இந்தியாவில் ஒட்டகங்கள் இல்லையா தருமி சார்?

Saturday, February 28, 2009

அதிரை பாருக்கின் எல்லைதாண்டிய இஸ்லாமிய ஈமெயில் படையெடுப்பு குறித்து தருமி பதிவிட்டிருந்தார். நம்ம அதிரைக்காரர்களுக்கு வேறுவேலையே இல்லை. ஆட்டைக்கழுதையாக்கிய பழியிலிருந்தே மீளாதபோது, தருமியை வலுக்கட்டாயமாக சொர்க்கத்துக்கு அனுப்ப முயற்சித்துள்ளார்.

பாவம் பாய், தருமிக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவரை உங்கள் மெயிலிங் லிஸ்டிலிருந்து நீக்கிடுங்க அல்லது அற்புத சுகமளிக்கும் மின்மடல் குழுமம் தொடங்கி அதில் UNSUBSCRIBE வசதி கொடுத்துவிட்டால் வேண்டாதவர்கள் UNSUBSCRIBE செய்து கொள்வார்கள்.


தருமிபாவம்! இந்தியாவில் ஒட்டகங்கள் இருப்பதுகூடத் தெரியாத அப்பாவி மனுசர் அவர். பெரிய மனசு பண்ணி விட்டுடுங்க ;-)

//இப்படி சிறப்பு மிக்க ஒட்டகத்தைப் படைத்த இறைவன் அதை அரேபிய நாட்டினருக்கு கொடுத்துவிட்டு நமக்கெல்லாம் வெறும் எருமையையும், பசுமாட்டையும் கொடுத்து ஏமாற்றிவிட்டானே... ச்சே!//


வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புற நம்ம தருமிசாருக்கு தயவுசெய்து யாராச்சும் எருமையும் பசுவும் பால் கொடுக்கும் என்பதற்கான ஆதாரத்தை அனுப்பி வையுங்க. ஏனென்றால் அரபு நாட்டு ஒட்டகம் மட்டும்தான் பால் கறக்கும் நம்ம பசுவும் எருமையும் 'கோ'கோலா (கவ்ஜல்?)தான் கறக்கும்னு நம்பிக்கிட்டு இருக்கார்.

கைதேர்ந்தப் படைப்பாளன் ஏகஇறைவன் மிக நேர்த்தியாக ஒட்டகத்தை வடிவமைத்தான்// அதன் பால் எத்தகைய உயர்வானது, அதனை உண்டு // அந்தக் காலத்தில் அரேபியர்கள் மிகவும் திடகாத்திரமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் //....

மதமும் வேண்டாம் கடவுளும் வேண்டாமென கரையொதுங்கிய தருமியை 'அடக்கடவுளே" என்று சொல்ல வைத்தது ஆட்டைக் கழுதையாக்கியதைவிட கொடுமை பாய்!எல்லோருமே சொர்க்கத்துக்குப் போயிட்டால் நரகத்துக்கும் ஆள் வேண்டாமா? என்று கேட்ட கழுதைகளும் அதிரையில் உண்டுதானே!

அதனால................. ;-)

Read more...

கொலைமாமணி விருதுகள் அறிவிப்பு

Wednesday, February 25, 2009

கலைச்சேவை புரிந்ததற்காக ஒவ்வொருவருடமும் தமிழக அரசு சிலரைத் தேர்ந்தெடுத்து கலைமாமணி விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது. அவுத்துப் போட்டு ஆடியும் வருமான வரிஏய்ப்பிலும் முதலிடத்தில் வரும் சினிமா நடிகர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் விருது வழங்குவது கடைந்தெடுத்த கயமைத்தனம்.

திரைப்படத்துறையில் இருக்கும் எவரும் தாங்கள் கலைச்சேவை செய்யவே வந்ததாகச்சொல்லாதபோது இத்தகைய விருதுகள் வழங்கப்பட வேண்டுமா? ஆளுங்கட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த திரைப்பட நடிக-நடிகைகளுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதில்லை என்பதிலிருந்து ஆளும்கட்சி அடிவருடிகளுக்கு அரசாங்கம் செய்யும் நன்றிக்கடனாகவே கலைமாமணி விருதுகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

சினிமா பின்னணி கொண்டவர்கள் அரசியலில் இருக்கும்வரை இதுபோன்ற விழாக்களையும் விருதுகளையும் ஒழிக்க முடியாது. அதனால் இதுபோன்ற வெட்டிப்பேச்சுக்களால் பயனில்லை என்பதால் கொலைச்சேவைகளுக்காக கொலைமாமணி விருதுகளுக்கு கீழ்கண்டவர்களைப் பரிந்துரைக்கிறேன்.

