இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!
Saturday, October 21, 2006
Proud to be an Indian என்ற தலைப்பிட்ட Email நண்பர்களால் அடிக்கடி Forward செய்யப்படுகிறது. அதிலுள்ள விஷயங்கள் அமெரிக்காவில் புகழ் பெற்ற நிறுவனங்களில் இந்தியர்களின் ஆளுமையைப் பறை சாற்றுவதாக இருந்தன. முதலில் அவற்றைப் படித்தபோது நம் இந்தியர்களின் தொழில் நுட்பத் திறமையை எண்ணி வியந்ததோடு நண்பர்களுக்கும் Forward செய்திருக்கிறேன்.இணையத்திலும் Proud to be an Indian என்று தேடினால் பல தளங்களில் கிடைக்கின்றது.
அத்தகைய தகவலடங்கிய மெயிலில் சொல்லப்பட்டிருந்த சிலவிஷயங்கள் நெருடலாக இருந்தன. (நெருடல் என்பதை விட உண்மைக்கு மாறானது என்பதே சரியென நினைக்கிறேன்) உதாரணமாக சமஸ்கிருதம் உலக மொழிகளில் கணினிக்கேற்ற சிறந்த மொழியாக இருக்கத் தகுதியானது என்று மேற்கத்தியர் ஒருவர் சொல்லியுள்ளதாக உள்ளது. இந்திய மொழிகளில் தமிழுக்கு இருக்கும் இலக்கியத் தொன்மை, கருத்துச் செறிவு, இலக்கண ஆளுமை ஆகிய தகுதிகள், சமஸ்கிருதத்திற்கு இருக்கிறதா என்பதை பன்மொழியறிஞர்கள் ஒப்பிட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.
அதேபோல் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்தியா அந்நிய நாட்டுடன் போர் தொடுத்ததில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்தியா என்ற தேசம் 1947 க்குப் பிறகே உலகத்தவரால் ஒப்புக் கொள்ளப்பட்ட குடியரசு தேசமாகும். அதற்கு முன் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான் ஆகிய பகுதிகள் அடங்கியப் நிலப்பிரதேசமே இந்தியத் துணைக்கண்டம் என்று அறியப்பட்டது.
இந்தியாவை மொகலாயர்கள் சுமார் 800 வருடங்கள் ஆண்டார்கள் என்று சொன்னால், இப்பகுதிகளடங்கிய நிலப்பரப்பே என்று புரிந்து கொள்கிறோம். வேண்டுமென்றால் நம்நாடு கடந்த அறுபது வருடங்களில் பிற நாட்டுடன் வலிந்து போரிட்டதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். எனினும் இதே சிறப்பு வேறுசில நாடுகளுக்கும் இருப்பதால், இதை இந்தியாவின் தனிச்சிறப்பாகச் சொல்ல முடியாது.இவ்விரு விசயங்கள் என் மனதில் தோன்றிவை. மற்றபடி, என் கூற்று தவறாக இருந்தாலும் சந்தோஷமே! இவை தவிர்த்து மற்ற தகவல்கள் பற்றியும் பார்ப்போம்.
அமெரிக்க நிறுவனங்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள் பற்றிய புள்ளிவிபரங்கள்
1) வெளிநாட்டு மருத்துவர்களில், இந்தியர்களின் சதவீதம் 38%
2) அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள் 12%
3) அமெரிக்க விண்வெளிக்கழகம் நாஸாவில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள் 36%
4) மைக்ரோசாஃப்டிலுள்ள இந்திய மென்பொருள் வல்லுனர்கள் 34%
5) IBM நிறுவனத்தின் பணியாளர்களில் இந்தியர்கள் மட்டும்28%
6) INTEL நிறுவனத்திலுள்ள இந்திய வன்பொருள் வல்லுநர்கள் 17%%
6) ஜெராக்ஸ் நிறுவனத்தில் 38%
7) Yahoo, Hotmail போன்ற இணைய நிறுவனங்களின் தலைமை மற்றும் முன்னோடிகள் இந்தியர்கள்.
8) பெண்டியம் வன்பொருள் சில்லின் (Chip) முன்னோடி இந்தியர்.
இப்படியாக பல அசத்தலான புள்ளி விபரங்கள் கொடுக்கப் பட்டிருந்தன. இவையெல்லாம் ஆதாரப்பூர்வமான புள்ளி விபரங்களே. எனினும் இந்தியாவின் வளங்களை ஆரம்பக் கல்விக்கும் உயர்கல்விக்கும் பயன் படுத்தி விட்டு தமது அறிவை வளப்படுத்திக் கொண்டுவிட்டு, மேலை நாடுகளில் பணியாற்றச் செல்லும் நம்மவர்களைப் பற்றிய புள்ளி விபரங்களைப் பகிர்ந்து கொள்வது நமக்குப் பெருமையாகவா இருக்கிறது?
அமெரிக்காவில் மட்டும் பணியாற்றும் நம் வல்லுனர்கள் இந்தியாவிலேயே சிலகாலம் பணியாற்றி இருந்திருந்தால் "2020 இல் வல்லரசு இந்தியா" என்ற இலக்கு இந்நேரம் நிறைவேறி இருக்குமே. இது போன்ற மெயில்களை சிலாகித்து பிறருக்கும் Forward செய்வதால் தாய்நாட்டை விட்டு அயல் நாடுகளில் பணியாற்றுவதே பெருமை என்ற தவறானக் கண்ணோட்டம், இன்றைய மாணவர்களின் மனதில் விதைக்கப்பட நாமும் காரணமாகி விடுவதை நினைவில் கொண்டு, தயவு செய்து இத்தகைய மடல்களை பிறருக்கு அனுப்பும் முன் சிந்திப்போமாக!
அரேபிய வளைகுடா நாடுகளிலும், கீழைத்தேசங்களிலும்தான் நம்மவர்கள் பணி புரிகிறார்களே, அவர்களைப் பற்றிச் சொல்லாமல் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களை மட்டும் குற்றம் சொல்வது நியாயமா என சிலர் தவறாக நினைக்கலாம். இத்தகைய நாடுகளில் பணியாற்றும் 90% க்கும் மேற்பட்டவர்கள் நம் நாட்டில் பணியாற்றினால் கிடைக்கும் சொற்ப சம்பளத்தைவிட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் கிடைக்கிறது; அதில் 90% சதவீதத்தை நம் நாட்டுக்கு அந்நியச் செலாவணிக் கையிருப்பை உயர்த்தி, பெட்ரோலியத் தேவையை ஈடுகட்ட உதவுகின்றனர்.
மேலும், வளைகுடா நாடுகளில் பணியாற்ற திறமையும் தகுதியுமற்ற, உள்நாட்டில் பணியாற்றக்கூட இலாயக்கற்றவர்களாகக் கருத்தப் பட்டவர்களாலும் சம்பாதித்து சாதிக்க முடியும். ஆனால் மேலை நாடுகளில் இந்தியாவில் இருக்கும் அறிவுஜீவிகளும், வல்லுனர்களயும் மட்டுமே இறக்குமதி செய்ய விரும்புகின்றனர்.
மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களில் பெரும்பாலோர் தங்கள் குடும்பம் சகிதமாக இருப்பதால் அவர்களின் வருவாயில் பெரும் பகுதி அந்த நாடுகளிலேயே செலவழிக்கப் பட்டுவிடுகிறது. இதன் மூலம் அவர்களின் அறிவை உறிஞ்சியதோடு வருமானத்தையும் தங்கள் நாடுகளிலேயே செலவழிக்க நிர்ப்பந்திக்கப் படுவதைக் கவனித்தால் என் ஆதங்கத்தில் காழ்ப்பு இல்லை என்பது விளங்கும்.
இந்தியாவின் வல்லரசுக் கனவு 2020 இலிருந்து 2010 என்ற நிலைக்கு முன்னெடுத்துச் செல்ல இப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் சுட்டுங்கள். இதுவே நட்சத்திரவாரப் பதிவின் மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள்.
இந்தியர் என்பதில் 'உண்மையில்' பெருமிதம் கொள்வோம்!!!