சும்மா...

Monday, June 20, 2005

'சும்மா' என்ற வார்த்தையை பெரும்பாலான தென் இந்தியர்கள் அவரவர் மொழிகளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உபயோகிக்கிறார்கள். "சும்மா" கெடந்த சங்கை ஊதிக் கெடுத்துப்புட்டான் என யாரும் "சும்மா" என்னை குற்றம் சொல்லாவிட்டால், "சும்மா" இது பற்றி அலசுவோம்.

ஏன் அதை தேவையில்லாமல் செய்தாய்? என்றால், "சும்மா" என்பது அத்தவறை சமாளிக்க உதவுகிறது.

காசு வேணாம்ப்பா. சும்மா வைத்துக் கொள்! என்றால் இலவசம் என பொருள்.

"சும்மா" சொல்லக் கூடாது சார்! இந்த வருஷம் கடுமையான வெப்பம்! என்றால் ஒரு நிகழ்வின் வீரியத்தை குறிக்க உதவுகிறது.

ஏய் கோ......., "சும்மா" கம்-முன்னு இரு - சென்னைத் தமிழில் அமைதியாக இரு என அர்த்தம்!

குறிப்பாக நம் தமிழர்கள், எதற்கெடுத்தாலும் "சும்மா" "சும்மா" (அடுக்குத் தொடர்?) "சும்மா" என்ற வார்த்தைய பிரயோகிக்கிறார்கள். ஏனெனில் பெரும்பாலும் "சும்மா" இருப்பது தமிழரின் பண்பு என ஒரு தமிழ் அறிந்த வட இந்திய நண்பர் சொல்கிறார். ஒருவகையில் இது உண்மை மாதிரி இருக்கு.

வட இந்திய மொழிகளிலோ அல்லது ஏனைய மொழிகளிலோ இது போன்ற "சும்மா" என்று அர்த்தப் படும் வார்த்தைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் ஏறக்குறைய "Simply", "Just" என்ற வார்த்தைகள் இவ்வர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றன.

"சும்ம"னாங்காட்டியும் மழுப்பாமல் உங்கள் கருத்தையையும் "சும்மா" Comments-ல போட்டு வைத்தால் யாராவது "சும்மா" இருப்பவர்கள் பயன் பெறுவார்கள்!

Read more...

தமிழில் 'பந்தா' பண்ணுவது எப்படி?

Sunday, June 19, 2005

இப்பவெல்லாம் எப்படி 'பந்தா' பண்ணுறதுன்னு தெரியல. புதுசா எதுனாச்சும் சொன்னால், 'பந்தா'ண்ணு தெரிந்து விடுகிறது. ஏதோ எனக்குத் தெரிந்த 'பந்தாவான' தமிழ் வார்த்தைகளை பட்டியலிட்டுள்ளேன். புதுசா உங்களுக்கும் எதாச்சும் தெரிஞ்சா கொஞ்சம் போட்டு வையுங்களேன்.

  • மாப்ள், என் விசிட்டிங் கார்டை வச்சுக்க. போன மாசம்தான் 1000 பிரிண்ட் பண்ணுனேன். எல்லாம் காலி.
  • நான் ரொம்ப பிஸியா இருப்பேன். எதுக்கும் என் Mobile/Cell -ல கால் பண்ணு.
  • இப்பவெல்லாம் என் Inbox full ஆயிடுது. அவ்வளவு Email வருது.
  • சே... ஒரே புழுக்கம்பா. ஏசி இல்லாம இருக்கிறது கஷ்டம்.
  • மாமு. ஏண்டா நேத்து Online ல இருந்துக்கிட்டு Response பண்ணல? ஸாரிடா..என் lover கூட Video Chat பண்ணிக்கிட்டு இருந்தேன்.
  • என்ன மாப்ள. சூ புதுசா இருக்கு? அது என் கசின் London ல வாங்குனது. எனக்கு பிரஸன்ட் பண்ணினான்(ள்).
  • காப்பியா? டீயா மாமு? - தொண்டை கர கரப்பா இருக்கு Mountain Dev சொல்லு மச்சி.
  • சே...என்ன Pizza இது. நம்ம ஊரு மசால் தோசை மாதிரி இருக்கு?

Read more...