ஜார்ஜ் புஷ் (அமெரிக்கா) - நாடுபிடிக்கும் கலை

ஏரியல் ஷரோன் (இஸ்ரேல்) - அகதி முகாம்களைத் தாக்கும்கலை

யஹூத் ஓல்மர்ட் (இஸ்ரேல்) - பாஸ்பரஸ் குண்டுவீசும்கலை

நரேந்திர மோடி (இந்தியா) - இனச்சுத்திகரிப்புக் கலை

L.K.அத்வானி (இந்தியா) - கட்டிட இடிப்புக் கலை

மஹிந்த ராஜபக்சே (இலங்கை) - இனச்சுத்திகரிப்புக் கலை


விடுபட்ட கொலைமாமணிகள் பெயர்களை வலைமாமணிகள் பின்னூட்டம் வாயிலாகவும் பரிந்துரைக்கலாம் ;-)

Read more...

ஆஸ்கார் விருது - அமெரிக்கா வீசிய எலும்புத் துண்டு?

நம்நாட்டு பாஸ்மதிக்கோ அல்லது மஞ்சளுக்கோ அமெரிக்க நிறுவனம் ஒன்று ISO தரச்சான்று வழங்கினால் நமக்குப் பெருமையா? ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பதைப் பார்த்து நமது பிரதமர், ஜனாதிபதி, நிதியமைச்சர்,சபாநாயகர்,முதலமைச்சர் என சகலஅரசியல் அதிகார மட்டங்களும் அடித்தட்டு இந்தியனும் ஆஸ்கார் விருது கிடைத்தது குறித்து பெருமைபட்டுக் கொள்கிறார்கள்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, விருது பெற்றது ஒவ்வொரு இந்தியனுக்கும் மகிழ்வைத் தருவதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறியுள்ளார்.தமிழக சட்டசபையில் புகழாரம் சூட்டியதோடு, முன்னாள் நிதியமைச்சரான நமது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இவ்விருதுக்கு வரிவிலக்கு அளிக்கவும் பரிந்துரைக்கபடுமென்று சொல்லி தேசப்பற்றையும் அமெரிக்க மோகத்தையும் வெளிக்காட்டியுள்ளார்.

வளரும் நாடுகளில் இதுபோன்ற அமெரிக்க அங்கீகாரங்களைப் பிரதானப் படுத்தி,சர்வதேச அங்கீகாரமாக மக்களை நம்பவைக்கும் முதலாளித்துவ வணிக யுக்திகளின் ஒரு பகுதியே திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருது. அழகிப்போட்டிகள் மூலம் அழகையும் பெண்மையையும் சந்தைப்படுத்தி வயிறுவளர்த்தது போதாதென்று இந்திய திரைப்படங்களுக்கு விருது வழங்கி மேலும் சுரண்டலுக்கு அடித்தளமாகவே இந்த ஆஸ்கார் விருது வழங்கும் வைபவம் நிகழ்ந்து வருகிறது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் "சர்வதேசத் திரைப்படங்களுக்கு மத்தியில் ஒரு இந்திய தயாரிப்பு விருது பெற்றதும் அதை ஒரு தமிழனும் மலையாளியும் சாதித்திருப்பது உலகளாவிய அங்கீகாரம்தானே" என்றும் சிலர் கேட்கக்கூடும். நுகர்வுப் பொருட்களுக்கு வழங்கப்படும் தரச்சான்றுகள் போல், திரைப்படங்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க தரச்சான்றே ஆஸ்கர் விருது. அவ்வளவுதான்!

நடிகர் கமலாஹாசன் சொல்வதுபோல்,"இது ஒரு உலகத்தரச்சான்றல்ல; இந்திய தரச்சான்றைப்போல் ஆஸ்கார் என்பது அமெரிக்கத் தரச்சான்று. இந்தி(ய) சினிமா,அமெரிக்கா என்ற ஒரு நாட்டில் தயாராகும் படங்களின் தரத்தை எட்டியுள்ளதற்கான சான்றே தவிர ஓர் உலகளாவியத் தரச்சான்று அல்ல".

அமெரிக்கா தரச்சான்று கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நமது இந்திய தயாரிப்புகள் சர்வதேசத் தரத்திற்கு உயர்ந்து பல ஆண்டுகளாகி விட்டன என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?. ஓரிரு வருடங்களுக்குமுன்பு சக்கைபோடுபோட்ட 'லகான்' படத்திற்கும் ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்கத் திரைப்படத்திற்கு நம்நாட்டு ஃபிலிம்பேர் விருது கிடைத்தால் அமெரிக்கர்கள் பெருமையாகக் கருதுவார்களா? மாட்டார்கள். பிறகு ஏன் நமக்கு வெறும் பெருமை? அமெரிக்காவின் அங்கீகாரத்திற்காக நம் அருமை பெருமைகளை அடகுவைக்கும் கீழ்த்தரமான ஏக்கப் போக்கு மாறவேண்டும். அமெரிக்கா மட்டுமே உலகமா?

அமெரிக்க ஆஸ்கார் விருது கிடைத்தால்தான் அது உலகத்தரமுள்ளதென்ற முதலாளித்துவ மாயை நாட்டின் அடிமட்டக் குடிமகன் முதல் உயர்மட்ட அதிகாரப்பீடம்வரை சினிமா மோகம் வியாபித்திருப்பது உலகிலேயே நமது நாடாகத்தான் இருக்கும்! சந்தடி சாக்கில் ஒபாமாவும் இப்படத்தைக்காண ஆவல் கொண்டிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது நல்ல CHANGE!

விருதுபெற்றதும், "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று விழாமேடையில் A.R.ரஹ்மான் தமிழில் பெருமையாகக் குறிப்பிட்டதன்மூலம் தமிழ் மொழிக்கு தற்போதுதான் அங்கீகாரம் கிடைத்திருப்பதுபோல் மகிழ்வது எத்துணை பேதமை?

எவ்வாறாயினும்,எவ்வளவு புகழின் உச்சிக்குச் சென்றாலும் தன்னைவிட புகழுக்குரிய சக்தி ஒன்று உள்ளது என்று நம்பியதோடு மட்டுமின்றி அதை உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் மேடையில் பேசி, திலீப் குமாராக இருந்து A.R.ரஹ்மானாக இஸ்லாத்தின்பால் தன்னை இணைத்துக் கொண்ட இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் தன்னடக்க வெளிப்பாடு நிச்சயம் பாராட்டுக்குரியது.

Read more...

நியாயமான சந்தேகம்?

Saturday, February 21, 2009

1) சென்னை ஹைகோர்ட்டில் சுப்ரமணிய சுவாமிக்கு முட்டை அபிஷேகம்

2) இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் சூடு பிடித்த பின்னர், மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்த பின்னர் முதல் முறையாக மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தமிழகம் வருகிறார்.

3) முட்டைவிலை உயர்வு

மேற்கண்ட மூன்று செய்திகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது.

Play Online egg-attack game

Read more...

2012 இல் ஒபாமாவை எதிர்த்து சரத்குமார் போட்டி?

Sunday, February 15, 2009

உலகிலேயே வெட்கமில்லாத அரசியல்வாதி அனேகமாக சரத்குமார் என்றுதான் நினைக்கிறேன். கடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் எழுநூற்று சொச்சம் ஓட்டு வாங்கிய கட்சியை வைத்துக் கொண்டு கொஞ்சம்கூட வெட்கமின்றி "தேசிய கட்சியுடன் மட்டுமே கூட்டணி" என்று அறிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் (பிப்ரவரி 13) தென்காசியில் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு சரத்குமார் அளித்த பேட்டி. அவர் சொல்ல வெட்கப்பட்டவை (அடைப்புக் குறிக்குள்):



"40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுயிட வேண்டும் என்பதுதான் என் முடிவு.(பிரதமர் பதவியை எங்களுக்கு விட்டுக்கொடுக்க முன்வரும் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி அமைக்கத் தயார். அவர்கள் தயாரா? என்பது எனக்குத் தெரியாது.) ஆனால் கட்சி நிர்வாகிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று சொல்லி வருகிறார்கள். (அப்போதான் போஸ்டர் ஒட்டும் செலவுக்காவது பணம் கிடைக்கும்)

இதனால் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது (இறுதி முடிவு எடுக்கும் முழுஅதிகாரத்தை கட்சித் தலைவருக்கு பொதுக்குழு ஏகமனதாக வழங்கி உள்ளது. ராதிகாவின் ஒப்புதலின்றி தலைவர் எந்த முடிவும் எடுக்க மாட்டார். கட்சித் தலைவர் நானேதான் என்பதால்இதில் பிரச்சினை இருக்காது)

மார்ச் 15-ந்தேதி கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிடும். பெரும்பாலும் தேசியக் கட்சியுடன்தான் கூட்டணி இருக்கும்" (அதுவரை எங்கள் கட்சி இருக்குமா என்று தெரியவில்லை) என்றார் சரத்குமார்.

(பொதுவான செயல்திட்டம் அமைத்தே கூட்டணி வைப்போம். எங்கள் செயல் திட்டங்கள் இன்னும் முடிவாகவில்லை. தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியாகிய அடுத்த 24 மணி நேரத்திற்குள் எங்கள் தேர்தல் அறிக்கை வெளியாகி விடும்.

திருமங்கலம் இடைத்தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர் இழந்த டெப்பாஸிட்டை விடக்கூடுதலாக 100-ரூபாய் சேர்த்து வேட்பாளருக்குத் திருப்பிக் கொடுத்து விடுவோம். ராதிகா மற்றும் எனக்கான தேர்தல் பிரச்சாரச் செலவை வேட்பாளரிடம் பிறகு வசூலித்துக் கொள்வோம்.

எங்களின் தற்போதைய கவனம் மத்தியில் மட்டுமே இருப்பதால் தமிழக அரசியலில் 2030 க்குப் பிறகே கவனம் செலுத்துவோம். 2012 இல் ஒபாமை எதிர்த்து எங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்தும். அது நானாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)

Read more...

ஜார்ஜ் புஷ் = ஒபாமா

Thursday, February 05, 2009

சந்தேகமாக இருந்தால் படத்தைப் பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்!



பின்குறிப்பு: இப்பதிவுக்கு ஜார்ஜ் புஷ்ஷிடமிருந்தோ அல்லது ஒபாமாவிடம் இருந்தோ மறுப்பு/பின்னூட்டம் வந்தால் அதுவும் வெளியிடப்படும் :-)

Read more...

வந்தேறிக் கழுதை

Sunday, February 01, 2009


எங்கிருந்தோ வந்த கழுதையொன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மேய்ந்தது. கஷ்டப்பட்டு நீர்ப்பாய்ச்சி, உரமிட்டு வளர்த்துப் பாதுகாத்த பயிர்களை திடீரென்று வந்த கழுதை அத்துமீறி நுழைந்து பயிர்களை நாசமாக்குகிறதே என விவசாயி கையைப் பிசைந்து கொண்டு நின்றான்.

கழுதையை விவசாய நிலத்திலிருந்து எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் வீட்டுக்குச் சென்று ஒரு தடி, வெள்ளைக் காகித அட்டை, ஆணியுடன் வந்தான். அந்த அட்டையில் "கழுதையே வெளியேறு!" என்று எழுதி, கழுதை முன்பு காட்டிக் கொண்டு நின்றான்.காலையிலிருந்து மாலை வரையில் கழுதை திரும்பும் பக்கமெல்லாம் காட்டியும் பயனில்லை.கழுதை அவனையோ அல்லது அவனின் எதிர்ப்பையோ கண்டு கொள்ளவில்லை!

களைப்படைந்து சோர்வுடன் வீட்டுக்குத் தூங்கச் சென்றான்.புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. அதிகாலை எழுந்து வீட்டிலுள்ளவர்களையும் அக்கம்பக்கத்திலுள்ள சிலரையும் அழைத்துக்கொண்டு பேரணியாகச் சென்று கழுதையின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தான். கழுதை எதிர்ப்புப் பேரணிக்கு வந்த ஒவ்வொருவரும் கையில் "கழுதையே வெளியேறு!" என்ற அட்டை வைத்திருந்தனர். கழுதை அங்கிருந்தவர்களையோ அல்லது அவர்களது எதிர்ப்பையோ கண்டுகொள்ளாமல் பயிர்களைத் தின்றது.

கழுதையின் கள்ளமெளனம் விவசாயிகளை எரிச்சலடையச் செய்தது. சிலர் "கழுதையே வெளியேறு" அட்டையுடன் "கழுதையைக் கொல்வோம்" என்றும் கோஷமிட்டார்கள். கழுதை வழக்கம்போல் அவர்களைக் கண்டுகொள்ளாமல் பயிர்களை மேய்ந்து கொண்டிருந்தது.மேலும் வெருப்புற்ற விவசாயிகள் "கழுதையே வெளியேறு" போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

வழக்கம்போல் கழுதை அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது மேய்ந்து கொண்டே இருந்தது.விரக்தியின் உச்சத்திற்குவந்த விவசாயிகள் இறுதியில் கழுதையின் கொடும்பாவியை எரிப்பதென முடிவு செய்தார்கள். கழுதையின் மாதிரியை உருவாக்கி,கழுதை மேய்ந்து கொண்டிருந்த நிலத்தருகே சென்று கழுதைக்கு எதிராக முழங்கி, ஆக்ரோஷமாக கழுதையின் கொடும்பாவியை எரித்து, "கழுதை ஒழிந்தது" வெற்றி! மாபெரும் வெற்றி என்று கோஷமிட்டு வாகையுடன் வீடு திரும்பினார்கள்.

