சிறந்த பின்னூட்டத்திற்குப் பரிசு!
Monday, August 25, 2008
அரைக்கிலோ கருவாடு பத்து மில்லியன் டாலர், ஒரு கிலோ காய்கரி ஐந்து மில்லியன் டாலர், ஒரு கிரேட் முட்டைகள் 600 மில்லியன் டாலர் என்றால் ஒரு கறிக்கோழியின் விலை? காலைச் சிற்றுண்டிக்கு கிலோ கணக்கில் பணத்தைக் கையில் சுமக்க வேண்டும். தொண்டை அடைத்து, குளிர்பானம் குடிக்கலாம் என்று விலையைக் கேட்டால் நெஞ்சே அடைக்கும்!
படத்திலுள்ள விசயம் உலகின் ஒரு பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. மில்லியன் கணக்கில் அமெரிக்க டாலர்களாகப் பொருள் குவிக்கும் வல்லானுக்கு ஒரு நீதி, அதே மில்லியன் டாலர் ஜிம்பாப்வே டாலராக இருந்தால் அவனுக்கு ஒரு நீதியா?
இலட்சங்களில் வைத்திருந்தால் லட்சாதிபதி, மில்லியனில் புழங்கினால் மில்லியனர், கோடிகளில் புரண்டால் கோடீஸ்வரன், பில்லியன் கணக்கில் சொத்துக் குவித்தால் பில்லியனர் என்று உலகில் நூற்றுக் கணக்கான ட்ரில்லியனர் (நம்மூர் அம்பானி உட்பட) என்று நீதிவகுத்தவனைக் கண்டால் வகுந்து எடுக்கத்தோன்றுகிறது.
அடப்பாவிகளா! இப்படி கோடீஸ்வரர்கள் ??? வயிற்றில் அடித்து வல்லான் பொருள் குவிக்கும் அநீதியைப் பார்க்கும்போது, அந்நியச்செலவாணியைக் கண்டுபிடித்த அயோக்கிய................... யாரடா என்று கேட்கத் தோன்றுகிறது!
-------------------------------------
பிச்சைக்காரர் : அம்மா தாயே! சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு ஒரு மில்லியன் டாலர் பிச்சை போடுங்கம்மா!
-------------------------------------
அதிகாரி: யோவ்! அறிவிருக்கா? உன்னை யாருய்யா லஞ்சத்தை ஜிம்பாப்வே டாலராகக் கேட்டது?
-------------------------------------
வங்கியில்: யோவ்! செக்கிலுள்ள கட்டத்திற்கு வெளியில் எழுதக்கூடாதுன்னு எத்தனை பேருக்கய்யா சொல்றது?
-------------------------------------
மனைவி: ஏங்க! உங்க நண்பரிடம் பணம் கடன் வாங்கப்போயிட்டு சும்மா வர்ரீங்களே! இல்லேன்னுட்டாரா?
கணவன்: அடிபோடி!அதை வீடுவரை ஆட்டோவில் வைத்து கொண்டு வந்ததால் ஆட்டோ வாடகைக்கே சரியாக இருந்தது!
-------------------------------------
குறிப்பு: உள்ளக்குமுறலை நச்சென்று சொல்லும் சிறந்த பின்னூட்டத்திற்கு மில்லியன் டாலர் பரிசு! (ஹி...ஹி...ஜிம்பாப்வே டாலரில்தான்!)