1000 வெடிகுண்டு லாரிகளைக் காணவில்லை
Tuesday, January 25, 2011
2011 ஆங்கிலப் புத்தாண்டுக்கு முன்தினம் தினத்தந்தி மற்றும் தட்ஸ்தமிழில் வெளியான ஒரு செய்தியை வாசித்ததும் நெஞ்சம் "பக்..பக்" என்றோ "திக் திக்.."என்றோ அடிக்கவில்லை என்பதால் யாரும் என்னைக் கல்நெஞ்சன் என்று சொல்லிவிடாதீர்கள்.
காந்திஜீ தலைமையில் பெற்ற சுதந்திரத்தின் மகிமையை "2G" அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகள் மூலம் அறிந்தோம். அதற்கு முன்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கீடு செய்த நமது "COMMON WEALTH" ஐ போட்டி போட்டுக் கொண்டு ஆளுங்கட்சியினர் சிலர் விளையாடியதாலும் மத்திய-மாநில அரசுகள் மீதான நம்பிக்கை அதல பாதாளத்திற்கு சென்றது.
இந்த சூழலில் "நாடுமுழுவதும் 1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்" என்ற செய்தி வெளியானதால் பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதுபோல் உணர்ந்ததால்தான் கீழ்கண்ட செய்தி வெளியானதும் எவ்வித பக்கவிளைவும் ஏற்படவில்லை.
இதோ இந்தியாவின் (எத்தனையாவதோ) குடியரசு தினத்தை கொடியேற்றிக் கொண்டாடுகிறோம். (அடைப்புக்குறிக்குள் உள்ளதுக்கும் என் தேசபக்திக்கும் சம்பந்தமில்லை என்பது வேறுவிசயம்:). அதற்கு ஓரிரு வாரம் முன்னதாக வெளியான இன்னொரு செய்தியை வாசித்தபிறகு குபுக் என சிரிப்பு வந்தது. அது என்னவென்றால் நமது பிரதமர், சோனியா காந்தி (","வை கவனிக்கவும்) மற்றும் உள்துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரைக் கொல்வதற்காக தமிழக கடற்கரையோரங்களில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படை ஊடுறுவியிருப்பதாகச் சொல்லப்படும் செய்தி!
மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் பதவி விலகி, பின்னர் 2G முறைகேடு மீதான விசாரணை தொடங்கிய நிலையில் இப்படி செய்தி வெளியானால் "குபுக்" என்று சிரிக்காமல் "குபீர்" என்றா சிரிக்க முடியும்? இதற்குமேலும் இப்பதிவை இழுக்க விரும்பவில்லை.
ஒவ்வொரு டிசம்பர்-6 லும், இழந்த பள்ளிவாசலை மீட்பதற்காக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பைக் காட்ட நாங்கள் திரளும்போதெல்லாம் ஐம்பது நாள் கழித்து நடக்கவிருக்கும் குடியரசு தினத்தை சீர்குலைக்க வரலாறு காணாத (புவியியல், அறிவியல், சமூகவியல், கணிதவியல்,தமிழ், ஆங்கில பாடங்கள் என்ன பாவம் செய்தனவோ!) மற்றும் மூன்றடுக்கு, நான்கடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு என்றெலாம் சொல்லி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் இளைஞர்களைக் கைது செய்வீர்கள். ஆனால் 1000 வெடிகுண்டு லாரிகளும், தற்கொலைப்படையும் ஊடுறுவிய பிறகும் யாரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யவில்லை.
கடந்த சில வருடங்களாக மாலேகான், சம்ஜவ்தா என நாட்டின் பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கும் அரைக்கால் டவுசர் பாண்டிகளே காரணம் என்பது நிரூபனமாகிக்கொண்டிருக்கும்போதும், ஒரு CHANGE க்கு ஓரிரு அம்பிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்து, மதசார்பின்மையை பல் இளிக்க வைத்திருக்கலாமே?
ஒவ்வொரு வருடமும் கண்ணாடிக் கூண்டுக்குள் சுதந்திரமாக நின்று கொடி ஏற்றும் நாட்டின் முதல்,இரண்டாவது குடிமக(ளு)னுக்கு மூன்றாம்,நாலாந்தர குடிமக்களின் கோரிக்கை என்னவெனில், நாட்டை சீர்குலைக்க ஊடுறுவிய 1000 வெடிகுண்டு லாரிகளும், தமிழகத்தில் ஊடுறுவியதாகச் சொல்லப்பட்ட தற்கொலைப்படையினரும் எங்கே? என்பது மட்டுமே!
வெடிகுண்டுகளுடன் ஊடுறுவிய 1000 லாரிகளையோ அல்லது தற்கொலைப் படையினரை யாரேனும் கண்டால் தயவுசெய்து உடனடியாக பின்னூட்டம் போடவும்.:)
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்! !!! ஜெய் அல் ஹிந்த்
0 comments:
Post a Comment