குடி'மகள்'கள்

Friday, October 21, 2005

ஆண்களுக்கு நிகராக பெண்கள் எல்லா துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள். என்பதற்கு பல்வேறு எடுத்து காட்டுகளை கூறமுடியும். அடுப்பறையில் முடங்கி கிடந்த பெண்கள் விண்வெளியில் கால் பதிக்கிறார்கள். இன்றைய விஞ்ஞான உலகத்தில் பெண்கள் இல்லாத துறையே இல்லை. ஆனால் கீழுள்ள செய்தியைப் படித்ததும் அதிராமல் இருக்க முடியவில்லை.

சேலம் மாவட்டத்தில் "டாஸ்மார்க்" கடைகள் 238 உள்ளன. இவற்றில் கடந்த 2003 டிசம்பர் முதல் 2005 செப்டம்பர் வரை மதுபான விற்பனை ரூ.450 கோடியை எட்டி உள்ளது என்கிறார்கள். இவற்றில் 400 கோடி விஸ்கி, ரம், பிராந்தி விற்பனை மூலம் வந்தது. 50 கோடி 'பீர்' விற்பனையில் மட்டும் எட்டப்பட்டுள்ளது.

புள்ளி விவரமாய்ச் சொன்னால் 15 லட்சத்து 13 ஆயிரத்து 277 பெட்டிகள் (ஒரு பெட்டிக்கு 12 பாட்டில்கள் என்றால், 15 லட்சத்து 13 ஆயிரத்து 277 பெட்டிகளை 12 ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும்) பிராந்தி, விஸ்கியும், 8 லட்சத்து 25 ஆயிரத்து 277 பெட்டி பீர்களும் விற்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் அரசு நிர்ணயித்த குறியீட்டை விட கூடுதலாக 20 சதவீதம் (120 சதவீதம்) விற்று மாநிலத்தில் 2-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது சேலம் மாவட்டம். ஆனால் இந்த சாதனைக்கு பின்னால் ஒரு அதிர்ச்சியான தகவலும் இருக்கிறது. இந்தளவு விற்பனைக்கு பெண்களும் காரணம் என்பதுதான் அது.

மதுப்பழக்கத்துக்கு அடி மையான கீழ்தட்டு வர்க்க பெண்களுக்கு லோக்கல் மதுக்கடைகள் என்றால், மேல்தட்டு பெண்களுக்கு இருக்கவே இருக்கிறது ஸ்டார் ஓட்டல் பார்கள். ஒருவருக்கு ஒருவர் அருகில் இருந்தால் கூட முகம் தெரியாத அளவுக்கு பரவி கிடக்கும் இருட்டு மறைத்து இருக்கும் ஸ்டார் ஓட்டல் பார்கள். அது போன்ற நாகரீக மங்கைகளை வெளியே அடையாளம் காட்டாது.

ஆனால, இந்த உண்மை சில பார்ட்டிகளின்போதும் மற்ற நிகழ்ச்சிகளின்போதும் வெளியே வந்துவிடுகின்றன. நாகரீகம் என்று கூறி பீர், ஒயின், ஓட்கா என்று "ஆல்கஹால்'' அதிகம் இல்லாதவைதான் என்று அவர்கள் சமாதானம் கூறினாலும் மருத்துவ உலகம் எச்சரிக்கை விடவே செய்கின்றன.

வெளிநாட்டில் இருந்து இந்தியா வுக்கு வந்த (ஆங்கிலேயர்கள் உள்பட) அனைத்துமே ஒன்று இந்தியாவை சுரண்டுவதாக இருக்கும். அல்லது இந்தியர்களின் உடல் நலனை சுரண்டு வதாக இருக்கும்.

இந்த வெளிநாட்டு மது பானங்களும் அப்படித்தான். இந்திய இளைஞர்களின் உடல்நலத்தை மெதுவாக சுரண்டுகிறது. இப்போது அது இளைஞிகளையும் சுரண்டுகிறது என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.

இளைஞர், இளம் பெண் கள் என வலைவிரிக்கும் மதுபான அரக்கனுக்கு அடிமையாகும் சிறுவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் எகிறுகிறது என்பது கூடுதல் ஷாக் செய்தி. பாருக்கு வரும் பலருக்கு 15 வயதைக் கூட தாண்டமல் இருப்பது அதிர்ச்சியான விஷயம்.

