டீவிரவாதி தெரியுமா?

Tuesday, July 26, 2011

தினமலர் தீவிரவாதிகள் விசயத்தில் எப்போதுமே கொஞ்சம் பாரபட்சம் காட்டும் என்பதற்கு இன்றைய செய்தி இன்னொரு சாம்பிள்! தினமலர் செய்தியை அப்படியே படித்துவிட்டு தலைப்பை மீண்டும் ஒருமுறை சத்தம்போட்டு சொல்லுங்க.

திருச்சி: திருச்சியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருந்த, டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். அவரின் பின்னணியில் விடுதலைப்புலிகள் அல்லது தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருச்சி உடையான்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்கிற படையப்பா (44). இவர், கே.கே.,நகரில் உள்ள டீக்கடையில், டீமாஸ்டராக வேலை பார்கிறார். இவரது வீட்டில் ரகசியமாக வெடி குண்டுகள் தயாரித்து வருவதாக, கே.கே.,நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கே.கே.,நகர் இன்ஸ்பெக்டர் நிக்ஷன், எஸ்.ஐ.,க்கள் பால்ராஜ், ஷீலா மற்றும் போலீசார் நேற்று இரவு ஏழு மணிக்கு உடையான்பட்டியில் உள்ள ராமகிருஷ்ணன் வீட்டை சோதனையிட்டனர்.அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இரண்டு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதை கண்டு போலீஸர் அதிர்ச்சியடைந்தனர். வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.





வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமு சம்பவ இடத்துககு வந்து வெடிகுண்டுகளை கைப்பற்றி பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்தார். தொடர்ந்து வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்ரஸ் குண்டுகள், வயர் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றம் ஒன்னரை கிலோ வெடி மருந்தை கைப்பற்றினர்.இதுகுறித்து கே.கே.,நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த துணைகமிஷனர் ஜெயபாண்டியன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ராமகிருஷ்ணனுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். கைப்பற்றிப்பட்ட வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், அந்த குண்டு வெடித்தால் பெரிய பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. கே.கே.,நகர் பகுதியில் பெரும்பாலும் இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் வசிக்கின்றனர். எனவே, இச்செயலில் விடுதலைப்புலிகள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.தினமலர்

எனக்கு என்ன வருத்தம் என்றால் பெரும் பொருட்சேதமும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்த ராமகிருஷ்ணனை ஒரு இடத்தில்கூட தீவிரவாதி என்றோ அல்லது அவரது மதத்தையும் சேர்த்து __ தீவிரவாதி என்றோ செய்தி வெளியிடவில்லை.

தீவிரவாதம், தீவிரவாதி என்பதற்கெல்லாம் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் என்ன அளவீடு வைத்துள்ளன? டீவிரவாதி என்றாவது குறிப்பிட்டிருக்கலாமே!

Read more...

வருங்கால டாக்டருக்கு அவசர உதவி தேவை!

Monday, July 25, 2011

எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?

இப்படித்தான், நேற்று வலைப்பூவில் ராஜ் தொலைக்காட்சி செய்தி குறித்த ஓர் பதிவை வாசித்தபிறகு அன்றிரவு தூக்கம் தொலைந்தது! செய்தியொன்றும் பரபரப்பானது அல்ல. ஆனால் ஏனோ தெரியவில்லை அதை வாசித்த பிறகு எப்படியாவது உதவமுடியுமா?என்ற எண்ண ஓட்டம் மனதை அலைக்கழித்தது. செய்தி என்னவென்றால்,

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.

ராஜவேல் சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கூலித் தொழிலாளியின் மகனான ராஜவேல், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, வேறுபள்ளியில் படிக்க வைத்தால், +2வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த தனது வீட்டை விற்று, சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்தார். தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.



ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். கூலித்தொழிலாளியின் மகனான ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் அவரின் ஏழ்மை மருத்துவக்கல்லூரியில் சேரவிடாமல் அவரைத் துரத்துகிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய +2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் பட்டப் படிப்புக்குப் பணம் கட்ட வழியின்றி திணறி வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதுகுறித்த செய்தி ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகி, அதை எங்களூர் வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்கள்.

தேசியளவில் 16 வயதுடைய அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டம் ஒருபக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனினும், இவை எல்லாம் தொடக்க நிலையிலிருந்து குறிப்பிட்ட வகுப்புகள்வரை மட்டுமே கண்காணிக்கப்பட்டு வருகின்றன.கல்விக்கண் திறந்து கொண்டு எதிர்காலத்தில் பொறியாளராகவோ மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ ஆக வேண்டும் என்ற பலரது கனவுகள் SSLC, +2 தேர்வுகளுக்குப்பிறகு கானல்நீராக கலைவதற்குப் பின்னணியில் ஏழ்மையும் குடும்பச்சுமையும் உள்ளன!

மகனின் படிப்பாக வசித்த வீட்டை விற்றபின்னரும் மேல்படிப்புக்குச் செலவளிக்க வழியற்ற ஏழைகள் இருக்கும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது யார்மீதோ கோபம் வந்தாலும், அது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அலப்பரை செய்யும் அரசியல்வாதிகள், பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள ராஜவேலு போன்ற ஏழை பாரத ரத்னாக்களை அடையாளம் கண்டு உதவினால் புண்ணியமாகப் போகுமே!

இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு, பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!

நன்றி: இந்நேரம்.காம்



அன்புள்ள சகவலைப்பதிவர்களே!
இச்செய்தியை வலைப்பதிவர்கள் மீள்பதிவு செய்வதன்மூலம் அரசின் கவனத்திற்குக்கொண்டு சென்று இந்த மாணவணுக்கு உதவ முடியுமே!

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP