அன்பார்ந்த வாக்களப் பெருங்குடி மக்களே!

Wednesday, March 15, 2006

தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து விட்டன. கூட்டணிக் கட்சிகளின் பிரச்சார பீரங்கிகள் இனி(தே) முழங்க ஆரம்பித்து விடுவார்கள். தேர்தலுக்கு முன்பு இருந்த கூட்டணிகள் தேர்தல் முடிந்து இடம் மாறி இருக்கலாம். முன்பு கூட்டணியில் இருக்கும் போது பேசியவற்றை அணி மாறியதும் சமாளிக்க வேண்டிய (?) காலத்தின் கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு எழலாம். ஏற்கனவே கிடைத்த தொகுதிகளில் தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி கிடைக்க வேண்டுமே என்ற கவலையில் இருக்கும் கட்சித் தலைவர்களுக்கு ஏதோ நம்மால் முடிஞ்ச உதவி.

1) சுனாமி

[கூட்டனியில் இருந்தால்]

அம்மா ஆட்சியில்தான் பெரும் திட்டங்களும் வெளிநாட்டுக் கம்பெனிகளும் தமிழகத்திற்கு வந்தன. அமெரிக்காவிலும் ஜப்பானிலும் மட்டுமே இருந்த("""பலத்தக் கைதட்டல்""") சுனாமி கூட அம்மா ஆட்சியில்தான் இந்தியாவிற்கு வந்தது! (மக்கள் எதற்கு கைதட்டுகிறார்கள் என்று பேச்சாளர் குழம்பிவிட்டார். சமாளித்துக் கொண்டே தொடர்கிறார்)

டிசம்பர்-24 ஐ மறக்க முடியுமா? சாதாரணமாக ஒரு நாளில் இருபது மணி நேரங்கள் பணி செய்யும் முதலமைச்சர் அம்மா சுனாமி தாக்கிய நாட்களில் ஒரு நாளைக்கு நாற்பது மணி நேரம் பணி செய்தார்கள். அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களல்லவா? இன்னொரு முறை சுனாமி நிவாரண நிதி வழங்க எங்களுக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுங்கள். (சுனாமி வந்தது சாதனையா? சோதனையா? மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை!)

[கூட்டனியில் இல்லாவிட்டால்]

இந்த ஆட்சியின் அவலங்கள் கொஞ்சமா நஞ்சமா? எந்த ஆட்சியிலும் வராத சுனாமி அந்த அம்மா ஆட்சியில வந்ததே? அந்தம்மாவின் அராஜகம் கடலுக்கே பொறுக்காமல் தானே சுனாமியாகப் பொங்கி எழுந்தது! வாக்காளர்களே! இன்னொரு சுனாமி இனி வராமல் தடுக்க சுனாமியாகப் பொங்கி இந்த காட்டாட்சிக்கும் முடிவு கட்டிடுவீர்!

2) சேது சமுத்திர திட்டம்

[கூட்டனியில் இருந்தால்]

சேதுக் கால்வாய் திட்டத்தால் கடற்கரையோர கிராம மக்கள் வெளிநாட்டுக் கப்பல்களை அடிக்கடி கண்டுகளிக்கலாம் இது இந்தக் கூட்டணியின் சாதனையல்லவா?

[கூட்டனியில் இல்லாவிட்டால்]

சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ருசியான மீன்களான கெளுத்தி, கெண்டையெல்லாம் இலங்கைக்குப் போய்விட்டன. கடலை ஆழப்படுத்துவதால் தமிழகக் கடற்கரையோரங்களில் மாசு ஏற்படுகிறது. அடிக்கடி கடல் கொந்தளிப்பது கூட, அடிக்கடி கப்பல்கள் கடந்து செல்வதால்தான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

3) நாடு முழுவதும் ஒரு ரூபாயில் தொலைபேசிச் சேவை

[கூட்டனியில் இருந்தால்]

காஷ்மீரிலுருந்து கன்னியாக்குமரி வரை ஒரு ரூபாயில் இனி நீங்கள் பேசச் செய்து மகத்தான சாதனை செய்தது எங்கள் கூட்டணி அரசுதான்.

[கூட்டனியில் இல்லாவிட்டால்]

ஒரு ரூபாய்ல நாடுமுழுவதும் டெலிபோன் பேசும் வசதியால் ஏற்பட்ட தொந்தரவு எக்கச்சக்கம். மக்கள் நிம்மதியா தூங்க முடியலே. நேற்று யாரோ ஒரு பஞ்சாப்காரன் போன் பண்ணி பல்பீர் சிங் வந்தானான்னு கேக்குறான். பல்பீர் சிங் எதுக்கய்யா பட்டுக்கோட்டைக்கு வரனும்? இனியும் இது போன்ற கொடுமைகள் தொடர வேண்டுமா?


பின்குறிப்பு: உங்களுக்கும் ஏதாச்சும் சமாளிஃபிகேஷன் தெரிஞ்சா கொடுத்து உதவலாமே! சிறந்த சமாளிப்பை வழங்குபவருக்கு அடுத்த தேர்தலில் கச்சத் தீவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.!

1 comments:

Anonymous 3/19/2006 8:46 AM  

வெட்டிப்பேச்சு பேசலாம்னு வந்தா - விசயக்காரரா இருக்கிறீங்களே.. பிறைநதிபுரத்தான்

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP