ஏழாம் அறிவு இரண்டாம் பாகத்தில் விஜயகாந்த்!!!

Wednesday, November 02, 2011

தமிழ் திரைப்படங்களில் பாகிஸ்தானைப் பற்றி சித்தரித்து போரடித்து விட்டதோ என்னவோ. தற்போது சீனா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்கள்.

தீபாவளிக்கு வெளியான படங்களில் ஏழாம் அறிவு என்ற படம், சீனர்களின் வீரத்துறவியாக வணங்கப்படும் "டாமோ" 'சங்கரராமன் படுகொலை புகழ்' காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மராக சூர்யா நடிக்க A.R.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் போதிதர்மர் சீனாவுக்குச் சென்றபோது முதலில் சீனர்கள் தீயசக்தி என்று கருதி அவரை வெருத்ததனால் காட்டில் சுற்றிக்கொண்டிருந்தபோது அங்குள்ள கிராமத்தில் விஷக் காய்ச்சலால் பலர் மரணிக்கின்றனர். விஷக்காய்ச்சல் தாக்கிய ஒரு சிறுமியை போதிதர்மர், இந்தியாவிலிருந்து கற்றுச்சென்ற வைத்திய முறைகள் மூலம் குணப்படுத்தியதால், அம்மக்கள் அவரை மிகவும் மதிக்கின்றனர்.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் சீன பழங்குடியினரால் அந்த கிராமமக்கள் தாக்கப்பட்டபோது தன்னுடைய வர்மக்கலையால் அவர்களையும் விரட்டி அடித்ததால் காஞ்சிபுரம் போதி தர்மர் சீனாவில் 'டாமோ'வாகிறார்.

இதனிடையே, இந்தியாவின் பிராந்திய வளர்ச்சியைப் பிடிக்காத சீன அரசு, அத்தகைய விஷக்காய்ச்சல் கிருமியை இந்தியாவில் பரப்ப திட்டமிடுவதாகவும், அதை முறியடிக்க போதி தர்மரின் மரபணுக்களைத் தூண்டிவிட்டு அவரது சக்திகளை மீட்டெடுப்பதாக கதை ஒருவழியாக முடிகிறது.

ஏழாம் அறிவு படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜயகாந்த் நடிக்க "எட்டாம் அறிவு" எடுக்கப்பட்டால் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இமயமலைக்குச் சென்ற போதிதர்மரை சீன ராணுவம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் உதவியுடன் கடத்திச் சென்று ராவல்பிண்டியில் சிறைவைக்கிறது. அவரை மீட்க விஜயகாந்த் பாகிஸ்தான் செல்கிறார்.

இந்தச்சூழலில் அங்கு நடக்கும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாகிஸ்தான் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தான் பிரதமர் ஆனதால் வந்த விசயத்தையே விஜயகாந்த் மறந்துவிடுகிறார்.

இந்நிலையில் விஜயகாந்த் பாகிஸ்தான் பிரதமராகி விட்டதால், இனி தைரியமாக இந்தியாவிற்குள் ஊடுறுவலாமென திட்டம் தீட்டுகிறார்கள். இதை பிரதமர் என்ற முறையில் உளவுத்துறை தலைவர் விஜயகாந்திடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென்று விஜயகாந்துக்கு இந்திய தேசப்பற்று வந்து தொலைக்கிறது. கோபத்தில் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரோடு விஜயகாந்த் ஒத்தைக்கு ஒத்தையாக பனியனுடன் சண்டையிடுகிறார்.

போதிதர்மருக்கு வர்மக்கலை தெரியும் என்றால் விஜயகாந்துக்கு மல்யுத்தம் கைகொடுக்கிறது. உளவுத்துறை காவலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே விஜயகாந்தை நெருங்கும்போது அத்தனை குண்டுகளையும் தன்வாயில் கவ்வுகிறார். காவலாளியிடமிருந்த துப்பாக்கியிலுள்ள எல்லா தோட்டாக்களும் முடிந்து விடுகிறது. உடனே விஜயகாந்த் தன் வாயால் கவ்விய அத்தனை குண்டுகளையும் அவனை நோக்கி துப்புகிறார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்ற காவலாளிகள் விஜயகாந்த் வாயிலிருந்து லிங்கம் கக்குவதாகக் கதைகட்டி விடுகின்றனர். விஜயகாந்தின் புகழ் வடஇந்தியாவிலும் பரவுகிறது.

இந்தியப் பிரதமராக இருக்கும் ராகுல்காந்தி, பாகிஸ்தான் பிரதமர் விஜயகாந்தை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கிறார். பிரதமர் ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்க மறுத்து, இந்தியா பாகிஸ்தானில் நடத்தும் எல்லைதாண்டும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தாதவரையிலும், கராச்சி தொடர்குண்டு வெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட குல்பர்கான் சிங்கை ஒப்படைக்க வேண்டும் என்று அதிரடியாக அறிவித்து, அதுவரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வரப் போவதில்லை என்றும் அறிவிக்கிறார்.

இதனிடையே, இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்தியா பயிற்சி கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனாவும் எச்சரிக்கிறது. பாகிஸ்தானுக்கெதிராக இந்தியாவைத் தூண்டுவதாக விஜயகாந்த் அமெரிக்காவை எச்சரிப்பதோடு, பொருளாதார மந்தநிலை மற்றும் வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டங்களால் ஏழைநாடாகி விட்ட அமெரிக்காவுக்கு இனி பொருளாதார உதவிகள் செய்யப்போவதில்லை என்றும் அறிவிக்கிறார்.

பாகிஸ்தான் சிறையிலிருக்கும் சூர்யாவை மீட்டுக்கொண்டு வருவதாகச் சொல்லிச்சென்ற விஜயகாந்த், திடீரென அந்நாட்டு பிரதமராகி விட்டதால் படத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் முருகதாஸ் திணறுகிறார். அப்போது, க்ராஃபிக்ஸ் யுக்தியைப் பயன்படுத்தி விஜயகாந்தை பாம்பாகவும், சூர்யாவை புறாவாகவும் மாற்றி இந்தியா கொண்டு வருவதுபோல் கதையை அமைத்து ஒருவழியாக படம் முடிவடைகிறது!

இந்தப் படத்தில் விஜயகாந்த் சொந்தக்குரலில் பாகிஸ்தான் கவ்வாலி பாடலைப் பாடும்படியும் செய்தால் துபாயில் டாக்ஸி ஓட்டும் படான்களும் படத்தை விரும்பி பார்ப்பார்கள்!

Read more...

மதவெறி தலைக்கேறி சாமியாடும் சுப்ர'சனியன்' சாமி!

Saturday, August 13, 2011


"I have travelled across the length and breadth of India and I have not seen one person is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage and therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their selfesteem, their native culture and they will become what we want them, a truly dominated nation"


Lord Macaulay’s address to the British parliament on 02-02-1855

பிரிட்டிஸ் காலணியாதிக்க சக்திகள் இந்தியாவுக்குள் வணிகநோக்கில் ஊடுறுவி இந்தியாவை கைப்பற்றுவதற்கு சில வருடங்களுக்கு முன்னதாக மெக்காலே என்ற பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவைச் சுற்றிப்பார்த்துவிட்டு இறுதியா 02-02-1855 அன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசும்போது இந்தியாவைப் பற்றி சொன்ன தகவல்களின் சுருக்கம்தான் மேற்கண்ட உரை. அதன் மொழியாக்கம்:

"இந்தியா முழுவதும் பயணித்தபோது ஒரேயொரு பிச்சைக்காரர் அல்லது திருடரையோ காண முடியாதளவுக்கு செல்வ வளமுள்ள தேசம்.இதன் சமூக மதிப்பு மற்றும் மேன்மையான மக்களைக் காணும்போது,முதுகெலும்பாக விளங்கும் இவர்களின் தெய்வீக மற்றும் பாரம்பர்ய பின்னணியை உடைக்கும்வரை இந்த தேசத்தை நம்மால் வெல்லமுடியும் என்று கருதவில்லை. ஆகையால், அவர்களின் பண்டைய கல்விமுறை மற்றும் நாகரிகத்தை மாற்றியமைத்து, இந்தியர்கள் அவற்றிலிருந்து அந்நியப்பட்டு,ஆங்கிலம்தான் சிறந்தது மற்றும் அவர்களுடையதை விடவும் சிறப்பானது என்று எண்ணும்போது, இந்தியர்கள் தங்கள் சுயமரியாதையை இழந்து நாம் விரும்பியவாறு அவர்கள் மாறும்போது உண்மையிலேயே நாம் அவர்களை வெற்றிகொள்ள முடியும்"

மொத்த தமிழ்நாட்டிலும் மூன்றிலக்கங்களைக்கூட தாண்டாது சுப்ரமணியன் சாமி என்ற அமெரிக்க உளவாளியின் ஜனதா கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை.இந்திய அளவில் அரசியல் கோமாளி என்று அறியப்படும் சுப்ரமணிய சாமி,சமீபத்தில் நடந்த (நடத்தப்பட்ட?) மும்பை குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து DAN ஆங்கில பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்பது எப்படி?(Analysis: How to wipe out Islamic terror) என்ற கட்டுரையில் இந்திய முஸ்லிம்களுக்கும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் எதிராக விஷம் கக்கியுள்ளார். இவனின் உளரலை வழக்கமான உளரல்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாதளவு பிரவீன் தொகாடியாவை மிஞ்சும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியிருப்பது கண்டிக்கத்தக்கது.

//We need a collective mindset as Hindus to stand against the Islamic terrorist. The Muslims of India can join us if they genuinely feel for the Hindu. That they do I will not believe unless they acknowledge with pride that though they may be Muslims, their ancestors were Hindus. If any Muslim acknowledges his or her Hindu legacy, then we Hindus can accept him or her as a part of the Brihad Hindu Samaj (greater Hindu society) which is Hindustan. //

இந்திய முஸ்லிம்களின் முன்னோர்கள் ஒருகாலத்தில் இந்துக்கள் என்பதால்,இஸ்லாமிய தீவிரவாதத்திற்கெதிராக முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டுமாம்.நல்லது! ஒத்துழைக்கலாம். சு.சாமியின் முன்னோர்களால் தீவிரமாகத் தினிக்கப்பட்ட இந்துத்வா வர்ணாஸ்ரமக் கொள்கையிலிருந்து விடுதலைபெற்று இஸ்லாத்தை தழுவிய முன்னாள் இந்துக்களான இன்றைய முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத்வா தீவிரவாதங்களுக்கு எதிராக யாரிடம் ஒத்துழைப்பு கேட்பது என்பதை சு.சாமி தெளிவுபடுத்துவாரா?

குண்டுவெடிப்பின்போது ஏற்பட்ட சோகத்தில் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகப் பேசுவது நியாயமானது.ஆனால்,அவ்வாறு பேசும் கருத்துக்கள் இன்னொரு சாராருக்கெதிரான விஷம் தோய்ந்த வார்த்தைகளாக இருப்பதை அறிவார்ந்த எவரும் நிச்சயம் ஏற்க மாட்டார்கள்.இந்தியாவின் முதல்நிலை பிரச்சினையாக 'இஸ்லாமிய' தீவிரவாதம் இருப்பதாகக் கதையளப்பது,அதைவிடவும் முதன்மைப் பிரச்சினையாக இருக்கும் இந்துத்வா தீவிரவாதத்தை பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதை தமிழக 'கோயபல்ஸ்' சுப்ரமணிய சாமி உணர்ந்தாரா என்று தெரியவில்லை!

//Fanatic Muslims consider Hindu-dominated India “an unfinished chapter of Islamic conquests”. All other countries conquered by Islam 100% converted to Islam within two decades of the Islamic invasion. Undivided India in 1947 was 75% Hindu even after 800 years of brutal Islamic rule. That is jarring for the fanatics.//

இந்தியாவை ஒருங்கிணைத்த மொகலாயர்களின் ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்ற பலன்களைவிட பன்மடங்கு பலன்களை அரசவை பார்ப்பன ஆலோசகர்கள் அனுபவித்த வரலாற்றை சு.சாமி திரிக்க முயல்கிறார்.இஸ்லாம் வெற்றிகொண்ட நாடுகளிலெல்லாம் 20 ஆண்டுகளில் 100% மக்களும் முஸ்லிம்களாக மதம்மாற்றப்பட்டார்கள் என்பது உண்மையெனில் 2011 இலும் 800 வருடங்களுக்கும் மேலாக இஸ்லாமியர்களின் ஆளுகைக்குள் இருந்த இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பது ஏன் என்பதற்கு திருவாளர் சுப்ரமணியன் என்ன விளக்கம் தரப்போகிறார்?

//India that is Bharat that is Hindustan is a nation of Hindus and others whose ancestors were Hindus. Others, who refuse to acknowledge this, or those foreigners who become Indian citizens by registration, can remain in India but should not have voting rights (which means they cannot be elected representatives).//

இந்தியா இந்துக்களின் தேசம் என்றும் அவர்களின் முன்னோர்களும் இந்துக்களே என்பதையும் ஒப்புக்கொள்ளாத, பதிவுகளில் மட்டுமே இந்தியர்களாக இருப்பவர்கள் இந்தியாவில் இருக்கலாமாம்,ஆனால் தங்களுக்கான மக்கள் மன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டுரிமை அவர்களுக்குக் கூடாதாம்! முன்னாள் இந்துக்களுக்கு சு.சாமி தரும் மரியாதையைப் பார்த்தீர்களா! மேலே இடம்பெற்றுள்ள மெக்காலேயின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள இந்தியாவை விட்டுவைத்தவர்கள் யாரென்று சுப்பிரமணியனுக்கு தெரியுமா?

அதெல்லாம்சரி! குறுநில மன்னர்களின் பிரதேசங்களாக சிதறியிருந்த இந்தியா என்ற அகண்டபாரதம் யாரால் ஒருங்கிணைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது என்பதை வந்தேறி வகையறா சு.சாமிக்கு யாராவது இந்திய வரலாறு பாடமெடுத்தால் நல்லது.அதை உச்சநீதிமன்றத்தில் குட்டுபட்டு வேறுவழியின்றி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள சமச்சீர் கல்விமுறை பாடத்திட்டங்களிலிருந்து செய்தாலும் வரவேற்கத்ததக்கதே!

இந்தியாவில் முஸ்லிம்களின் தேசப்பற்றைக்குறைக்கூற சீன/அமெரிக்க உளவாளி சுப்ரமணிய சாமிக்கு சற்றும் உரிமையில்லை. இந்தியா எங்கள் தாய்நாடு மட்டுமல்ல! தந்தைநாடும்கூட!

ஜெய் அல் ஹிந்த்!!!

Read more...

டீவிரவாதி தெரியுமா?

Tuesday, July 26, 2011

தினமலர் தீவிரவாதிகள் விசயத்தில் எப்போதுமே கொஞ்சம் பாரபட்சம் காட்டும் என்பதற்கு இன்றைய செய்தி இன்னொரு சாம்பிள்! தினமலர் செய்தியை அப்படியே படித்துவிட்டு தலைப்பை மீண்டும் ஒருமுறை சத்தம்போட்டு சொல்லுங்க.

திருச்சி: திருச்சியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருந்த, டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். அவரின் பின்னணியில் விடுதலைப்புலிகள் அல்லது தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருச்சி உடையான்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்கிற படையப்பா (44). இவர், கே.கே.,நகரில் உள்ள டீக்கடையில், டீமாஸ்டராக வேலை பார்கிறார். இவரது வீட்டில் ரகசியமாக வெடி குண்டுகள் தயாரித்து வருவதாக, கே.கே.,நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கே.கே.,நகர் இன்ஸ்பெக்டர் நிக்ஷன், எஸ்.ஐ.,க்கள் பால்ராஜ், ஷீலா மற்றும் போலீசார் நேற்று இரவு ஏழு மணிக்கு உடையான்பட்டியில் உள்ள ராமகிருஷ்ணன் வீட்டை சோதனையிட்டனர்.அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இரண்டு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதை கண்டு போலீஸர் அதிர்ச்சியடைந்தனர். வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.





வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமு சம்பவ இடத்துககு வந்து வெடிகுண்டுகளை கைப்பற்றி பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்தார். தொடர்ந்து வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்ரஸ் குண்டுகள், வயர் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றம் ஒன்னரை கிலோ வெடி மருந்தை கைப்பற்றினர்.இதுகுறித்து கே.கே.,நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த துணைகமிஷனர் ஜெயபாண்டியன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ராமகிருஷ்ணனுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். கைப்பற்றிப்பட்ட வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், அந்த குண்டு வெடித்தால் பெரிய பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. கே.கே.,நகர் பகுதியில் பெரும்பாலும் இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் வசிக்கின்றனர். எனவே, இச்செயலில் விடுதலைப்புலிகள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.தினமலர்

எனக்கு என்ன வருத்தம் என்றால் பெரும் பொருட்சேதமும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்த ராமகிருஷ்ணனை ஒரு இடத்தில்கூட தீவிரவாதி என்றோ அல்லது அவரது மதத்தையும் சேர்த்து __ தீவிரவாதி என்றோ செய்தி வெளியிடவில்லை.

தீவிரவாதம், தீவிரவாதி என்பதற்கெல்லாம் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் என்ன அளவீடு வைத்துள்ளன? டீவிரவாதி என்றாவது குறிப்பிட்டிருக்கலாமே!

Read more...

வருங்கால டாக்டருக்கு அவசர உதவி தேவை!

Monday, July 25, 2011

எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு செய்திகளைக் கேட்டு பதைபதைத்தவர்கள் நேற்றுமுன் தினம் நார்வேயில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு குறித்து கவலைப்பட்டனரா என்று தெரியவில்லை! மனித உயிர்கள்மீதான மதிப்புகூட நாட்டுக்குநாடு வேறுபடுமா என்ன?

இப்படித்தான், நேற்று வலைப்பூவில் ராஜ் தொலைக்காட்சி செய்தி குறித்த ஓர் பதிவை வாசித்தபிறகு அன்றிரவு தூக்கம் தொலைந்தது! செய்தியொன்றும் பரபரப்பானது அல்ல. ஆனால் ஏனோ தெரியவில்லை அதை வாசித்த பிறகு எப்படியாவது உதவமுடியுமா?என்ற எண்ண ஓட்டம் மனதை அலைக்கழித்தது. செய்தி என்னவென்றால்,

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.

ராஜவேல் சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கூலித் தொழிலாளியின் மகனான ராஜவேல், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, வேறுபள்ளியில் படிக்க வைத்தால், +2வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த தனது வீட்டை விற்று, சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்தார். தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.



ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். கூலித்தொழிலாளியின் மகனான ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

ஆனால் அவரின் ஏழ்மை மருத்துவக்கல்லூரியில் சேரவிடாமல் அவரைத் துரத்துகிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய +2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் பட்டப் படிப்புக்குப் பணம் கட்ட வழியின்றி திணறி வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதுகுறித்த செய்தி ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகி, அதை எங்களூர் வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்கள்.

தேசியளவில் 16 வயதுடைய அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டம் ஒருபக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனினும், இவை எல்லாம் தொடக்க நிலையிலிருந்து குறிப்பிட்ட வகுப்புகள்வரை மட்டுமே கண்காணிக்கப்பட்டு வருகின்றன.கல்விக்கண் திறந்து கொண்டு எதிர்காலத்தில் பொறியாளராகவோ மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ ஆக வேண்டும் என்ற பலரது கனவுகள் SSLC, +2 தேர்வுகளுக்குப்பிறகு கானல்நீராக கலைவதற்குப் பின்னணியில் ஏழ்மையும் குடும்பச்சுமையும் உள்ளன!

மகனின் படிப்பாக வசித்த வீட்டை விற்றபின்னரும் மேல்படிப்புக்குச் செலவளிக்க வழியற்ற ஏழைகள் இருக்கும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது யார்மீதோ கோபம் வந்தாலும், அது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அலப்பரை செய்யும் அரசியல்வாதிகள், பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள ராஜவேலு போன்ற ஏழை பாரத ரத்னாக்களை அடையாளம் கண்டு உதவினால் புண்ணியமாகப் போகுமே!

இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு, பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!

நன்றி: இந்நேரம்.காம்



அன்புள்ள சகவலைப்பதிவர்களே!
இச்செய்தியை வலைப்பதிவர்கள் மீள்பதிவு செய்வதன்மூலம் அரசின் கவனத்திற்குக்கொண்டு சென்று இந்த மாணவணுக்கு உதவ முடியுமே!

Read more...

தமிழக அரசியலில் அற்புதம்! - அதிமுக-திமுக கூட்டணி ஆட்சி!!

Thursday, April 14, 2011

பணப்பட்டுவாடா செய்யவிடாமல் தேர்தல் கமிஷன் கொடுத்த கெடுபிடிகளால் தமிழக வாக்காளர்களுக்குச் செல்ல வேண்டிய பணம் கிடைக்கவில்லை. இதனால் வெருத்துப் போன வாக்காளர்கள் துரதிஷ்ட வசமாக சுயமாக முடிவெடுத்து கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொய்த்துப்போய் எந்தக்கூட்டணியும் ஆட்சி அமைக்குமளவு பெரும்பான்மை பெறவில்லை.

உறுப்பினர்களைவிட அதிகமான கோஷ்டிககளைக் கொண்டுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியால் இனி காமராஜர் ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்பதால் தங்கபாலுவை ஆளுநராக அறிவித்து மறைமுக காங்கிரஸ் ஆட்சி ஏற்படுதைத் தடுக்கும் நோக்கில் திமுக தலைவர் மு.கருணாநிதியும் அதிமுக தலைவி ஜெயலலிதாவுடன் கலந்தாலோசித்து திமுக-அதிமுக கட்சிகளை இணைத்து ஜெயலலிதா முதல்வராகவும் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் அற்புதம் நடந்தேறுகிறது.

குழுக்களாகப் பிரிந்து கிடந்த திராவிடக்கட்சிகள் ஒன்றாகிவிட்டதால் இனி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்று கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராகக் கழட்டிவிடப் படுகிறார்கள். ஜூன்-1,2011 இல் தமிழகத்தின் புதிய சட்டசபை தொடங்குகிறது. வைகோ பேரவைத் தலைவராக இருந்து வழிநடத்தும்படி கருணாநிதியின் அன்புவேண்டுகோள் ஏற்கப்பட்டு, தனது முதல் உரையைத் தொடங்குகிறார்.

வைகோ: ஏறத்தாழ 37 ஆண்டுகளுக்குப்பிறகு அண்ணாவின் ஆட்சி மீண்டும் மலர்ந்துள்ளது. பெரியார்,அண்ணா ஆவிகளுடனும், கலைஞரின் ஆசியுடனும் நடக்கும் நல்லாட்சியில் நான் அவைத் தலைவராக வீற்றிருப்பதில் உவகை கொள்கிறேன். மூதறிஞர் செந்தமிழ் காவலர் கருணாநிதி ஐயா அவர்களின் வாழ்த்துரையுடன் அவைநடவடிக்கைகளைத் தொடங்கலாம்.

கலைஞர்: மாண்புமிகு முதல்வர் அன்புச்சகோதரி ஜெயலலிதா அம்மையார் தலைமையில் தளபதி ஸ்டாலின் இணைந்து நாம் வாக்களித்தபடி எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். இந்த ஆட்சியில் சேதுக்கால்வாய் தூர்வாரப்பட்டு கூடுதலாக நவீன ராமர் பாலமும் அமைக்கப்பட வேண்டும். இத்திட்டத்திற்கு "சேதுராமர் கால்வாய் பாலம்" என்று பெயரிடுகிறேன்.

ஜெயலலிதா: மாண்புமிகு மூதறிஞர் கருணாநிதி அவர்களின் திருவாயால் இத்திட்டத்திற்கு சேதுராமன் என்று பெயரிட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சகோ.ஸ்டாலினுடன் இணைந்து அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்தப் பாலம் வழியாக வடஇலங்கைக்கு பெரியார்-அண்ணா நல்லுறவு பேருந்து செல்லும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலின்: மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சித்தப்பா M.G.R அவர்களின் பெயரையும் சேர்த்து வைத்திருந்தால் MGR ன் விசுவாசிகளான அண்ணன் பண்ருட்டியார் இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பார். (தேமுதிகவில் சுதீஸ் கோஷ்டியால் ஓரங்கட்டப்பட்டதால் வேறுவழியில்லாமல் திராவிடக் குடும்பத்திற்கே திரும்பிவிட்டார்)

பண்ருட்டியார்: ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் எல்லோரும் ஒரே அணியாகியுள்ளோம். இதைக்காண 'வெள்ளை' எம்.ஜி.ஆர் நம்மோடு இல்லை என்பது வருத்தமாக உள்ளது. இனி எக்காரணம் கொண்டும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு கருப்பு பெயிண்ட் அடிக்க மாட்டேன்.

ஓ.பன்னீர் செல்வம்: துணைமுதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களே, நமது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி சுட்டுக் கொல்கிறார்கள். இதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று ஆலோசிக்கலாமா?

பொன்முடி: மாண்புமிகு கடற்பாசி வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள்தான் இதற்கு வழி சொல்ல வேண்டும்.

ஜெயக்குமார்: மாண்புமிகு இலவசங்கள் துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களே. தமிழக மீனவர்களைச் சுடாத இலங்கை கடற்படைக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.நிதியமைச்சர் பா.வளர்மதி இதற்கு ஒப்புக்கொள்வாரா?

பா.வளர்மதி: இலங்கை எல்லையில் அம்மா பெயரில் மிதக்கும் அரங்கம் ஒன்றை அமைத்து அதில் தினமும் கலைமாமணி நமீதாவின் தலைமையில் மானாட-மயிலாட நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதன்மூலம் இலங்கை கடற் படையினரின் கவனம் திரும்பும்போது,நமது மீனவர்கள் மீன் பிடித்து விட்டு பத்திரமாகத் திரும்பி விடலாம்.

செங்கோட்டையன்: ஊய்ய்.(விசில்.) சரியான திட்டம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் ஒரே கல்லில் இரண்டு மீன்கள்! எப்படியோ இனி மீனவர்கள் உயிரோடு திரும்பினால்தான் ஆட்சிக்கு நல்லபேர் கிடைக்கும்! வாழ்க புரட்சித் தலைவி!

ஜெயலலிதா: அன்புத் தம்பி செங்ஸ் அவர்கள் சகோதரி பா.வளர்மதியை புரட்சித் தலைவி என்று தவறுதலாகச் சொல்லியிருக்கக்கூடும்.மாண்புமிகு அவைத் தலைவர் அவர்கள் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிடும்படி உத்தரவிடுகிறேன்.

கலைஞர்:புரட்சித்தலைவி என்ற பட்டப்பெயரை சகோதரி ஜெயலலிதாதவிர வேறு யாருக்கும் கொடுப்பதை பார்த்துக்கொண்டு இந்த கருணாநிதி வ்சனம் எழுதிக்கொண்டு சும்மாயிருப்பானென்று யாரேனும் மூடநம்பிக்கைகொண்டு வைத்திருந்தால், தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

ஜெயலலிதா: மூதறிஞர் மு.கருணாநிதி அவர்கள் தனது ஓய்வுக்காலத்தை சினிமா பார்த்துக் கழிக்காமல் தனது பார்புகழ் செம்மொழிப் புலமைகொண்டு 'புரட்சித்தலைவி புராணம்' எழுதினால் வருங்கால சந்ததிகள் பயன்பெறுவர் என்று மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்: மாண்புமிகு அம்மாவைவிட எனது எண்ணங்களைப் புரிந்தவர் எனக்குத் தெரிந்து யாருமில்லை.இதுபற்றி சகோ.ஸ்டாலினுடன் நேற்றே பேசினேன்.இதற்கான சிறப்புத் தீர்மானத்தை தம்பி திருமாவளவன் கொண்டுவந்தால் எவ்வித பரிசீலனையுமின்றி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆட்சிப்பொறுப்பேற்கும் முன்பே ஒப்புதல் வழங்கிவிட்டார்.

ஜி.கே மணி (ஸ்...ஜால்ரா சத்தம் காதைப் பிளக்கிறது.) விஜய.T.R..சிலம்பரசன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து புதுக்கட்சித் தொடங்கப் போவதாக செய்தி வந்துள்ளதே அதுபற்றியும் பேசலாமே!

மு.கருணாநிதி: சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. மீறிவந்தால் அரசியல்வாதிகள் சினிமாவிலும் 'நடிக்க' வேண்டிவரும் என்று பொதுவான எச்சரிக்கையை தம்பி கீ.வீரமணியிடம் சொல்லி விடுத்தால் தமிழினத்திற்கு நல்லது என்று நினைக்கிறேன்.

ஸ்டாலின்: அப்படிச்சொன்னால் உடன்பிறவா அன்புச் சகோதரி கற்புக்கரசி குஷ்பு வருத்தப்பட மாட்டாரா? அப்புறம்,சினிமாவளத்துறை அமைச்சர் தம்பி சரத்குமாரும் கோவிச்சுப்பார்.ஆகவே இப்பிரச்சினையை ஆறப் போடலாம்.

சுயேட்சையாகப் போட்டியிட்டுவென்ற டாக்டர் ராமதாஸ் இதைக்கேட்டதும் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்கிறார். பாமகவிலிருந்து விலக்கப்பட்ட டாக்டர் அன்புமணியும் கூடவே வெளிநடப்புச் செய்கிறார்.

அன்றைய அவை நடவடிக்கைகள் அனைத்தும் ஜால்ரா மயமாக இருந்தது. டாக்டர் ராமதாஸ் அன்புமணி தலைமையில் 2031 இல் ஆட்சிக்குவரும்வரை இனிமேல் அவைக்கு வரப்போவதில்லை என்றும் மீறி வந்தால் டாஸ்மாக் பாட்டிலால் என்னை அடியுங்கள் என்று சொல்லிவிட்டு அரசியல் துறவரம் போனதாக அரசு தொலைக்காட்சியான 'சன் நியூஸ்' தெரிவிக்கிறது.
*************
தமிழக அரசியல் உப்புசப்பு இன்றி போனதால் ஜூனியர் விகடன், நக்கீரன் ஆகிய பத்திரிக்கைகள் "30 நாட்களில் சரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி? "நக்கீரனின் கீரை வகைக் குழம்புகள்" போன்ற புத்தகங்களை வெளியிட்டு காலம்தள்ள முடிவு செய்துள்ளன.அதேபோல் சாட்டிலைட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் எந்த பரபரப்புமின்றி உழவர்உலகம்,கல்வி வழிகாட்டி போன்ற் நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பின.வலைப்பூக்களில் "விடைபெறுகிறேன்" என்ற தலைப்பிட்ட பல பதிவுகள் பின்னூட்டமின்றி காணப்பட்டன.

பிரபல ?!வலைப்பதிவர் அதிரைக்காரணுக்கு தமிழக அரசு வலைமாமணி விருது வழங்கி, அவரின் பதிவுகளை தமிழக பாடநூல் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் திட்டமிட்டு உள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது! :)

பி.கு: ஒருமாத அரசியல் களேபரங்களையும், எந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு என்ற ஜோதிட கணிப்புகளை கொஞ்சகாலம் மறக்க வேண்டி எழுதப்பட்டது. உண்மையில் இது நடந்து விட்டால் நான் வலைப்பதிவு எழுதுவதையே விட்டுவிடுவேன்!

Read more...

அப்பாவி வாக்காளனின் ‘இலவச’ கணக்கு

Wednesday, April 06, 2011

தேர்தலின்போது எந்தக் கட்சியின் கொள்கைகள் நல்லவை என்று ஆய்ந்து முடிவு எடுக்க விடாமல் மானாவாரியாக இலவசங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் வாக்காளர்கள் குழம்பியுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் இதோ நம்மால் ஆன சிறுமுயற்சி.தேர்தல் இலவசங்கள் மூலம் சராசரி ஆண்டு வருமானம்

  • திமுக ஆட்சிக்கு வந்தால் = ரூ.43,200.00
  • அதிமுக ஆட்சிக்கு வந்தால் = ரூ.52,740.00
  • தமிழக மக்களின் தனிநபர் அரசுக் கடன் = ரூ.15,000.00
  • மூவர் கொண்ட குடும்பத்தின் மொத்தக்கடன் = ரூ.45,000.00

வருமானம் – கடன்

  • திமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.43,200-ரூ.45,000 = -1,800.00 ரூ.
  • அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.52,740-ரூ.45,000= +7,740.00 ரூ.

இந்தக் கணக்குப்படி,இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் ஒவ்வொரு தமிழக குடிமகனுக்கும் தலா 1,800 ரூபாய் நஷ்டம் வருகிறது!

Read more...

தேர்தல் ஜுரமும் கூட்டணி நலன் விசாரிப்புகளும்

Sunday, February 13, 2011


தமிழக சட்டசபை இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு எதிர்க்கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சுகக்குறைவு காரணமாக மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் முழு ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால் கூட்டத்தொடர் முழுவதும் அவையில் கலந்து கொள்ளாமலிருக்க அனுமதி வேண்டி சிறப்புத் தீர்மானம் நிறைவேறியது.

இந்நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து குழம்பியுள்ள அரசியல்வாதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நலம் விசாரித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை. (வழக்கம்போல் இப்பதிவும் யாரையும் புண்படுத்த அல்ல:)

வைகோ: மேடம்! உங்கள் உடல்நிலைதான் தற்போதைக்கு முக்கியம். பூரண சுகமடையும்வரை ஓய்வெடுங்கள். உங்கள் உடல்நிலை குறித்து அறிந்ததும் போயஸ்கார்டனுக்கு ஐந்து தொகுதிகளைக் கடந்து நடைப் பயணமாகவே வந்தேன்.

ராமதாஸ்: அன்பு சகோதரி அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விபட்டதும் அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்துளோம். முப்பது தொகுதியிலும் தலைவர் கோ.க.மணி அவர்களின் தலைமையில் சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

விஜயகாந்த்: அம்மையாருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் எனக்கு மனசுக்குச் சரியில்லை. தேவைப்பட்டால் புதிய ஆட்சியில் நமது கூட்டணி சட்டசபைக்கும்கூட வராமல் ஓய்வெடுக்கலாம்.சுகக்குறைவுக்குப் பின்னணி பாகிஸ்தான் தீவிரவாதிகளா என்று விசாரிக்கக்கோரி போராட்டம் அறிவிக்க இருக்கிறேன்.

கிருஷ்ணசாமி:அம்மா! உடல்நிலைதான் நமக்குமுக்கியம்.நம் கூட்டணியில் டாக்டர்களுக்குப் பஞ்சமில்லை. நீங்கள் பூரண குணமடைந்து புதிய அரசின் சட்டசபைக்குவர டாகடர்களாகிய நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

ஜவாஹிருல்லா: கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் ஏழைகள் மட்டுமின்றி எதிர்கட்சியினருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆம்புலன்ஸ் எதுவும் தேவைப் பட்டால் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் மேடம்.

நல்லகண்ணு:கொடநாடு எஸ்டேட்டில் நிம்மதியாக ஓய்வெடுக்கவேண்டிய அம்மையார் போயஸ் கார்டனில் சிரமப்படுவது கஷ்டமாகத்தான் உள்ளது. எல்லாம் அடுத்து நீங்கள் ஆட்சி அமைத்ததும் சரியாகிவிடும்.

சுப்ரமணியசாமி: ஜெயா மேடம் உட்ம்பு சரியில்லாமப் ஆனத்கு 2G அலைவரிசையே காரணம். மேடம் உடல்நிலை சர்யில்லாத் காரண்த்தால் தேர்தலில் போட்டியிடாமல் முத்லம்சராக சட்டதிர்த்தம்கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் பெடிசன் போடுவேன்.

ஜெயேந்திரர்: பொய் சாட்சிகளை நம்பி இறையாடியார்கள் கொலைகேஸில் சிக்கவைக்கப்பட்டதால் தமிழகத்தைப் பிடித்துள்ள பீடை அம்மையாரையும் விடவில்லை. இதற்காக கலவையில் சங்கரா ஹோமம் செய்தால் தீர்க்க சுகத்துடன் அம்மா அரியணை ஏற பகவான் நிச்சயம் அருள் பாலிப்பார்.

நடிகர் விஜய்: அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் தேர்தல் முடியும்வரை புதுப்படங்களில் நடிக்க வேண்டாம் என்று அப்பா அன்புக் கட்டளையிட்டுள்ளார். அம்மா நீங்க கவலைப்படாதீங்க. உங்களுக்கு ஒன்னு என்றால் எனக்கு ரெண்டு.நான் பிரச்சாரம் பண்ணனும்னு ஒருமுறை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்.

Read more...

1000 வெடிகுண்டு லாரிகளைக் காணவில்லை

Tuesday, January 25, 2011


2011 ஆங்கிலப் புத்தாண்டுக்கு முன்தினம் தினத்தந்தி மற்றும் தட்ஸ்தமிழில் வெளியான ஒரு செய்தியை வாசித்ததும் நெஞ்சம் "பக்..பக்" என்றோ "திக் திக்.."என்றோ அடிக்கவில்லை என்பதால் யாரும் என்னைக் கல்நெஞ்சன் என்று சொல்லிவிடாதீர்கள்.

காந்திஜீ தலைமையில் பெற்ற சுதந்திரத்தின் மகிமையை "2G" அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகள் மூலம் அறிந்தோம். அதற்கு முன்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கீடு செய்த நமது "COMMON WEALTH" ஐ போட்டி போட்டுக் கொண்டு ஆளுங்கட்சியினர் சிலர் விளையாடியதாலும் மத்திய-மாநில அரசுகள் மீதான நம்பிக்கை அதல பாதாளத்திற்கு சென்றது.

இந்த சூழலில் "நாடுமுழுவதும் 1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்" என்ற செய்தி வெளியானதால் பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதுபோல் உணர்ந்ததால்தான் கீழ்கண்ட செய்தி வெளியானதும் எவ்வித பக்கவிளைவும் ஏற்படவில்லை.


இதோ இந்தியாவின் (எத்தனையாவதோ) குடியரசு தினத்தை கொடியேற்றிக் கொண்டாடுகிறோம். (அடைப்புக்குறிக்குள் உள்ளதுக்கும் என் தேசபக்திக்கும் சம்பந்தமில்லை என்பது வேறுவிசயம்:). அதற்கு ஓரிரு வாரம் முன்னதாக வெளியான இன்னொரு செய்தியை வாசித்தபிறகு குபுக் என சிரிப்பு வந்தது. அது என்னவென்றால் நமது பிரதமர், சோனியா காந்தி (","வை கவனிக்கவும்) மற்றும் உள்துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரைக் கொல்வதற்காக தமிழக கடற்கரையோரங்களில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படை ஊடுறுவியிருப்பதாகச் சொல்லப்படும் செய்தி!

மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் பதவி விலகி, பின்னர் 2G முறைகேடு மீதான விசாரணை தொடங்கிய நிலையில் இப்படி செய்தி வெளியானால் "குபுக்" என்று சிரிக்காமல் "குபீர்" என்றா சிரிக்க முடியும்? இதற்குமேலும் இப்பதிவை இழுக்க விரும்பவில்லை.

ஒவ்வொரு டிசம்பர்-6 லும், இழந்த பள்ளிவாசலை மீட்பதற்காக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பைக் காட்ட நாங்கள் திரளும்போதெல்லாம் ஐம்பது நாள் கழித்து நடக்கவிருக்கும் குடியரசு தினத்தை சீர்குலைக்க வரலாறு காணாத (புவியியல், அறிவியல், சமூகவியல், கணிதவியல்,தமிழ், ஆங்கில பாடங்கள் என்ன பாவம் செய்தனவோ!) மற்றும் மூன்றடுக்கு, நான்கடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு என்றெலாம் சொல்லி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் இளைஞர்களைக் கைது செய்வீர்கள். ஆனால் 1000 வெடிகுண்டு லாரிகளும், தற்கொலைப்படையும் ஊடுறுவிய பிறகும் யாரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யவில்லை.

கடந்த சில வருடங்களாக மாலேகான், சம்ஜவ்தா என நாட்டின் பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கும் அரைக்கால் டவுசர் பாண்டிகளே காரணம் என்பது நிரூபனமாகிக்கொண்டிருக்கும்போதும், ஒரு CHANGE க்கு ஓரிரு அம்பிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்து, மதசார்பின்மையை பல் இளிக்க வைத்திருக்கலாமே?

ஒவ்வொரு வருடமும் கண்ணாடிக் கூண்டுக்குள் சுதந்திரமாக நின்று கொடி ஏற்றும் நாட்டின் முதல்,இரண்டாவது குடிமக(ளு)னுக்கு மூன்றாம்,நாலாந்தர குடிமக்களின் கோரிக்கை என்னவெனில், நாட்டை சீர்குலைக்க ஊடுறுவிய 1000 வெடிகுண்டு லாரிகளும், தமிழகத்தில் ஊடுறுவியதாகச் சொல்லப்பட்ட தற்கொலைப்படையினரும் எங்கே? என்பது மட்டுமே!

வெடிகுண்டுகளுடன் ஊடுறுவிய 1000 லாரிகளையோ அல்லது தற்கொலைப் படையினரை யாரேனும் கண்டால் தயவுசெய்து உடனடியாக பின்னூட்டம் போடவும்.:)

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்! !!! ஜெய் அல் ஹிந்த்

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP