பாவம் மகளிர்!!
Monday, March 10, 2008
மார்ச்-8 ஆம் தேதியை உலக மகளிர் தினமாக அறிவித்து நாடெங்கும் கொண்டாடப்பட்டது. ஆளும் கட்சியைச் சார்ந்தப் பெண் அமைச்சர்கள் தலைமையில் சில பெண்கள் முதல்வர் கலைஞரைச் சந்தித்து ஆசி பெற்றதையும் வேறுசில ஆண் அமைச்சர்கள் ஒளவையார் சிலைக்கு மாலை அணிவித்ததையும் திரும்பத் திரும்பக் காட்டினார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தினத்தை அந்த தினம்-இந்த தினம் எனப் பெயரிட்டு அவை சம்பந்தப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்தி காசு பார்ப்பது முதலாளியத்துவ யுக்திகளில் ஒன்று.எனக்குத் தெரிந்து மகளிர் தினம்,அன்னையர் தினம் ஆகிய இரு தினங்கள் மட்டுமே பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.மீதமுள்ள அனைத்து நாட்களும் ஆண்களுக்கானதோ? மகளிர் அமைப்புகள் இதைக் கண்டு கொள்ளாமலும் உரிமைகோராமலும் இருப்பது ஆச்சரியம்!
நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவுக்கு கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிப் பெண்மணிகளும் ஓரணியில் இருப்பர். நியாயமாக மகளிர் தினத்தில் ஆசிபெறுவதற்கு கலைஞரை விட புரட்சித் தலைவி ஜெயலலிதாவையே சந்தித்திருக்க வேண்டும். பெண்ணுக்கு பெண்ணே எதிரி! அல்லது ஜெயலலிதாவை மகளிராகக் கருதவில்லையோ என்னவோ? வாழ்த்து மற்றும் அருளாசி கொடுக்க பெண்ணைவிட ஒரு ஆணே தகுதியானவர் என்றும் பழக்க தோசத்தில் கருதி இருக்கக்கூடும்!
ஆண் அமைச்சர்கள் ஒளவையார் சிலைக்கு மாலை அணிவித்து மகளிர் தினத்தைப் போற்றினார்கள். ஒளவையாரைப் பொருத்தவரை ஆண் மேளாண்மைக்கு ஆதரவாளராகவே அறிய முடிகிறது. உதாரணமாக,
" நாடாகொன்றொ காடாகொன்றொ
அவலாகொன்றொ மிசையாகொன்றொ
எவ்வழி நல்லை ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"
என்றும்
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதனினும் அரிது ஆணாய்ப் பிறத்தல்"
ரொம்ப நாளாக இருக்கும் சந்தேகம்! லைஃப்பாய் விளம்பரத்தை தவிர வேறெந்தச் சோப்பு விளம்பரத்திலும் ஆண் மாடல்களைக் காட்டுவதில்லை. அழகு காக்கும் சோப்புக்களுக்கு பெண்களாம்;ஆரோக்கியம் காக்கும் லைஃபாய் சோப்புக்கு மட்டும் ஆண் மாடல்களாம்!ஏன் பெண்கள் ஆரோக்கியமாகவும் ஆண்கள் அழகாகவும் இருக்கக் கூடாதா?
ஏதோ மகளிர் தினத்திற்கு நம்மால் முடிந்தது இதுதான்! அர்ச்சனைகள் வரவேற்கப்படுகின்றன.