
நேற்று நெல்லை மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்றி முடித்துவிட்டு தாடியைத் தடவிக் கொண்டிருந்த விஜய T.ராஜேந்தர் 'வெட்டிப் பேச்சு'க்கு அளித்த சிறப்புப் பேட்டி!
அதிரைக்காரன்: என்னா சார்! தாடி வெளுக்காமல் அப்படியே 'கரு.கரு'ன்னு வளர்ந்திருக்கு.
விஜய.T.R: நான் 'கரு'ணாநிதியே கதி என்று இருப்பதால் என் முடியும் 'கரு-கரு' என்று இருக்கின்றன போலும்!
அதிரைக்காரன் : உங்கள் கட்சி நிலவரம் எப்படி இருக்கிறது?
விஜய.T.R: பெரும் நஷ்டத்தில் இருக்கிறது. இந்தக் கொடியைக்கூட என் சொந்த செலவில்தான் வாங்கி வந்தேன் என்றால் நிலமை எப்படி இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். கண்டவன் பின்னாடியும் அலையுறதாலதன் தமிழ்நாடு வல்லரசாக முடியலே! நாங்க ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை வல்லரசாக மாற்றுவோம்
அதிரைக்காரன்: சிலம்பரசாகவோ குறளரசாகவோ மாற்றாமல் விட்டால் சரி! அப்புறம் விஜயகாந்த் உங்களுக்குப் போட்டியா?
விஜய.T.R: எனது ஆஸ்தான குடும்ப சோதிடர் சொன்னபடி என் பெயருடன் 'விஜய' என்று சேர்த்துக் கொண்டுள்ளேன். சொல்லப் போனால் நான்தான் விஜயகாந்துக்குப் போட்டி!
அதிரைக்காரன்: உங்கள் கட்சியின் இலட்சியம் என்ன?
விஜய.T.R: ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவரை முதல்வராக்குவதே எங்கள் கட்சி முக்கியஸ்தர்களின் இலட்சியம்.என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இனி வரும் தேர்தல்களில் எங்கள் கட்சி ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்பதை பொறுத்திருந்து பாருங்க! இதைச் சொல்றது விஜய. டி.ஆருங்க!
அதிரைக்காரன்: உங்கள் கட்சி முக்கியஸ்தர்கள் யார் யார்?
விஜய.T.R: உ.வி.டி.ஆர்,ரா.சி.,ரா.கு.மற்றும் பலர்.!
அதிரைக்காரன்: என்னா சார் புதுப்புது பேரா இருக்கு? இவங்கல்லாம் யாருன்னு கொஞ்சம் விளக்க முடியுமா?
விஜய.T.R: இதுக்குத்தான்யா அரசியல் அரிச்சுவடி தெரியாத தத்தக்கா பித்தக்கா நிருபர்களுக்குப் பேட்டி கொடுக்கக் கூடாது. உ.வி.டி.ஆர்=உஷா விஜய டி.ராஜேந்தர், ரா.சி= சிலம்பரசன், ரா.கு= குறளரசன்!
அதிரைக்காரன்: உங்கள் மகள் இலக்கியா பெயரைக் காணோமே! அவங்களுக்கு அரசியல் பிடிக்காதா?
விஜய.T.R: அவங்களுக்கு அரிசியல்தான் பிடிக்கும். காலத்தின் கட்டாயத்தால் மத்திய அரசில் காபினட் அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நிச்சயமாக கட்சித் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருவார் என்று நம்புகிறோம்!
அதிரைக்காரன்: நீங்கள் தீவிர அரசியலில் இறங்கி சினிமாவுக்கு முழுக்குப் போடுவீர்களா?
விஜய.T.R: அரசியல்வாதிகளிடம் போய், நீங்கள் தீவிர சினிமாவில் இறங்கி அரசியலுக்கு முழுக்கு போடுவீர்களா?என்று கேட்பீரா? அவரவருக்கு எதில் லாபமோ அந்தத் தொழிலைச் செய்துவிட்டுப் போகட்டுமே.
அதிரைக்காரன்: அப்படீன்னா அரசியல் கட்சி நடத்துவது தொழில் என்கிறீர்களா?
விஜய.T.R: என் அனுபவத்தில் நான் அப்படித்தான் கருதுகிறேன். கலைச் 'சேவை' செய்வதாகச் சொல்லி சினிமாக்காரர்கள் சம்பாதிக்க வில்லையா? அதுமாதிரிதான் அரசியலும். நானெல்லாம் ஒரு கொள்கையோடு அரசியலுக்கு வந்தவன்.
அதிரைக்காரன்: ஓஹோ! உங்கள் கட்சியின் கொள்கைதான் என்ன?
விஜய.T.R:எக்காரணம் கொண்டும் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.எங்கள் கொள்கையைச் சொல்லி விட்டால் "ப்பூ" இதானா என்று மற்றவர்கள் இளக்காரமாக நினைந்து விடக்கூடும் என்பதால் அதை தற்போதைக்குச் சொல்ல முடியாது.நேரம் வரும்போது நிச்சயம் சொல்வேன்!
அதிரைக்காரன்: மோடி, ஜெயலலிதா வீட்டில் பொங்கல் சாப்பிட வருகிறாரே! அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
விஜய.T.R: தமிழனின் முக்கிய டிஃபன் பொங்கல்.மற்றவர்களும் பொங்கலை விரும்பபினால் தமிழனுக்குப் பெருமைதானே! அதே போல், நரேந்திர மோடி ஜெயலலிதாவை குஜராத்துக்கு அழைத்து பாணிபூரி கொடுக்க வேண்டும்.
அதிரைக்காரன்: பொங்கலும் பாணிபூரியும் சேர்ந்தால் உருப்படுமா? வழக்கமா ஜெயலலிதா வடநாட்டு அரசியல்வாதிகளுக்கு அல்வா தான் கொடுப்பார். சமீபத்தில் மூன்றாவது அணி என்று சொல்லி நிறைய பேருக்கு அல்வா கொடுத்தார்.சென்ற சட்டமன்றத் தேர்தலில் உங்களுக்கும் கூட அல்வா கொடுத்தார்!
விஜய.T.R: ஜெயலலிதா மட்டுமா எனக்கு அல்வா கொடுத்தார். அதென்னமோ தெரியவில்லை என்னை பார்த்தாலே எல்லோருக்கும் அல்வா கொடுக்கத் தோன்றுகிறது.(கண்கலங்குகிறார்!) பிறகு ஆவேசமாக,
என் பேரு VTR
என் உண்மையான தலைவன் பேரு MGR
நானும் ஒருநாள் ஆவேன் முதல்வர்
எனக்குப் பின்னாடி என்னிரு புதல்வர்
நீ ஒரு வெட்டி! - ஒனக்கெல்லாம்
இனி கிடையாது பேட்டி!!
ஏய் டண்டனக்கா! ஏய் டண்டனக்கா!
எடத்தக் காலிபண்ணு மக்கா!
எக்கா!
பின்குறிப்பு: விரைவில் விஜய டி.ராஜேந்தர் இளைஞர்களைத் திரட்டி மாநாடு நடத்த இருக்கிறார். கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் பின்னூட்டத்தில் முன்பதிவு செய்யலாம்!
Read more...