தமிழக அரசியலில் அற்புதம்! - அதிமுக-திமுக கூட்டணி ஆட்சி!!
Thursday, April 14, 2011

உறுப்பினர்களைவிட அதிகமான கோஷ்டிககளைக் கொண்டுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியால் இனி காமராஜர் ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்பதால் தங்கபாலுவை ஆளுநராக அறிவித்து மறைமுக காங்கிரஸ் ஆட்சி ஏற்படுதைத் தடுக்கும் நோக்கில் திமுக தலைவர் மு.கருணாநிதியும் அதிமுக தலைவி ஜெயலலிதாவுடன் கலந்தாலோசித்து திமுக-அதிமுக கட்சிகளை இணைத்து ஜெயலலிதா முதல்வராகவும் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் அற்புதம் நடந்தேறுகிறது.
குழுக்களாகப் பிரிந்து கிடந்த திராவிடக்கட்சிகள் ஒன்றாகிவிட்டதால் இனி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்று கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராகக் கழட்டிவிடப் படுகிறார்கள். ஜூன்-1,2011 இல் தமிழகத்தின் புதிய சட்டசபை தொடங்குகிறது. வைகோ பேரவைத் தலைவராக இருந்து வழிநடத்தும்படி கருணாநிதியின் அன்புவேண்டுகோள் ஏற்கப்பட்டு, தனது முதல் உரையைத் தொடங்குகிறார்.
வைகோ: ஏறத்தாழ 37 ஆண்டுகளுக்குப்பிறகு அண்ணாவின் ஆட்சி மீண்டும் மலர்ந்துள்ளது. பெரியார்,அண்ணா ஆவிகளுடனும், கலைஞரின் ஆசியுடனும் நடக்கும் நல்லாட்சியில் நான் அவைத் தலைவராக வீற்றிருப்பதில் உவகை கொள்கிறேன். மூதறிஞர் செந்தமிழ் காவலர் கருணாநிதி ஐயா அவர்களின் வாழ்த்துரையுடன் அவைநடவடிக்கைகளைத் தொடங்கலாம்.
கலைஞர்: மாண்புமிகு முதல்வர் அன்புச்சகோதரி ஜெயலலிதா அம்மையார் தலைமையில் தளபதி ஸ்டாலின் இணைந்து நாம் வாக்களித்தபடி எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். இந்த ஆட்சியில் சேதுக்கால்வாய் தூர்வாரப்பட்டு கூடுதலாக நவீன ராமர் பாலமும் அமைக்கப்பட வேண்டும். இத்திட்டத்திற்கு "சேதுராமர் கால்வாய் பாலம்" என்று பெயரிடுகிறேன்.
ஜெயலலிதா: மாண்புமிகு மூதறிஞர் கருணாநிதி அவர்களின் திருவாயால் இத்திட்டத்திற்கு சேதுராமன் என்று பெயரிட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சகோ.ஸ்டாலினுடன் இணைந்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்தப் பாலம் வழியாக வடஇலங்கைக்கு பெரியார்-அண்ணா நல்லுறவு பேருந்து செல்லும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்டாலின்: மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சித்தப்பா M.G.R அவர்களின் பெயரையும் சேர்த்து வைத்திருந்தால் MGR ன் விசுவாசிகளான அண்ணன் பண்ருட்டியார் இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பார். (தேமுதிகவில் சுதீஸ் கோஷ்டியால் ஓரங்கட்டப்பட்டதால் வேறுவழியில்லாமல் திராவிடக் குடும்பத்திற்கே திரும்பிவிட்டார்)
பண்ருட்டியார்: ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் எல்லோரும் ஒரே அணியாகியுள்ளோம். இதைக்காண 'வெள்ளை' எம்.ஜி.ஆர் நம்மோடு இல்லை என்பது வருத்தமாக உள்ளது. இனி எக்காரணம் கொண்டும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு கருப்பு பெயிண்ட் அடிக்க மாட்டேன்.
ஓ.பன்னீர் செல்வம்: துணைமுதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களே, நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி சுட்டுக் கொல்கிறார்கள். இதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று ஆலோசிக்கலாமா?
பொன்முடி: மாண்புமிகு கடற்பாசி வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள்தான் இதற்கு வழி சொல்ல வேண்டும்.
ஜெயக்குமார்: மாண்புமிகு இலவசங்கள் துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களே. தமிழக மீனவர்களைச் சுடாத இலங்கை கடற்படைக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.நிதியமைச்சர் பா.வளர்மதி இதற்கு ஒப்புக்கொள்வாரா?
பா.வளர்மதி: இலங்கை எல்லையில் அம்மா பெயரில் மிதக்கும் அரங்கம் ஒன்றை அமைத்து அதில் தினமும் கலைமாமணி நமீதாவின் தலைமையில் மானாட-மயிலாட நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதன்மூலம் இலங்கை கடற் படையினரின் கவனம் திரும்பும்போது,நமது மீனவர்கள் மீன் பிடித்து விட்டு பத்திரமாகத் திரும்பி விடலாம்.
செங்கோட்டையன்: ஊய்ய்.(விசில்.) சரியான திட்டம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் ஒரே கல்லில் இரண்டு மீன்கள்! எப்படியோ இனி மீனவர்கள் உயிரோடு திரும்பினால்தான் ஆட்சிக்கு நல்லபேர் கிடைக்கும்! வாழ்க புரட்சித் தலைவி!
ஜெயலலிதா: அன்புத் தம்பி செங்ஸ் அவர்கள் சகோதரி பா.வளர்மதியை புரட்சித் தலைவி என்று தவறுதலாகச் சொல்லியிருக்கக்கூடும்.மாண்புமிகு அவைத் தலைவர் அவர்கள் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிடும்படி உத்தரவிடுகிறேன்.
கலைஞர்:புரட்சித்தலைவி என்ற பட்டப்பெயரை சகோதரி ஜெயலலிதாதவிர வேறு யாருக்கும் கொடுப்பதை பார்த்துக்கொண்டு இந்த கருணாநிதி வ்சனம் எழுதிக்கொண்டு சும்மாயிருப்பானென்று யாரேனும் மூடநம்பிக்கைகொண்டு வைத்திருந்தால், தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
ஜெயலலிதா: மூதறிஞர் மு.கருணாநிதி அவர்கள் தனது ஓய்வுக்காலத்தை சினிமா பார்த்துக் கழிக்காமல் தனது பார்புகழ் செம்மொழிப் புலமைகொண்டு 'புரட்சித்தலைவி புராணம்' எழுதினால் வருங்கால சந்ததிகள் பயன்பெறுவர் என்று மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம்: மாண்புமிகு அம்மாவைவிட எனது எண்ணங்களைப் புரிந்தவர் எனக்குத் தெரிந்து யாருமில்லை.இதுபற்றி சகோ.ஸ்டாலினுடன் நேற்றே பேசினேன்.இதற்கான சிறப்புத் தீர்மானத்தை தம்பி திருமாவளவன் கொண்டுவந்தால் எவ்வித பரிசீலனையுமின்றி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆட்சிப்பொறுப்பேற்கும் முன்பே ஒப்புதல் வழங்கிவிட்டார்.
ஜி.கே மணி (ஸ்...ஜால்ரா சத்தம் காதைப் பிளக்கிறது.) விஜய.T.R..சிலம்பரசன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து புதுக்கட்சித் தொடங்கப் போவதாக செய்தி வந்துள்ளதே அதுபற்றியும் பேசலாமே!
மு.கருணாநிதி: சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. மீறிவந்தால் அரசியல்வாதிகள் சினிமாவிலும் 'நடிக்க' வேண்டிவரும் என்று பொதுவான எச்சரிக்கையை தம்பி கீ.வீரமணியிடம் சொல்லி விடுத்தால் தமிழினத்திற்கு நல்லது என்று நினைக்கிறேன்.
ஸ்டாலின்: அப்படிச்சொன்னால் உடன்பிறவா அன்புச் சகோதரி கற்புக்கரசி குஷ்பு வருத்தப்பட மாட்டாரா? அப்புறம்,சினிமாவளத்துறை அமைச்சர் தம்பி சரத்குமாரும் கோவிச்சுப்பார்.ஆகவே இப்பிரச்சினையை ஆறப் போடலாம்.
சுயேட்சையாகப் போட்டியிட்டுவென்ற டாக்டர் ராமதாஸ் இதைக்கேட்டதும் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்கிறார். பாமகவிலிருந்து விலக்கப்பட்ட டாக்டர் அன்புமணியும் கூடவே வெளிநடப்புச் செய்கிறார்.
அன்றைய அவை நடவடிக்கைகள் அனைத்தும் ஜால்ரா மயமாக இருந்தது. டாக்டர் ராமதாஸ் அன்புமணி தலைமையில் 2031 இல் ஆட்சிக்குவரும்வரை இனிமேல் அவைக்கு வரப்போவதில்லை என்றும் மீறி வந்தால் டாஸ்மாக் பாட்டிலால் என்னை அடியுங்கள் என்று சொல்லிவிட்டு அரசியல் துறவரம் போனதாக அரசு தொலைக்காட்சியான 'சன் நியூஸ்' தெரிவிக்கிறது.
*************
தமிழக அரசியல் உப்புசப்பு இன்றி போனதால் ஜூனியர் விகடன், நக்கீரன் ஆகிய பத்திரிக்கைகள் "30 நாட்களில் சரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி? "நக்கீரனின் கீரை வகைக் குழம்புகள்" போன்ற புத்தகங்களை வெளியிட்டு காலம்தள்ள முடிவு செய்துள்ளன.அதேபோல் சாட்டிலைட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் எந்த பரபரப்புமின்றி உழவர்உலகம்,கல்வி வழிகாட்டி போன்ற் நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பின.வலைப்பூக்களில் "விடைபெறுகிறேன்" என்ற தலைப்பிட்ட பல பதிவுகள் பின்னூட்டமின்றி காணப்பட்டன.
பிரபல ?!வலைப்பதிவர் அதிரைக்காரணுக்கு தமிழக அரசு வலைமாமணி விருது வழங்கி, அவரின் பதிவுகளை தமிழக பாடநூல் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் திட்டமிட்டு உள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது! :)
பி.கு: ஒருமாத அரசியல் களேபரங்களையும், எந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு என்ற ஜோதிட கணிப்புகளை கொஞ்சகாலம் மறக்க வேண்டி எழுதப்பட்டது. உண்மையில் இது நடந்து விட்டால் நான் வலைப்பதிவு எழுதுவதையே விட்டுவிடுவேன்!
Read more...