கழுதையின் கொடும்பாவி எரிவதைக் கண்ட கழுதை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புண்முறுவலிட்டு வழக்கம்போல் பயிர்களை மேயத் தொடங்கியது. கொடுங்கோல் கழுதை! திமிர்பிடித்த கழுதை விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதாக இல்லை!

எனவே, விவசாயிகள் சிலரை கழுதையுடன் சமரசம் பேச அனுப்பினார்கள்.

"கழுதை அவர்களே! விவசாய நிலத்தின் சொந்தக்காரர்கள் நீங்கள் அவர்கள் நிலத்திலிருந்து வெளியேற வேண்டுமென விரும்புகிறார்கள்!" அவர்களைப் பார்த்த கழுதை,கண்டுகொள்ளாது மேய்வதில் மட்டும் கவனம் செலுத்தியது.

"மதிப்பிற்குறிய கழுதை அவர்களே. நிலச்சொந்தக்காரர்கள் மூன்றில் ஒரு பகுதி நிலத்தை உங்களுக்கு விட்டுத்தர முன்வருகிறார்கள். தயவு செய்து நீங்கள் அவர்களின் விளைநிலத்திலிருந்து உடனடியாக வெளியேறணும்! கழுதை கண்டுகொள்ளாமல் மேய்ந்து கொண்டே இருந்தது. அடுத்தவர், "பொறுமையின் சிகரம் மாண்புமிகு கழுதையாரே! பாதி நிலத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அருள்கூர்ந்து அவர்களின் விளைநிலத்திலிருந்து வெளியேறுங்கள்!"



வெற்றி! வெற்றி!! கழுதை ஒருவழியாக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டது. மக்கள் கூட்டத்தை கழுதை ஒருமுறை பார்த்ததுச் சிரித்தது.விவசாயிகள் மகிழ்ச்சியில் கழுதையைப் புகழ்ந்து பாடினார்கள். ஒருவழியாக அங்கு அமைதி திரும்பியது. தனக்கு ஒதுக்கப்பட்ட பாதிப்பகுதியில் கழுதை சுகமாக வாழ்ந்து வந்தது. எல்லாம் ஒருசில நாட்கள் மட்டுமே!

மீண்டும் வழக்கம்போல் கழுதை விவசாய நிலத்தில் புகுந்து விளைச்சலை மேய்ந்தது.விவசாயிகளும் வேறு வழியின்றி கழுதைக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டினர். போராட்டங்கள் வலுத்த போதும் அவற்றைப் பொருட்படுத்தாது விளைச்சலைக் கொள்ளையிட்டது.

இந்தக் கழுதை வேறுபகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட்க் கழுதையாகும்! கழுதையுடன் பலமுறை போராடி அலுத்துபோன விவசாயிகள் மென்மேலும் போராடத் திராணியற்று அப்பகுதியிலிருந்து வெளியேருவது என்று முடிவு எடுத்தனர்.குடும்பம் குடும்பமாக மக்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறி ஊரின் ஒதுக்குப் புறத்தில் தங்களுத்தேவையான வீடுகளை அமைத்தனர்.

கிட்டத்தட்ட எல்லோருமே அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினர். கழுதையுடன் சமரசம் பேசியவர்களும்கூட அங்கிருக்க மனமின்றி கூட்டம் கூட்டமாக புதுக்குடியிருப்பிற்கு இடம்பெயர்ந்தனர். கொலைகார ஆக்கிரமிப்பு கழுதையை மக்கள் சபித்தனர். அவர்களிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் சிறுகல்லை எடுத்து கழுதையை நோக்கி வீசினான். கழுதை அவ்விடத்தை விட்டு வேகமாக ஓடியது!

"நம் எல்லோரையும் இச்சிறுவன் அவமதித்ததோடு நம்மைச் சுற்றியுள்ள மக்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்படி செய்துவிட்டான்" என்று சொல்லி அச்சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கி கொன்று விட்டு, கழுதையை மீண்டும் அழைத்து வந்தனர். தண்டிக்கப்பட்ட சிறுவனைப் புனிதப்போராளி என்று புகழ்ந்தனர்.

இக்கழுதைக்கு தற்போது அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்துமளவுக்குச் செல்வாக்கு இருக்கிறதாம்! ஏனென்றால் அமெரிக்காவில் எந்தக்கட்சி அதிபர் ஆண்டாலும் கழுதைதான் செல்லப்பிராணியாம்!

நீதி: கழுதை கெட்டால் குட்டிச்சுவர் கட்டும்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP