அமைச்சர் தோற்றது ஏன்?

Tuesday, December 20, 2005

வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் தங்கி சமூக சேவையில் ஈடுபட்ட ஒரு கிறிஸ்தவப் பாதிரியாருக்கு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து தரப்பினரும் சமய/இன பாகுபாடின்றி வழியனுப்பி வைக்க ஊர் மத்தியில் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சுற்றுவட்டார பதினெட்டு தொகுதி மக்களும் கூடி இருந்தனர்.

(இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பதினெட்டு பட்டின்னு சொல்லி வருவது?)

தொகுதி அமைச்சரைத் தவிர அனைத்து அழைப்பாளர்களும் சரியாக வந்து விட்டனர்.
நிகழ்ச்சி தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பரபரப்பாக அமைச்சரை எதிர்பார்த்து இருந்தனர்.

மழைக்காலமாதலால் மழை வரும் போல் இருந்தது. நிகழ்ச்சியும் தொடங்கி விட்டது. முக்கியஸ்தர்கள் பாதிரியாரைப் புகழ்ந்தும் நன்றி சொல்லியும் பேசினர். தொகுதி அமைச்சர் மட்டும் இன்னும் வரவில்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் செல்போன் ஒலித்தது. மறுமுனையில் அமைச்சர். எதிர்பாராத விதமாக முதல்வர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திலிருந்து வரும் வழியில் டிராஃபிக் ஜாம் ஆகி விட்டதால் எப்படியும் வழியனுப்பு விழாவில் கலந்து கொள்வேன் என்று சொல்லி விட்டு போனைத் துண்டித்தார்.

அமைச்சர் இல்லாமல் வழியனுப்பு விழா முடிந்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. இந்த சமயசார்பற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டால்தான் அடுத்த தேர்தலிலும் அமைச்சருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். மிக முக்கியமாக இன்றோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதை மனதில் கொண்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாதிரியாரின் சிறப்புரைக்குப் பின் தொகுதி அமைச்சர் நன்றியுரை வழங்குவார் என்று அறிவிப்புச் செய்து பாதிரியாரை பேச அழைத்தார்.

பாதிரியார் மைக்கப் பிடித்து தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார். தான் பாதிரியாராக வந்தமுதல் நாள் சந்தித்த ஒரு பாவமன்னிப்பு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். வழக்கம் போல் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்து பாவமன்னிப்பு வழங்கும் கூண்டில் அமர்ந்திருந்த போது ஒரு நபர் வந்து "ஃபாதர்! நான் கொடும்பாவங்கள் செய்து விட்டேன்! எனக்கு மன்னிப்பு வழங்குங்கள்! என்று கெஞ்சினார்" என்றும் அவர் செய்த பாவங்களைக் கேட்டபோது என்னடா வாழ்க்கை இது இவ்வளவு கொடியவனும் இருக்கிறானே?" என்று வெறுத்து பேசாமல் இந்த பணியையே விட்டு விடலாமா என்று யோசித்ததாகச் சொல்லி, அந்தப் பாவியின் பாவங்களைப் பட்டியலிட்டார்.
  • சுமார் 100 பேரிடம் பிக்பாக்கெட் அடித்தது.
  • பொய் சாட்சி மற்றும் ஆள்மாறாட்டம்.
  • பத்துக்கும் மேற்பட்ட கற்பழிப்புகள்
  • கணக்கற்ற கொலைகள்

பாதிரியாருக்கு மூச்சு வாங்கியது. இப்படிப்பட்ட பாவிகளும் நம் நாட்டில் இருக்கின்றனர். அவர்களையும் கடவுள் விட்டு வைத்திருக்கிறார் என்று தன் நீண்ட அனுபவங்களைச் சொல்லி அமர்ந்தார்.

அமைச்சர் தாமதமாக வந்ததுக்கு அவையோரிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு, தன் பங்குங்குக்கு பாதிரியாரை புழந்து தன் நன்றியுரையைத் தொடங்கினார்.



நம் அன்பிற்குறிய பாதிரியார் நமதூரை விட்டுச் செல்வது நமக்கு பேரிழப்பாகும். யாரும் அறியாத ஒரு ரகசியத்தைச் சொல்ல விரும்புகிறேன். நம் பாதிரியாரிடம் முதல் பாவமன்னிப்பு கோரியது யார் தெரியுமா? இதோ உங்கள் முன் இருக்கும் உங்கள் அன்பிற்குறிய அமைச்சராகிய நானே!!!
என்றார்.

இரண்டு நாள் கழித்து நடந்த வாக்களிப்பில் அமைச்சர் டெப்பாசிட் இழந்தார். அவர் சார்ந்திருந்த கட்சியும் ஆட்சி செய்யும் வாய்ப்பை இழந்தது. செயற்குழு கூடி அமைச்சரை கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதிவிலிருந்தும் நீக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் சரி.

3 comments:

G.Ragavan 12/21/2005 4:42 AM  

சூப்பரப்பு!

அதிரைக்காரன் 12/21/2005 11:44 PM  

கருத்துக்கு நன்றிகள் ராகவன் ஐயா!

பிரதீப் 12/22/2005 10:14 AM  

நமக்கே இப்பத்தான் புரியுது.
அமைச்சரில்லையா, அவருக்கு உடனே புரிஞ்சிருமா? உடனே புரிஞ்சிட்டா அவரு என்ன அமைச்சரு?

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP