொல்லி மீண்டும் ரத்தஆறு ஓடவைக்கலாம் என்ற சூழ்ச்சி என்றே தமிழர்களாகிய நாங்கள் நினைக்கிறோம்.
இராமாயணமே கற்பனைக் கதை என்பதால் அதன் கதாநாயகன் ராமனும் கற்பனையே என்றும்; பாலம் கட்டுவதற்கு ராமர் எந்தக் கல்லூரியில் படித்தார் என்று தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் முதல்வர் கருணாநிதி கேட்டதற்கு, முடிந்தால் ராமரை வைத்து அரசியல் பண்ணும் மதவெறியர்கள் அறிவுப்பூர்வமாகப் பதில் சொல்லட்டும். அத்வானியோ அல்லது சோ ராமசாமியோ கலைஞருடன் நேருக்கு நேர் விவாதிக்கலாம்.
பா.ஜ.கவுடன் ஜெயலலிதா அமைக்கவுள்ள கூட்டனியில் விஜயகாந்துக்கும் சேர்ந்து கொள்ள ஆசை இருந்தால் அதைப்பற்றிச் சொல்வதற்கில்லை. ஆனால், கலைஞரை எதிர்க்கும் கூட்டனி பஜனையில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் விஜயகாந்த் 'நாயுடு' திருவள்ளுவரையும் கண்ணகியையும் கிண்டலடித்துள்ளார்.
இராமாயணம் காலம் தொட்டு தமிழர்கள் என்றாலே இளக்காரம்தான் போலும்! ஒருவேளை இராமாயணம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எழுதப்பட்டிருந்தால் ராவணனன் பாகிஸ்தானி என்றோ லஷ்கரே தோய்பா இயக்கத்தைச் சார்ந்தவன் என்றோ சித்தரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அமெரிக்கா உதவியுடன் அல்காயிதாவைச் சார்ந்தவன் என்றும் கூடச் சொல்லப்பட்டிருக்கலாம்!
ராமர் பாலம் இருப்பது உண்மையே என்று நம்பினால் விஜயகாந்து தனது அடுத்த படத்தில் வில்லன்களை ராமர் பாலத்தில் விரட்டி விரட்டி அடிப்பது போல் சண்டைக்காட்சி எடுக்கட்டும். தமிழர்களின் ஓட்டுக்களை நம்பி அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் தமிழர்களை இழிவு படுத்துவது ஆண்டாள்-அழகர் மைந்தனுக்கு அழகல்ல!
ராமர் எந்தக்கல்லூரியில் படித்து இஞ்சினியர் ஆனார்? என்று முதல்வர் கருணாநிதி கேட்டதற்கு விஜயகாந்துக்கு ஏன் கோபம் வரவேண்டும்? வேண்டுமானால் ராமர் இஞ்சினியர் பட்டம் பெற்றது ஆண்டாள்-அழகர் கல்லூரியில் என்று சொல்லி விட்டுப் போகட்டுமே!
(டொனேசன் எவ்வளவு கொடுத்தார் என்ற உபகேள்வி எழுந்தால் நான் பொறுப்பல்ல!:)