இவையின்றி தமிழ் சினிமா இல்லை.

Wednesday, June 08, 2005

தமிழ் சினிமா தொழில்நுட்பத்தில் உலகத்தரத்துடன் போட்டி போட்டு தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும் சுத்த 'தமிழ்' சினிமாவாக ஒப்புக் கொள்ளப்பட வேண்டுமெனில், சில காட்சிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அவை:

வில்லனை கைது செய்து போலீஸ் ஜீப்பில் ஏற்றும் போது, ஜீப் பின்புறமிருந்து வில்லன் தலையை வெளியில் நீட்டிக் கொண்டே:

'என்னை போலீஸ்ல மாட்டி விட்டுட்டோமுன்னு சந்தோசப் படாதே! கூடிய சீக்கிரம் வெளியில் வந்து உன்னையும் உன் குடும்பத்தையும் என்ன செய்றேன்னு பார்!

***
அடிபட்டவரை அல்லது நோயாளியை அவசர வார்டில் சேர்த்து, வெளியில் ஒருவர் குறுக்கும் நெடுக்குமாக கையைப் பிசைந்து கொண்டே நடந்து கொண்டிருப்பார். அவரிடம் டாக்டர் ஸ்டெத்தாஸ் கோப்பை தோலில் போட்டுக்கொண்டே:

நல்ல வேலை! பேஷண்டை சரியான நேரத்தில் கொண்டு வந்தீர்கள். இல்லாவிட்டால் சொல்றதுக்கே கஷ்டமா இருக்குது!


***
ஹீரோ அப்பதான் டூயட் பாடிவிட்டு சந்தோசமாக வீட்டுக்குள் இருப்பார். அப்போது சில போலீஸ்காரர்கள் பரபரப்பாக வீட்டுக்குள் வருவார்கள்

இன்ஸ்பெக்டர்: ராமநாதனை கொலை செஞ்சதுக்காக உன்னை கைது பண்றோம்.
ஹீரோ : சார்! நான் எதுவுமே செய்யலை1 எனக்கு ஒன்னும் தெரியாது!! நான் அப்பாவி!!!
கன்ச்டபில்: (விலங்கை கையில் மாட்டிக் கொண்டே) எல்லாத்தையும் ஸ்டேசன்ல வந்து பேசிக்கோ. நட!


