நோபல் விருதையும் கலைஞருக்கே கொடுத்திருக்கலாமே!
Saturday, October 10, 2009
2009 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் விருது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் ஜார்ஜ்புஷ் அரசினால் நடைமுறைப் படுத்தப்பட்ட பல்வேறு கொள்கைகளை மாற்றி (CHANGE) அமெரிக்கர்கள்மீதான உலகலாவிய வெருப்பை நீக்குவதற்காக புது கொள்கைகளை முன்வைத்த பாராக் ஒபாமா, இதுவரை எந்தமாற்றத்தையும் கொண்டுவந்த மாதிரி தெரியவில்லை.
பின்லாடனை ஆப்கனிலும் பாகிஸ்தானிலும் வலைவீசித் தேடுவதாகச் சொல்லிக்கொண்டு கடந்த பத்து வருடங்களாக அமெரிக்க ராணுவத்தின் அட்டூழியங்களை பதவியேற்று ஓராண்டிற்கு மேலாகியும் அமைதியாகக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக "2009 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் விருது" வழங்கப்பட்டிருக்கிறதாகவே நினைக்க தோன்றுகிறது.
சீனாவில் உய்குர் இனமக்களை சீன ராணுவம் கொன்றொழித்ததையும், இலங்கையில் விடுதலைப்புலிகளை அழிப்பதாகச் சொல்லி அப்பாவிகளைக் கொல்வதை 'அமைதியாக' வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாலும் "2009 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் விருது"ஒபாமாவுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடும்!
ஒட்டுமொத்த உலகையும் ஓரிரு மணிகளில் மயான அமைதியாக்கும் நாசகார நச்சு ஆயுதங்களையும், அணுகுண்டுகளையும் இருப்பில் வைத்துக் கொண்டு ஈரான் அணுஆயுதம் செய்யக்கூடுமென்று பூச்சாண்டிகாட்டி, இஸ்ரேலின் அணு ஆயுதம் குறித்து எதுவும் சொல்லாமல் மத்திய கிழக்கில் அமைதியைக் கெடுத்ததோடு இந்தியாவுக்கு அணுச்செரிவூட்டலுக்கான எவ்வித உதவியும் வழங்க வேண்டாம் என்று இதர நாடுகளை நிர்ப்பந்தித்து வரும் அமெரிக்க அதிபருக்கு "2009ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் விருதை" வழங்கியதன்மூலம் நோபல் விருதுமீதான நம்பகத் தன்மை குறைந்துள்ளது.
அமைதிக்காக அருந்தொண்டாறி வரும் எத்தனையோபேர் இருக்கும்போது ஒபாமாவே ஆச்சரியப்படும்படியாக "அமைதிக்கான நோபல் விருதை" கொடுத்திருப்பதன் மூலம் நோபல் விருதின் பெருமைக்கு பங்கம் வந்துள்ளது.
கடந்த சிலமாதங்களாக அடுத்தடுத்து விருதுகள் கொடுத்து/பெற்றுவரும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கே இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் விருதையும் வழங்கி இருக்கலாம். இலங்கை விசயத்தில் ஒபாமாவைவிட அமைதியாக இருந்ததால் இவ்விருதுக்கு கலைஞர் கருணாநிதியே தகுதி உடையவராவார்!
பின்குறிப்பு : உலக அமைதிக்கு எதிராக நானும் எதுவும் செய்யவில்லை. அடுத்த வருடம் என்பெயரை நோபல் விருதுக்கு பரிந்துரைத்தால் நான் மறுக்கப்போவதில்லை என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்கவே இப்பதிவு. :-)))