ஆதாயம் தரும் பதவிகள்.
Monday, March 27, 2006
சென்ற வாரத்தலைப்புச் செய்திகளில் "ஆதாயம் தரும் பதவி" என்ற வாசகம் அடிக்கடி கண்ணில் பட்டது. அரசு பதவியில் இருக்கும் ஒருவர், ஒரே நேரத்தில் அரசு உதவி பெறும் மற்ற பதவிகள் வகிப்பதால், அதற்கான இரட்டை நிர்வாகச் செலவுகளால் அரசுக்கு செலவு இரட்டிப்பாவதுடன், இரு பதவியில் இருக்கும் ஒருவரால் இரண்டையும் சரிவரச்செய்ய முடியாது என்ற நோக்கில், அரசு உதவி பெறும் பதவிகளில் "ஒருவருக்கு ஒரு பதவி" என்ற வழிகாட்டல் இந்திய அரசியல் அமைப்பிலும் சட்டத்திலும் இருக்கிறது.
சென்ற மாதம் சமாஜ்வாதி கட்சியின் எம்.பியும் அமிதாப்பச்சனின் மனைவியுமான ஜெயாபச்சனை இக்காரணம் சொல்லி பதவி நீக்கம் செய்ய தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்தது. காங்கிரஸ் எம்.பி ஒருவரால் எறியப்பட்ட இந்த அரசியல் அம்பு, அதே காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவின் பதவி இழப்பிற்கும் காரணமாகி விட்டது. இவ்விவகாரம் பெரிதாகும் முன்பே சோனியா தான் வகித்த சர்ச்சைக்குறிய ஆதாயம் தரும் பதவியையும், அதனால் இழக்கவிருந்த எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்து, இதை வைத்து அரசியல் குளிர்காய திட்டமிட்டிருந்த பா.ஜ.க.வினருக்கு அதிர்ச்சியளித்தார்.
சோனியாவின் பதவி இழப்பைக் காக்க ஆளும் காங்கிரஸ் அரசு அவசரமாக அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர முயன்றதன் மூலம் ஆளும் கட்சியினர் தங்கள் வசதிக்கு ஏற்ப சட்டங்களை திருத்திக் கொள்வார்கள் என்ற உண்மை அம்பலத்திற்கு வந்துள்ளது. நாட்டில் எத்தனையோ தலை போகிற காரியங்களுக்கு காட்டாத அவசரம், தங்கள் பதவிக்கு வேட்டு வைக்கப்படும் என்பதால் எதையும் செய்யத் துணிவார்கள். தகவல் பெறும் மசோதாவை சட்டமாக்கி விட்டு, புலணாய்வு (Investigation Journalizsm) ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்தவும் கட்சி சட்டம் கொண்டுவர பாகுபடின்றி திட்டமிட்டுள்ளார்கள்!
ஆதாயம் தரும் பதவியால் பாதிக்கப்பட்டது சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல. கம்யூனிஸ்ட் கட்சியின் சோம்நாத் சட்டர்ஜி, பாஜகவின் மல்ஹோத்ரா ஆகியோரும் கூட ஆதாயம் தரும் பதவிகளில் இருந்து வருகிறார்கள். நான்கு திருடர்களை போலிஸ் விரட்டிக் கொண்டு வரும்போது முதலில் பிடிபட்ட திருடனுக்கு விழும் தர்ம அடிகள் அடுத்தடுத்து பிடிபடும் திருடர்களுக்கு விழுவதை விட குறைவாக விழும். திருடனே முதலில் பிடிபட்ட திருடனுக்கு தர்ம அடியைக் கொடுத்தால் தனக்கு அடி விழாது அல்லது குறைவாக விழும் என்ற நப்பாசையில் பா.ஜ.க. இப்பிரச்சினையை கிளறியது.
இன்னொரு வகையில் சொல்வதென்றால் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; எதிரியின் இரண்டு கண்ணும் போக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தங்கள் கட்சியின் மல்ஹோத்ரா பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை ஆளும் கட்சியின் முக்கிய தலைகளும், பாராளுமன்றத்தில் சதா தலையில் குட்டிக் கொண்டிருக்கும் சபாநாயகரும் பதவி விலக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஆதாயம் தரும் பதவிகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது ஆளும் கட்சியினரே என்பதால் ஆட்சியில் இருக்கும் வரை ஆதாயம் அடைந்து விட்டு, திண்ணையைக் காலி செய்யும் போது புது வீட்டுக்காரரை திட்டிவிட்டுச் செல்வது மாதிரி, எதிர் கட்சியான பிறகு அல்லது ஆட்சியில் இல்லாத போது இது போன்ற பிரச்சினைகளைக் கிளப்பி (பா.ஜ.க, தெலுங்கு தேசம், திரிணாமூல் போன்றக் கட்சியினர்) அரசியல் நடத்துகிறார்கள்.
காங்கிரஸைப் பொருத்தவரை இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் சோனியா அனுதாப அலையை தக்க வைத்து அரசியல் ஆதாயம் பெறும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். ஆனால் பிஜேபிக்கு புலிவாலைப் பிடித்தவன் கதையாகி விட்டது அல்லது சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. நல்லவேளை சோனியா முன்னதாகவே ராஜினாமாச் செய்து விட்டார். இல்லாவிட்டால் இதைச் சொல்லி அத்வானி இதற்கும் ஒரு ரதயாத்திரை கிளம்பி இருப்பார்.
ஒரு புள்ளி விபரப்படி, அரசின் பாராளுமன்றச் செலவுகள் யாருக்கெல்லாம் வீணாக செலவளிக்கப் பட்டுள்ளது என்று பாருங்கள். மொத்தமுள்ள 545 எம்பிக்களில்,
29 பேர் மீது கணவன்/மணைவி துஷ்பிரயோகத்திற்காக வழக்குகள் உள்ளன.
7 பேர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
117 பேர் கொலை, கற்பழிப்பு, அடிதடி கொள்ளை,வழிப்பறி வழக்குகளுக்காக விசாரிக்கப்பட்டுள்ளார்கள்.
71 பேர் மோசமான கடன் நடவடிக்கைகளால் எந்த வகைக்கடனும் பெற முடியாது.
21 பேர் பல்வேறு நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ளார்கள்.
84 பேர் பல்வேறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப் பட்டுள்ளார்கள்.
சரி, இதெல்லாம் இருக்கட்டும் அரசியல்வாதிகள் வகிக்கும் பதவிகளில் எந்தப் பதவியில் ஆதாயம் இல்லை என்று யாராவது சிந்தித்தோமா? இது போன்ற பொறுப்பற்ற எம்.பிக்களுக்கு ஆகும் வெட்டிச் செலவுகளையும் நாடாளுமன்ற புறக்கணிப்பையும் குறைத்திருந்தால் நம்நாடு இருபது வருடங்களுக்கு முன்பே வல்லரசாகி இருக்கும்.
பாரத மாதாவுக்கு ச்சே....!