***
பீச்சில் காத்துக் கொண்டிருக்கும் ஹீரோயினிடம், தாமதமாக வரும் போது
ஹீரோ: என்ன மாலா, லேட்டா வந்தேண்ணு கோபமா!
ஹீரோயின்: ஹும். என்னோட பேசாதீங்க!
ஹீரோ: ஸாரி டியர். வர்ர வழில ஒரு சின்ன வேலை!
ஹீரோயின்: இதைவிட வேறு என்ன முக்கியமான வேலை?
****
ஹீரோ தீவிரமாக வில்லன்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். அப்போது காமெடியன் ஒரு மரப் பெட்டியை இப்படியும் அப்படியும் ஆட்டி காமெடி வில்லனை ஏமாற்றி முதுகில் ஒரு குத்து விடுவார்.
***
குழந்தையை தூக்கிக் கொண்டு வில்லன்கள் காரில் வேகமாக போகும்போது. ஹீரோ சில மீட்டர் தூரம் விரட்டிக் கொண்டே வருவார். எனினும் வில்லன்கள் வேகமாக காரில் சென்று விடுவார்கள். அப்போது ஒரு பைக் ரோட்டில் கிடக்கும், உடனே ஹீரோ அதை நிமிர்த்தி ஏறி உட்கார்ந்து கொண்டு அதோடு ஒரு காலை ஊண்றியபடியே சாய்வாக ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வில்லன்களை 10 நிமிசம் விரட்டுவார். விரட்டி வரும் ஹீரோவை வில்லன் ஜன்னல் வழியாக துப்பாக்கியில் சுடவேண்டும். ஆனால் ஹீரோ லாவகமாக பைக்கை ஓட்டி காரின் ஜன்னல் வழியாக வில்லனை அடித்து குழந்தையை காப்பாற்றுவார்.
***
ஒரு செய்யாத குற்றத்திற்காக தேடப்பட்டு வரும் ஹீரோ ரொம்ப நாள் கழித்து வீட்டிற்கு வருவார். அப்போது அவரின் அம்மா ஆனந்தக் கண்ணீருடன் மகனை அணைத்துக் கொண்டு மகனே எப்படிப்பா இருக்கே? என்பார். உடனே மகன், "அம்மா, நான் நிரபராதின்னு நிரூபிச்சுட்டு அந்த ராமலிங்கத்தை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பேன். அதுவரை இப்படிதாம்மா போலீசுக்கு ஒழிந்து வாழ வேண்டும்" என்பார். மகனே உனக்கு என் கையால ஒரு வாய் சோரு ஊட்டி விடுறேன்பா. உனக்கு ப் பிடித்த மீன் குழம்பும் சோறும் இருக்கு என்று நடு ராத்திரியில் ஒரு தட்டில் சாதத்தை பிசைந்து ஆசையுடன் ஊட்டி விடுவார்.
***
வில்லன்கள் ஹீரோவை ஹைவேயில் விரட்டி வருவார்கள். அப்போது இரண்டு ரோடுகள் பிரியும். ஒரு ரோட்டின் ஓரமாக சின்ன டீ கடை இருக்கும். அதில் ஒரு சிறுவன் (ஹாஜா சரீப்) இருப்பார். மூச்சிறைக்க வந்த வில்லன்களில் ஒருவன், தம்பீ, இந்த பக்கம் சிகப்பு சட்டையுடன் ஒரு ஆள் வந்தானா? என்பார். உடனே அந்த சிறுவன் "ஆமாண்ணே, இதோ அந்த ரோட்டில்தான் போனதை நான் பார்த்தேன்" என்பான். வில்லன்களும் அச்சிறுவன் காட்டும் ரோட்டில் ஓடுவார்கள். ஆனால் ஹீரோ அதற்கு மறுபுறம் உள்ள ரோட்டிலிருந்து திரும்பி வந்து, சிறுவனைத் தட்டி கொடுப்பார்.
***
வாழ்க்கை வெறுத்து கதாநாயகன் கவலையுடன் வீட்டில் இருப்பார். தற்கொலை செய்ய முடிவெடுத்து தன் கட்டில் அருகே இருக்கும் ஒரு பாட்டிலை எடுத்து மூடியை திறந்து 'மடக், மடக்' என குடித்துவிட்டு, மயங்கி விழுவார். பாட்டில் அவர் கையிலிருந்து நழுவி விழும். அதில் சிகப்பு எழுத்தில் "விஷம்" என்று எழுதி இருக்கும்.
***
இவையல்லாமல் சில முக்கியமான அம்சங்களும் உண்டு.
  • நாற்பது வயது ஹீரோ கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பார். அவர் 18 வயது ஹீரோயினுக்காக உருகி உருகி காதலிப்பார்.
  • நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, கருப்பு கூலிங் கிளாசுடன் சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே இருட்டில் வில்லன் விகாரமாக சிரித்துக் கொண்டே திரும்ப வேண்டும்.
  • ஹீரோவை முதன் முதலில் காட்டும் போது இரண்டு நிமிடத்திற்கு அவரின் சூவை மட்டும் காட்ட வேண்டும்.
  • டைட்டிலில் பெயர் போடும்போது 'மார்க்கெட்' இல்லாத நடிகரின் பெயரப் போடும்போது நட்புக்காக என்று கொட்டை எழுத்தில் போட வேண்டும்.
  • முதன் முதலாக சென்னைக்கு வந்து விட்டதை காட்ட சென்னை சென்ரல் ஸ்டேசனையும், வெளி நாட்டுக்குப் போய் விட்டதாக சொல்ல ஒரு பற்க்கும் பிளைட்டையும் காட்ட வேண்டும். மக்கள் புரிந்து கொள்வார்கள்.
  • ஹீரோக்களுக்கு புரட்சி மலையாளி, தன்மான கன்னடன், இளைய சிப்பாய் என்ற பட்டங்களையும் மறக்காமல் போட வேண்டும்.

இன்னும் சில காட்சிகள் உங்கள் மனதை கவர்ந்திருக்கலாம். அதையும் கொஞ்சம் எழுதிப் போடுங்களேன். புதிதாக தமிழ் சினிமா எடுப்பவர்களுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP