ஏழாம் அறிவு இரண்டாம் பாகத்தில் விஜயகாந்த்!!!
Wednesday, November 02, 2011

தீபாவளிக்கு வெளியான படங்களில் ஏழாம் அறிவு என்ற படம், சீனர்களின் வீரத்துறவியாக வணங்கப்படும் "டாமோ" 'சங்கரராமன் படுகொலை புகழ்' காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மராக சூர்யா நடிக்க A.R.முருகதாஸ் இயக்கியுள்ளார்.
கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் போதிதர்மர் சீனாவுக்குச் சென்றபோது முதலில் சீனர்கள் தீயசக்தி என்று கருதி அவரை வெருத்ததனால் காட்டில் சுற்றிக்கொண்டிருந்தபோது அங்குள்ள கிராமத்தில் விஷக் காய்ச்சலால் பலர் மரணிக்கின்றனர். விஷக்காய்ச்சல் தாக்கிய ஒரு சிறுமியை போதிதர்மர், இந்தியாவிலிருந்து கற்றுச்சென்ற வைத்திய முறைகள் மூலம் குணப்படுத்தியதால், அம்மக்கள் அவரை மிகவும் மதிக்கின்றனர்.
பிறிதொரு சந்தர்ப்பத்தில் சீன பழங்குடியினரால் அந்த கிராமமக்கள் தாக்கப்பட்டபோது தன்னுடைய வர்மக்கலையால் அவர்களையும் விரட்டி அடித்ததால் காஞ்சிபுரம் போதி தர்மர் சீனாவில் 'டாமோ'வாகிறார்.
இதனிடையே, இந்தியாவின் பிராந்திய வளர்ச்சியைப் பிடிக்காத சீன அரசு, அத்தகைய விஷக்காய்ச்சல் கிருமியை இந்தியாவில் பரப்ப திட்டமிடுவதாகவும், அதை முறியடிக்க போதி தர்மரின் மரபணுக்களைத் தூண்டிவிட்டு அவரது சக்திகளை மீட்டெடுப்பதாக கதை ஒருவழியாக முடிகிறது.
ஏழாம் அறிவு படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜயகாந்த் நடிக்க "எட்டாம் அறிவு" எடுக்கப்பட்டால் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இமயமலைக்குச் சென்ற போதிதர்மரை சீன ராணுவம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் உதவியுடன் கடத்திச் சென்று ராவல்பிண்டியில் சிறைவைக்கிறது. அவரை மீட்க விஜயகாந்த் பாகிஸ்தான் செல்கிறார்.
இந்தச்சூழலில் அங்கு நடக்கும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாகிஸ்தான் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தான் பிரதமர் ஆனதால் வந்த விசயத்தையே விஜயகாந்த் மறந்துவிடுகிறார்.
இந்நிலையில் விஜயகாந்த் பாகிஸ்தான் பிரதமராகி விட்டதால், இனி தைரியமாக இந்தியாவிற்குள் ஊடுறுவலாமென திட்டம் தீட்டுகிறார்கள். இதை பிரதமர் என்ற முறையில் உளவுத்துறை தலைவர் விஜயகாந்திடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென்று விஜயகாந்துக்கு இந்திய தேசப்பற்று வந்து தொலைக்கிறது. கோபத்தில் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரோடு விஜயகாந்த் ஒத்தைக்கு ஒத்தையாக பனியனுடன் சண்டையிடுகிறார்.
போதிதர்மருக்கு வர்மக்கலை தெரியும் என்றால் விஜயகாந்துக்கு மல்யுத்தம் கைகொடுக்கிறது. உளவுத்துறை காவலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே விஜயகாந்தை நெருங்கும்போது அத்தனை குண்டுகளையும் தன்வாயில் கவ்வுகிறார். காவலாளியிடமிருந்த துப்பாக்கியிலுள்ள எல்லா தோட்டாக்களும் முடிந்து விடுகிறது. உடனே விஜயகாந்த் தன் வாயால் கவ்விய அத்தனை குண்டுகளையும் அவனை நோக்கி துப்புகிறார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்ற காவலாளிகள் விஜயகாந்த் வாயிலிருந்து லிங்கம் கக்குவதாகக் கதைகட்டி விடுகின்றனர். விஜயகாந்தின் புகழ் வடஇந்தியாவிலும் பரவுகிறது.
இந்தியப் பிரதமராக இருக்கும் ராகுல்காந்தி, பாகிஸ்தான் பிரதமர் விஜயகாந்தை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கிறார். பிரதமர் ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்க மறுத்து, இந்தியா பாகிஸ்தானில் நடத்தும் எல்லைதாண்டும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தாதவரையிலும், கராச்சி தொடர்குண்டு வெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட குல்பர்கான் சிங்கை ஒப்படைக்க வேண்டும் என்று அதிரடியாக அறிவித்து, அதுவரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வரப் போவதில்லை என்றும் அறிவிக்கிறார்.
இதனிடையே, இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்தியா பயிற்சி கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனாவும் எச்சரிக்கிறது. பாகிஸ்தானுக்கெதிராக இந்தியாவைத் தூண்டுவதாக விஜயகாந்த் அமெரிக்காவை எச்சரிப்பதோடு, பொருளாதார மந்தநிலை மற்றும் வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டங்களால் ஏழைநாடாகி விட்ட அமெரிக்காவுக்கு இனி பொருளாதார உதவிகள் செய்யப்போவதில்லை என்றும் அறிவிக்கிறார்.
பாகிஸ்தான் சிறையிலிருக்கும் சூர்யாவை மீட்டுக்கொண்டு வருவதாகச் சொல்லிச்சென்ற விஜயகாந்த், திடீரென அந்நாட்டு பிரதமராகி விட்டதால் படத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் முருகதாஸ் திணறுகிறார். அப்போது, க்ராஃபிக்ஸ் யுக்தியைப் பயன்படுத்தி விஜயகாந்தை பாம்பாகவும், சூர்யாவை புறாவாகவும் மாற்றி இந்தியா கொண்டு வருவதுபோல் கதையை அமைத்து ஒருவழியாக படம் முடிவடைகிறது!
இந்தப் படத்தில் விஜயகாந்த் சொந்தக்குரலில் பாகிஸ்தான் கவ்வாலி பாடலைப் பாடும்படியும் செய்தால் துபாயில் டாக்ஸி ஓட்டும் படான்களும் படத்தை விரும்பி பார்ப்பார்கள்!
0 comments:
Post a Comment