ஆஸ்கார் விருது - அமெரிக்கா வீசிய எலும்புத் துண்டு?
Wednesday, February 25, 2009
நம்நாட்டு பாஸ்மதிக்கோ அல்லது மஞ்சளுக்கோ அமெரிக்க நிறுவனம் ஒன்று ISO தரச்சான்று வழங்கினால் நமக்குப் பெருமையா? ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பதைப் பார்த்து நமது பிரதமர், ஜனாதிபதி, நிதியமைச்சர்,சபாநாயகர்,முதலமைச்சர் என சகலஅரசியல் அதிகார மட்டங்களும் அடித்தட்டு இந்தியனும் ஆஸ்கார் விருது கிடைத்தது குறித்து பெருமைபட்டுக் கொள்கிறார்கள்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, விருது பெற்றது ஒவ்வொரு இந்தியனுக்கும் மகிழ்வைத் தருவதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறியுள்ளார்.தமிழக சட்டசபையில் புகழாரம் சூட்டியதோடு, முன்னாள் நிதியமைச்சரான நமது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இவ்விருதுக்கு வரிவிலக்கு அளிக்கவும் பரிந்துரைக்கபடுமென்று சொல்லி தேசப்பற்றையும் அமெரிக்க மோகத்தையும் வெளிக்காட்டியுள்ளார்.
வளரும் நாடுகளில் இதுபோன்ற அமெரிக்க அங்கீகாரங்களைப் பிரதானப் படுத்தி,சர்வதேச அங்கீகாரமாக மக்களை நம்பவைக்கும் முதலாளித்துவ வணிக யுக்திகளின் ஒரு பகுதியே திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருது. அழகிப்போட்டிகள் மூலம் அழகையும் பெண்மையையும் சந்தைப்படுத்தி வயிறுவளர்த்தது போதாதென்று இந்திய திரைப்படங்களுக்கு விருது வழங்கி மேலும் சுரண்டலுக்கு அடித்தளமாகவே இந்த ஆஸ்கார் விருது வழங்கும் வைபவம் நிகழ்ந்து வருகிறது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் "சர்வதேசத் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு இந்திய தயாரிப்பு விருது பெற்றதும் அதை ஒரு தமிழனும் மலையாளியும் சாதித்திருப்பது உலகளாவிய அங்கீகாரம்தானே" என்றும் சிலர் கேட்கக்கூடும். நுகர்வுப் பொருட்களுக்கு வழங்கப்படும் தரச்சான்றுகள் போல், திரைப்படங்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க தரச்சான்றே ஆஸ்கர் விருது. அவ்வளவுதான்!
நடிகர் கமலாஹாசன் சொல்வதுபோல்,"இது ஒரு உலகத்தரச்சான்றல்ல; இந்திய தரச்சான்றைப்போல் ஆஸ்கார் என்பது அமெரிக்கத் தரச்சான்று. இந்தி(ய) சினிமா,அமெரிக்கா என்ற ஒரு நாட்டில் தயாராகும் படங்களின் தரத்தை எட்டியுள்ளதற்கான சான்றே தவிர ஓர் உலகளாவியத் தரச்சான்று அல்ல".
அமெரிக்கா தரச்சான்று கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நமது இந்திய தயாரிப்புகள் சர்வதேசத் தரத்திற்கு உயர்ந்து பல ஆண்டுகளாகி விட்டன என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?. ஓரிரு வருடங்களுக்குமுன்பு சக்கைபோடுபோட்ட 'லகான்' படத்திற்கும் ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்கத் திரைப்படத்திற்கு நம்நாட்டு ஃபிலிம்பேர் விருது கிடைத்தால் அமெரிக்கர்கள் பெருமையாகக் கருதுவார்களா? மாட்டார்கள். பிறகு ஏன் நமக்கு வெறும் பெருமை? அமெரிக்காவின் அங்கீகாரத்திற்காக நம் அருமை பெருமைகளை அடகுவைக்கும் கீழ்த்தரமான ஏக்கப் போக்கு மாறவேண்டும். அமெரிக்கா மட்டுமே உலகமா?
அமெரிக்க ஆஸ்கார் விருது கிடைத்தால்தான் அது உலகத்தரமுள்ளதென்ற முதலாளித்துவ மாயை நாட்டின் அடிமட்டக் குடிமகன் முதல் உயர்மட்ட அதிகாரப்பீடம்வரை சினிமா மோகம் வியாபித்திருப்பது உலகிலேயே நமது நாடாகத்தான் இருக்கும்! சந்தடி சாக்கில் ஒபாமாவும் இப்படத்தைக்காண ஆவல் கொண்டிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது நல்ல CHANGE!
விருதுபெற்றதும், "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று விழாமேடையில் A.R.ரஹ்மான் தமிழில் பெருமையாகக் குறிப்பிட்டதன்மூலம் தமிழ் மொழிக்கு தற்போதுதான் அங்கீகாரம் கிடைத்திருப்பதுபோல் மகிழ்வது எத்துணை பேதமை?
எவ்வாறாயினும்,எவ்வளவு புகழின் உச்சிக்குச் சென்றாலும் தன்னைவிட புகழுக்குரிய சக்தி ஒன்று உள்ளது என்று நம்பியதோடு மட்டுமின்றி அதை உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் மேடையில் பேசி, திலீப் குமாராக இருந்து A.R.ரஹ்மானாக இஸ்லாத்தின்பால் தன்னை இணைத்துக் கொண்ட இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் தன்னடக்க வெளிப்பாடு நிச்சயம் பாராட்டுக்குரியது.
6 comments:
//அமெரிக்கா வீசிய எலும்புத் துண்டு// 100% correct.
//நமது இந்திய தயாரிப்புகள் சர்வதேசத் தரத்திற்கு உயர்ந்து பல ஆண்டுகளாகி விட்டன என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?.//
நீங்க சொல்லுறது ரொம்ப சரிங்க. நான் கூடா நேத்து ‘வில்லு’ பார்த்தப்ப இதேதாங்க மனசுல நினைச்சேன்.
//நுகர்வுப் பொருட்களுக்கு வழங்கப்படும் தரச்சான்றுகள் போல், திரைப்படங்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க தரச்சான்றே ஆஸ்கர் விருது. அவ்வளவுதான்!//
அப்படிங்களா... நானெல்லாம்... ஆஸ்கர்ங்கறது ஒரு ‘அங்கீகாரம்’ன்னு இல்ல நினைச்சிட்டு இருந்தேன். நீங்க சொல்லிதான்... அது ‘தர சான்று’-ன்னு புரியுது.
தட்டுறதுக்கு முன்னாடி கொஞ்சூண்டு யோசிங்கண்ணா.
கடைய கட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. கலக்குங்க!!!!
//நீங்க சொல்லுறது ரொம்ப சரிங்க. நான் கூடா நேத்து ‘வில்லு’ பார்த்தப்ப இதேதாங்க மனசுல நினைச்சேன்.//
ஹாலிவுட் பாலா,
நான் இந்திய தயாரிப்புகள்னு சினிமாவை மட்டும் சொல்லவில்லை. (ஹாலிவுட்டிலும் வில்லு மாதிரியான குப்பைகள் ;-) நிறைய கிடக்குது)
ஏஆர் ரகுமான் பற்றிய ஒரு பத்திரிக்கையாளரின் நினைவோடை பத்து நிமிடம்தான் பேட்டிக்காக ஒதுக்கப்பட்ட நேரம். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ’எனக்கு இசை குறித்த ஞானம் அவ்வளவாக கிடையாது’ என்று ஆரம்பித்தேன். அதற்கு அவர் தந்த பதில்தான் ஆச்சரியம் : ’ எனக்கும்தான். கத்துக்கிட்டே இருக்கேன். சும்மா எது வேணாலும் பேசலாம். டென்ஷனாகாதீங்க’
அதிரைக்காரன் அவர்களே,
"திலீப் குமாராக இருந்து A.R.ரஹ்மானாக இஸ்லாத்தின்பால் தன்னை இணைத்துக் கொண்ட இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் தன்னடக்க வெளிப்பாடு நிச்சயம் பாராட்டுக்குரியது" - இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ரஹ்மானின் தன்னடக்கத்தைப் பாராட்டுகிறீர்களா அல்லது அவர் இஸ்லாமியராக மாறியது தான் அந்த தன்னடக்கத்துக்குக் காரணம் என்கிறீர்களா? முன்னதைப் பாராட்டினால் தவறில்லை. பின்னதாய் இருப்பின் அது சரியில்லை என்றே நினைக்கிறேன். கொஞ்சம் விளக்க முடியுமா?
மிக்க அன்புடன்,
இசைப்பிரியன்.
ஆஸ்கர் பற்றிய கருத்துகள் சில உண்மையே..
===================================
ஆனால் உலகதரம்:
நடிப்பு: சுந்தர். சி.
இயக்கம்: பேரரசு
இது இரண்டு போதும் பல ஆஸ்கர் நிச்சயம்..
யார் வேணா என்ன வேணா செய்யலாம் அதான் தமிழ் சினிமா..
Post a Comment