என்ன விசேஷம் என்று கேட்டால் `பர்த்டே பார்ட்டி' என்று கூலாக பதில் வருகிறது. பார்ட்டின்னா இப்போது கோகோ கோலாக்கள் மறக்கப்பட்டு... மரங்கொத்தி பீர்களும், கருப்பு இரவு பீர்களும் சிறுவர்களுக்கு ஞாப கத்துக்கு வருவதுதான் கலி காலம்.

இந்த ரிசல்ட் யாருக்கு லாபத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ, இல்லையோ... `டாஸ்மாக்' நிறுவனத்துக்கு லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது. இதற்கு மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஈட்டிய தொகை ஒரு எடுத்துக்காட்டு.

ஆனால் ஒவ்வொருவராக ஆக்ரமித்து இப்போது இளைஞர்கள், சிறுவர்களை யும் வலை விரித்து இருக்கும் மது அரக்கனால் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிர்காலத்தில் பெரும் அபாயம் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Read more...

டாலர் கனவும் தேசப்பற்றும்

இன்று பிற்பகல் சன் செய்திகளில் "இந்திய இராணுவத் தேர்வுக்கு வந்தவர்கள், திருப்பி அனுப்பப்பட்டார்கள்" என்ற செய்தியை பெரும்பாலோர் கவனித்திருக்க மாட்டார்கள். அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

தேர்வு மறுக்கப்பட்டதற்குச் சொல்லப்பட்ட காரணம் +2 படித்த மாணவர்களை மட்டுமே,அதுவும் கணிதம்,பெளதீகம் படித்த முதல்பிரிவு கல்வி கற்றவர்களை மட்டுமே சேர்ப்பார்களாம். SSLC தேறியவர்களுக்கு அனுமதியே இல்லையாம்!

முட்டால்தனமான காரணமாகப்பட்டது. உயர் கல்வி படித்துவிட்டு அமெரிக்கா, இலண்டன், ஆஸ்திரேலியா என டாலர் வேலைக்காக வெளிநாட்டு தூதுவாலயங்களில் கால் வலிக்க கோர்ட் சூட் அணிந்து நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, டிகிரி மற்றும் பாஸ்போர்ட்டுடன் நிற்கும் நம் இளம் தலைமுறையினரின் டாலர் கனவுக்களுக்கிடையில், தேசத்திற்கு சேவை செய்யும் உன்னத பணிக்கு ஆர்வமாக வந்தவர்களை இப்படி திருப்பி அனுப்பலாமா?

தீவிரவாதம்,வழிப்பறி,கொலை,கொள்ளை என் சமூக குற்றங்களைத் தடுக்க மூச்சுத்திணரும் மத்திய மாநில அரசுகள் இதுபோல் தேசத்தொண்டாற்றும் ஆர்வத்தில் வருபவர்களை முகத்திலறைந்தாற்போல் செய்யலாமா? இந்த ஏமாற்ற மனநிலையில் ஊர் திரும்பும் அவர்களில் எத்தனை பேர் மனம் மேற்சொன்ன சமூக குற்றங்களைச் செய்ய சிந்தித்திருக்கும்?

இராணுவத்தில் சேர வருபவர்கள் வேறு வேலைக்கே வழி இல்லாதவர்கள் என்பது ஓரளவு உண்மை என்றாலும், நல்ல மரியாதை சலுகைகள் கிடைக்கின்றன என்ற சுயநலக் காரணங்களும் இருக்கவே செய்கின்றன். இருந்தபோதிலும் நாட்டைக்காக்கும் அரும்பணியில் உயிர் நீர்த்தால் அவை அனைத்தாலும் அவர்களுக்கு பிரயோஜனமில்லை.

இராணுவத்தில் சேர்வதை ஏதோ வர்த்தக நிறுவத்தில் வேலைச் செய்வது போன்ற மனநிலையில் வரும் புதிதாக சேர விரும்புபவர்கள் கைவிட வேண்டும்.

மேலும் மத்திய மாநில அரசுகள் குறைந்த பட்சம் தேசப்பாதுக்காப்பில் பள்ளிப்படிப்பின் அங்கமாக வைத்தால், துறை வல்லுநர்கள் கல்வி முடிக்கும் போது இராணுவத்தில் தொடரலாமே?

இவ்வாறு ஒரு சில வருடங்கள் தேசியப்பாதுகாப்புப் பயிற்சி பெற்று குடும்ப நிலையை உயர்த்த தனியார் நிறுவனங்களில் இணையத் தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?

Read more...

விலை உயர்வைச் சமாளிக்க வழிகள்

Thursday, October 20, 2005

பெண்கள் சேலை எடுப்பது, சினிமாவுக்குப் போவதைக் குறைத்துக்கொண்டால் கேஸ் விலை உயர்வைச் சமாளிக்க முடியும் என்று மணிசங்கர் அய்யர் சொன்னதற்காக சென்னையில் அவரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

இனி விலை உயர்வு வரும்போதெல்லாம் எப்படி கருத்துச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வது என நம்மால் ஆன ஆலோசனைகள்:

பேரூந்து கட்டண உயர்வு: மூன்று வீல் ஆட்டோவில் பயணம் செய்தால் அதிக கட்டணம் கொடுக்க முடியும் போது, நான்கு வீல் பேருந்துக்கு கட்டண உயர்வு நியாயமே!

இரயில் கட்டண உயர்வு: உல்கிலேயே மிகப்பெரிய நிறுவனம் இந்திய இரயில்வே. அந்த பெருமையை தக்கவைத்துக் கொள்ள, கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது.

தொலைபேசிக் கட்டண உயர்வு: இண்டெர்நெட்டில் செய்தியை அணுப்புவதால் ஃபாண்ட் பிரச்சினை இருக்கும். ஆனால் தொலை பேசியில் ஃபாண்ட் பிரச்னை இல்லையாதலால், வசதியைக் கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வு: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், வியாபாரிகள் இலாபம் அடைகிறார்கள். வியாபரிகளும் நம் நாட்டு குடிமக்களே. சக குடிமக்களுக்கு இலாபம் கிடப்பதை நாம் மனப்பூர்வமாக வரவேற்கவேண்டும்.

தங்கம் விலை உயர்வு: தகரம் விலை குறைவாக இருப்பதால் யாரும் அதை மதிப்பதில்லை. ஆகவே, தங்கம் விலையை உயர்த்துவதன் மூலம் அதன் மதிப்பு இன்னும் கூடும்.

மணிசங்கர் அய்யர் சொன்னதற்கும் இப்பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பி சிண்டைப் பிய்த்துக் கொள்பவர்கள் கீழ்கண்ட கட்டண உயர்வையும் பொறுத்துக் கொள்க!

முடிவெட்டும் கட்டண உயர்வு: மேலே சொன்ன அனைத்துவகை விலை உயர்வால், எமது புதிய கட்டண உயர்வை வாடிக்கையாளர்கள் பொறுத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் = ரூ.20/- (ரஜினி,பாக்கியராஜ் ஸ்டைல்)
டிஸ்கோ= ரூ.18/- (கமல், மோகன் ஸ்டைல்)
கட்டிங் = ரூ.12/- (காது வெட்டுப்படாமல்)
மொட்டை=ரூ.10/- (ஒரு மாதம் கியாரண்டியுடன்)
ஷேவிங் = ரூ.7/- (புதிய பிளேடு+லோசன்)
,, ,, = ரூ.5/- (பழைய பிளேடு+ஹமாம் சோப்பு நுரை)
ஹீட்டர் = ரூ.3/- (முடியைப் பிடித்து இழுக்காமலும், சூடு வைக்காமலும்)

இவண்,
தமிழ்நாடு மருத்துவ (பட்டதாரிகள்?) முடிவெட்டுவோர் சங்கம்

பின்குறிப்பு: தற்போதுதான் தமிழ்மணத்தில் என் வலைப்பூவில் பச்சை பல்பு எறியுது. அனேகமா இப்பதிவைப் பார்த்துட்டு காசி மறுபரிசீலனை செய்யாமல் இருக்க வேண்டிக் கொள்வோமாக!

Read more...

"பசு" இஸம்

Tuesday, October 18, 2005

இதுவரை உலகில் பல இஸங்கள் இருந்துள்ளன. அவற்றை அறிந்து கொள்ள ஒரு எளிய வழி.

உங்களிடம் இரு பசுக்கள் இருந்து, அதில் ஒன்றை இல்லாதவருக்குக் கொடுத்தால் அது "சோசியலிஸம்" [SOCIALISM]

உங்கள் இரண்டு பசுக்களையும் அரசு எடுத்துக் கொண்டு, உங்களுக்கு இலவசமாக பால் கொடுத்தால் அது "கம்யூனிஸம்" [COMMUNISM]

உங்கள் இரு பசுக்களையும் அரசே எடுத்துக் கொண்டு, பாலை உங்களிடம் விற்றால் அது "பாசிஸம்" [FASCISM]

உங்கள் இரு பசுக்களையும் அரசு எடுத்துக் கொண்டு, நீங்கள் சுடப்பட்டால் அது "நாஜிஸம்" [NAZISM]

உங்கள் இரு பசுக்களையும் அரசு எடுத்துக் கொண்டு, ஒன்றை சுட்டு விட்டு, மற்றொன்றின் பாலைக் கறந்து வீணடித்தால் அது "பைருக்ராட்டிஸம்" [BUREAUCRATISM]

உங்களிடம் இரு பசுக்களில் ஒன்றை விற்று ஒரு காளை வாங்கி, இனப்பெருக்கம் செய்ய வைத்து உங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி, பிறகு அவற்றை விற்று ஓய்வு பெற்று வருமானம் கொழித்தால் அது முதலாளியத்துவம். [CAPITALISM]

Read more...

Microsoft இன் சுயநலம்

Wednesday, October 12, 2005

டாஸ், (DOS) மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் (MS Windows) ஆபரேட்டிங் சிஸ்டம் பயனர்கள் கீழ்கண்ட பெயர்களில் புதிய டைரக்டரியோ (Folder) அல்லது கோப்பின் பெயரோ (Filename) உண்டாக்க முடியாது. மேலும் ஏற்கனவே இருக்கும் கோப்பின் பெயரையும் மறுபெயரிட (Rename) முடியாது.

  • Aux
  • Nul
  • Con
  • COM0 to COM9
  • LPT0 to LPT9
  • PRN

இந்த குறைபாட்டை "இந்தியர்" ஒருவர்தான் முதலில் சுட்டிக்காட்டினார் என்றும் இதற்கு மைக்ரோசாப்டின் தொழில்நுட்ப வல்லுனர்களிடமிருந்தோ அல்லது பில்கேட்ஸிடமிருந்தோ சரியான காரணம் சொல்லப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எந்த அளவு உண்மையோ?


மைக்ரோசாப்டின் இணைய தளத்தில் மேற்கண்ட பெயர்களை மைக்ரோசாப்ட் தனக்கென ரிசர்வ் (பிடித்தம்?) செய்து கொண்டிருப்பதாக சொல்கிறது. இது உண்மையில் சரியான விளக்கம்தானா அல்லது சமாளிபிகேசனா (சமாளிப்பு).

இந்த தளம் சொல்லும் காரணம் நியாயமாகப் படுகிறது. அறிந்தவர்கள் அலசி பின்னூட்டமிட்டால் பயனாக இருக்கும்.

Read more...

புஷ் விளையாட்டு

Saturday, October 01, 2005

நிலைமை எவ்வளவு சீரியசாக இருந்தாலும் இவர் பேசினால் சிரிப்புதான் வருகிறது. அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே அதிகம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானவர் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஜூனியராகத்தான் இருக்கும்.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் இவர் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. பிற நாடுகளின் கருத்தைப்பற்றிக் கவலைபடாமல் எடுத்த சபதத்தை நிறைவேற்ற இவர் படும் கஷ்டங்கள் ஏராளம்.

செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டு பிறகு ஒப்பேற்றும் இவரின் கருத்துக்களில் உங்களுக்கு உடன்பாடில்லையா? இந்த படத்திலுள்ள லிங்கை திறந்து நீங்கள் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாமே?



பி.கு: சுட்டியால் (Mouse) தூக்கிப் போட்டும் விளையாடலாம்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP